புதிய ஹீரோ அச்சீவர் 150 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

100சிசி, 125சிசி ரக பைக்குகளை ஓட்டி பார்த்து சலித்தவர்கள் அடுத்து வாங்க விரும்புவது 150சிசி ரக பைக்குகள்தான். மேலும், செயல்திறன் மிக்க பட்ஜெட் விலை பைக்குகளை விரும்பும் இளைஞர்களுக்கும் இந்த 150சிசி பைக்குகள்தான் சரியான சாய்ஸ். பஜாஜ் பல்சர் 150 உள்ளிட்ட மாடல்களால் கடும் போட்டி நிறைந்த இந்த மார்க்கெட்டில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய அச்சீவர் 150 பைக்கை சமீபத்தில் ஹீரோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

கடந்த வாரம் டெல்லியில் நடந்த அறிமுக நிகழ்ச்சிக்கு மறுநாள் இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது. அப்போது கிடைத்த அனுபவங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பழைய அச்சீவர் 150 பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மூலமாக பொலிவு பெற்றிருக்கிறது. ஹெட்லைட் உடலுடன் சரியான வடிவத்தில் பொருந்தியிருப்பதால் பாந்தமாக இருக்கிறது.

மேலும், பக்கவாட்டில் பெட்ரோல் டேங்க் கம்பீரமாகவும், அதிலிருந்து புறப்பட்டு செல்லும் உடலமைப்பு டெயில் லைட் வரை நீள்வதால் நேர்த்தியாகவும், 100சிசி பைக்குகளை விட சற்று பெரிய பைக் மாடலாகவும் தோற்றமளிக்கிறது. கருப்பு நிற அலாய் வீல்களும், வால்பகுதியும் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கிறது.

புதிய ஹீரோ அச்சீவர் பைக்கின் மிக தொழில்நுட்ப அம்சமாக குறைந்த உராய்வுகள் கொண்ட பாரத் ஸ்டேஜ்-IV மாசுக் கட்டுப்பாட்டு அம்சத்திற்கு உகந்த எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 13.4பிஎச்பி பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

அதேநேரத்தில், 150சிசி செக்மென்ட்டின் அரசனாக விளங்கும் பல்சர் 150 பைக்கின் எஞ்சின் 14.85 பிஎச்பி பவரையும், 12.5 என்எம் டார்க்கையும் வழங்கும் என்பதையும் மனதில் வைக்க வேண்டியிருக்கிறது. இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக ஆற்றல் பின் சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது.

இந்த பைக்கின் மிக முக்கிய தொழில்நுட்ப அம்சங்களில் ஒன்று ஐ3எஸ் என்று ஹீரோ குறிப்பிடும் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம். ஆம், குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் பைக் நின்று கொண்டிருந்தால், எஞ்சின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். இதன் மூலம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

க்ளட்சை பிடித்தால் எஞ்சின் மீண்டும் ஸ்டார்ட் ஆகி விடும். இந்த செக்மென்ட்டில் இந்த வசதியுடன் வந்திருக்கும் முதல் பைக் மாடல் இதுதான். தேவையில்லாதபோது அணைத்து வைப்பதற்கான சுவிட்சும் உள்ளது. கார்களில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்த தொழில்நுட்பத்தை தனது பைக்குகளிலும் தொடர்ந்து கொடுத்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப்.

மேலும், டார்க் ஆன் டிமான்ட் என்ற புதிய தொழில்நுட்ப அம்சத்தையும் இந்த எஞ்சின் பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, குறைவான எஞ்சின் சுழல் வேகத்திலேயே அதிகபட்ச முறுக்கு விசையை சக்கரங்கள் பெற முடியும். எனவே, இதன் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது. மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தை மிக சர்வ சாதாரணமாக எட்டுகிறது.

இந்த வேகத்தில் மிக சொகுசான, அதிர்வுகள் குறைவான பயணத்தை வழங்குவதே இதன் மிக முக்கிய சிறப்பம்சமாக தெரிவிக்கலாம். குறைந்த தூரமே இந்த பைக்கை ஓட்ட வாய்ப்பு கிடைத்ததால், நடைமுறை மைலேஜை பெற இயலவில்லை. லிட்டருக்கு 50 முதல் 55 கிமீ வரை மைலேஜை எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில் 1.8 லிட்டர் ரிசர்வுடன் கூடிய 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

குறைந்த சிசி ரகம் கொண்ட சாதாரண வகை பைக்குகளில் சேஸீயின் அமைப்பும், குறைந்த அகலமுடைய டயர்களும் இருப்பதால், ஓட்டுதல் தரத்தை அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த பைக்கில் டிபியூலர் டைமன்ட் டைப் சேஸீயும், முன்புறத்திலும், பின்புறத்திலும் 80/100-18 டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், மிக சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு மூலமாக பள்ளம் மேடுகள் நிறைந்த சாலைகளில் கூட சொகுசான பயணத்தை பெற முடிகிறது.

டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் மாடல்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் டிஸ்க் பிரேக் மாடலை ஓட்டினோம். 240மிமீ டிஸ்க் கொண்ட இந்த பிரேக்கின் செயல்பாடு திருப்திகரமாகவே இருந்தது. எதிர்பார்த்த அளவு பிரேக்கிங் திறனை இதன் டிஸ்க் பிரேக் சிஸ்டம் வழங்குகிறது.

இதன் நீளமான இருக்கை அமைப்பு சவுகரியமாக அமர்ந்து செல்ல உதவுகிறது. இந்த பைக்கில் 5Ah திறன் கொண்ட 12V பேட்டரி உள்ளது. அதாவது, மெயின்டெனன்ஸ் ஃப்ரீ என்ற குறைவான பராமரிப்பு கொண்ட பேட்டரி வகை இது. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டும் இதன் முக்கிய அம்சமாக கூறலாம்.

எமது அபிப்ராயம்

அதிசெயல்திறன் மிக்க 150சிசி பைக் என்ற பட்டத்தை பெறுவதற்கு ஹீரோ மோட்டோகார்ப் முனையவில்லை. அதேசமயத்தில், மிக வலுவான தொழில்நுட்ப அம்சங்கள், வசதிகளுடன், போதிய செயல்திறன் மிக்க பட்ஜெட் விலை 150சிசி பைக்காக இதனை ஹீரோ நிலைநிறுத்தியிருக்கிறது.

இதனை 150சிசி ரக ஸ்பிளென்டராக கருதும் வகையில் மேம்படுத்தியிருக்கிறது. எனவே, தினசரி பயன்பாட்டிற்கு உகந்த 150சிசி பைக்கை விரும்புபவர்களுக்கு நிச்சயம் இது சரியான சாய்ஸ். அதேநேரத்தில், போட்டியாளர்களைவிட தோற்றத்தில் சற்றே பின்தங்குவதுதான் இதன் மைனஸ்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, October 1, 2016, 11:44 [IST]
English summary
Read in Tamil: Does the all-new Achiever have enough performance and utility elements to go head-to-head with the likes of the Bajaj Pulsar and Honda Unicorn? Let's find out.
Please Wait while comments are loading...

Latest Photos