இருமுகன்... அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

அப்ரிலியா பிராண்டில் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கி வந்த இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம், தடாலடியாக ஒரு புதிய 150சிசி ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அப்ரிலியா எஸ்ஆர்150 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர் வழக்கமான மாடல்களிலிருந்து சற்றே வேறுபடுத்தும் அம்சங்களை கொண்டுள்ளது. இதனை மோட்டோஸ்கூட்டர் என்று குறிப்பிடுகிறது பியாஜியோ.

அதாவது, ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் என இருவிதமான பண்புகளை கொண்ட இருமுகனாக வந்திருக்கிறது அப்ரிலியா எஸ்ஆர்150. சமீபத்தில் இந்த புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது. எமது நிருபர் அஜிங்கியா இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து கொடுத்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

இதன் டிசைன் இளைய சமுதாயத்தினரை வெகுவாக கவரும். பைக் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டின் டிசைன் தாத்பரியங்களை கலந்து கட்டியது போல இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக இருக்கிறது.

முகப்பு டிசைன் மிகவும் கூர்மையாகவும், நச்சென்றும் இருக்கிறது. முகப்பில் நடுநாயகமாக ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் ஹேண்டில்பாரில் இல்லையென்ற குறை தெரியாத அளவுக்கு ஸ்கூட்டரின் அழகுக்கு இந்த ஹெட்லைட் அழகு சேர்க்கிறது.

இருக்கை அமைப்பு, கிராப் ரெயில் கைப்பிடிகள் தனித்துவமாக உள்ளன. ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் உள்ளது போன்ற இதன் வால்பகுதி கவர்ச்சியை உயர்த்துகிறது.

எல்லாவற்றையும் விட பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும், இரட்டை வண்ண இருக்கையும் கஸ்டமைஸ் செய்தது போன்ற உணர்வை தருகிறது. மொத்தத்தில் இளைய சமுதாயத்தினரின் ஏகோபித்த வரவேற்பை பெறும் அம்சங்கள் நிரம்ப உள்ளன.

இதன் பாகங்கள் மிகவும் உயர்தரம் மிக்கதாகவும், வெகு சிறப்பாகவும் பொருந்தியிருக்கிறது. எனவே, தரத்திலும், ஃபிட் அண்ட் ஃபினிஷிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

சிறிதும், பெரிதுமாக  இரண்டு வட்ட வடிவிலான அனலாக் டயல்களை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்துக்கள் பார்ப்பதற்கு தெளிவாகவும், ஓட்டும்போது எளிதாக பார்க்கும் வகையிலும் உள்ளன.

எஞ்சின்

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 154.4சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெஸ்பா ஸ்கூட்டரிலிருந்து பெறப்பட்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11.4 பிஎச்பி பவரையும், 11.5 என்எம் டார்க்கையும் வழங்கும்.

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிமீ வேகம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எமது டெஸ்ட் டிரைவின்போது நெடுஞ்சாலைகளில் இதன் அதிகபட்ச வேகத்தை எட்டுவதற்க இதன் எஞ்சின் ஒத்துழைக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. பிற ஸ்கூட்டர்களைவிட இதன் பெட்ரோல் டேங்க் கொள்திறன் அதிகம் என்பதால், அடிக்கடி பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் அசவுகரியத்தையும் குறைக்கும்.

குறைந்த நேரமே டெஸ்ட் டிரைவ் செய்ய வாய்ப்பு கிடைத்ததால், மைலேஜை சரியாக கணக்கிட இயலவில்லை. ஆனால், நடைமுறையில் லிட்டருக்கு 45 கிமீ முதல் 50 கிமீ மைலேஜ் வரும் தரும் என நம்பலாம்.

ஓட்டுதல் தரம்

ஐட்லிங்கில் நிற்கும்போது அதிக அதிர்வுகளை உணர முடிகிறது. ஆனால், வண்டியை ஓட்ட ஆரம்பித்ததும் இந்த அதிர்வு அதிகரிக்கும் என்று நினைத்தோம். ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில், வண்டி ஓடும்போது அதிர்வுகள் மிக குறைவாக தெரிந்தது.

அதேநேரத்தில், ஆரம்ப பிக்கப் எதிர்பார்த்தது போன்று இல்லை. நடுத்தர வேகத்தில் மிகச் சிறப்பான செயல்திறனை இதன் எஞ்சின் வழங்குகிறது. வெஸ்பா எஞ்சினாக இருந்தாலும், எஞ்சின் செயல்திறன் இதில் வேறு மாதிரி இருக்கிறது.

கையாளுமை

மிகச் சிறப்பான கையாளுமை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக கூற முடியும். ஆம், இதன் வலுவான சேஸி அமைப்பும், சஸ்பென்ஷனும் இணைந்து இந்த ஸ்கூட்டருக்கு சிறப்பான கையாளுமையை தருகின்றன. வளைவுகளிலும் நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது.

இதன் டயர்கள் மிகச் சிறப்பான தரை பிடிமானத்தை வழங்குகின்றன. இதன் பிரேக் சிஸ்டமும் எதிர்பார்ப்பைவிட சிறப்பாக இருந்தது. அதாவது, பைக் பிரேக் போன்ற உணர்வை தந்தது. மொத்தத்தில் ஒரு புது விதமான ஓட்டுதல் அனுபவத்தையும், உற்சாகமான பயணத்தையும் இந்த ஸ்கூட்டர் எமக்கு தந்தது.

சஸ்பென்ஷன்

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் 32மிமீ ஹைட்ராலிக் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு ஸ்கூட்டருக்க வெகு சிறப்பான கையாளுமையை வழங்குகிறது. ஆனால், சொகுசான பயணத்தை எதிர்பார்க்க முடியாது.

சக்கரங்கள்

புதிய அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரில் 14 இன்ச் அலாய் வீல்களும், ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. முன்புறத்தில் இரட்டை பிஸ்டனுடன் கூடிய 220மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் உள்ளன.

வண்ணங்கள்

மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு வண்ணம் மற்றும் வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது. இரண்டு வண்ணங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும் பாடி டீக்கெல்ஸ் எனப்படும் அலங்கார ஸ்டிக்கர்கள் கவரும் விதத்தில் உள்ளன.

பிடித்த விஷயங்கள்

  • இதன் டிசைன் மிகவும் கவர்ச்சியாகவும், தனித்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. 
  • டயர்கள் அகலமாகவும், அதிக பிடிமானத்தை தர வல்லதாக இருக்கின்றது.
  • பிரேக்குகளின் செயல்திறன் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.
  • அப்ரிலியா பிராண்டில் மிக குறைவான விலை கொண்ட மாடல்

பிடிக்காத விஷயங்கள்

 

  • எஞ்சினின் ஆரம்ப பிக்கப் ஏமாற்றத்தை தருகிறது
  • பொருட்கள் வைப்பதற்கான இடவசதி குறைவு
  • ஃபுட்போர்டு இடவசதியும் குறைவு

 

எமது அபிப்ராயம்

குறைகளைவிட நிறைகள் அதிகம். அசத்தலான டிசைன், குறைவான விலை, அப்ரிலியா பிராண்டுக்கான மதிப்பு போன்றவை இந்த ஸ்கூட்டரின் ப்ளஸ் பாயண்டுகள். இதற்காக, சில பிடிக்காத விஷயங்களை சமரசம் செய்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், இளைஞர்களுக்கு சிறந்த சாய்ஸ்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, October 7, 2016, 16:14 [IST]
English summary
Aprilia SR150 MotoScooter Review — Is it Worth Buying?. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos