புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

1994ம் ஆண்டு ஹீரோ- ஹோண்டா கூட்டணியில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பிளென்டர் பைக் இந்தியர்களின் மனம் கவர்ந்த மாடலாக வலம் வருகிறது. அவ்வப்போது ஸ்டிக்கர் மாற்றங்களுடன், அச்சு பிசகாத வகையில் ஸ்பிளென்டர் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹீரோ ஹோண்டா கூட்டணியிலிருந்து ஹோண்டா விலகியதையடுத்து, 2013ம் ஆண்டு பல புதிய மாடல்களை ஹீரோ வரிசைக் கட்டியது. அதில், கார்களில் இருப்பது போன்ற ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்ட 100சிசி ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் பைக்கும் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அதற்கு கிடைத்த வரவேற்பை கருதி, சமீபத்தில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த புதிய மாடலை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் டீமிற்கு ஹீரோ மோட்டோகார்ப் வழங்கியது. அப்போது, இந்த பைக் பற்றிய கிடைத்த சாதக, பாதக அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

100சிசி ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் பைக்கிலிருந்து சில டிசைன் மாற்றங்களை பெற்றிருக்கிறது புதிய ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110 பைக். புதிய ஹெட்லைட், டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், கவர்ச்சிகரமான புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். சைடு மிரர்கள் இரட்டை வண்ணக்கலவையுடன் அலங்கரிக்கின்றன.

பெட்ரோல் டேங்கிற்கு கீழே உள்ள கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் சைலென்சர்கள் கவர்ச்சியை கூட்டுகின்றன. சைலென்சரின் கடைசியில் சில்வர் வண்ண கப் அலங்கரிக்கிறது. ஏற்கனவே உள்ள ஐ- ஸ்மார்ட் மாடலைவிட மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

எஞ்சின்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 109.15சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 9.2பிஎச்பி பவரையும், 9என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இந்த எஞ்சின் இருக்கிறது. பாரத் ஸ்டேஜ்-4 மாசு அம்சம் கொண்டது. இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

ஸ்மூத் அனுபவம்

எதிர்பார்த்தது போலவே, குறைவான எஞ்சின் சுழல் வேகத்தில் எஞ்சின் அதிர்வுகள் மிக குறைவாக இருக்கிறது. அத்துடன், கியர் ஷிஃப்டும் மிக மென்மையாக இருக்கிறது. இது இந்த பைக்கின் முக்கிய சிறப்பு. எஞ்சினை அலறவிட்டால், இந்த ஸ்மூத்தை எதிர்பார்க்க முடியவில்லை.

மைலேஜ்

ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் மூலமாக கணிசமான அளவு எரிபொருள் சேமிப்பு கிடைக்கும் என்பது ஹீரோ மோட்டோகார்ப் சொல்லும் முக்கிய விஷயம். அதன்படி, இந்த பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் லிட்டருக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம். இந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை 7.45 வினாடிகளில் எட்டிவிடுகிறது.

ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் 110 பைக்கில் இருக்கும் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் மைலேஜை அதிகரிக்கும் ஒரு உபாயம். அதாவது, பைக்கை நியூட்ரல் கியரில் வைக்கும்போது 5 வினாடிகளில் எஞ்சின் தானாக அணைந்து விடுகிறது. மீண்டும் க்ளட்ச்சை பிடிக்கும்போது எஞ்சின் தானாக உயிர் பெற்றுவிடுகிறது. இந்த வசதியை தேவையில்லாதபோது அணைத்து வைக்க பிரத்யேக சுவிட்சும் உள்ளது.

சொகுசு

இந்த பைக்கின் சிறப்பான இருக்கை அமைப்பும், சஸ்பென்ஷனும் மிக சொகுசான பயண அனுபவத்தை தருகிறது. மேலும், எஞ்சின் அதிர்வுகள் குறைவாக இருப்பதும், ஸ்பிளென்டர் பிராண்டின் மகிமையை ஒவ்வொரு பயணத்தின்போதும் உணரலாம்.

கையாளுமை

கையாளுமையில் ஜோர் என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில், மிதமான வேகத்தில் மிகச்சிறப்பான கையாளுமையை வழங்குகிறது. இதன் பெட்ரோல் டேங்கும் தொடைகளுக்கு ஓரளவு சப்போர்ட்டை தருவதால், பாதுகாப்பான உணர்வை தருகிறது.

டிஸ்க் பிரேக் இல்லை

இதில் பொருத்தப்பட்டிருக்கும் டிரம் பிரேக்குகள் செயல்திறனை காட்டினாலும், டிஸ்க் பிரேக் இல்லாதது குறையே. டிஸ்க் பிரேக் பொருத்தியிருந்தால், நிச்சயம் வரவேற்கத்தக்க அம்சமாக இருந்திருக்கும்.

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட 18 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 80/100 சியட் டயர்கள், டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பு என சாதாரண வெகுஜன பைக் மாடலுக்கு தேவையான அம்சங்களை கொண்டுள்ளது. அனலாக், டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கவர்ச்சியாக இருக்கிறது. சைடு மிரர்கள் நல்ல பார்வை திறனை வழங்குவது இதற்கு சிறப்பு சேர்க்கும் அம்சம்.

 

 

சுவிட்ச் கியர்

சுவிட்சுகள் இயக்குவதற்கு எளிதாக உள்ளன. இடது கைப்பிடியில் ஹெட்லைட் சுவிட்ச், பாஸ் லைட் சுவிட்ச், இண்டிகேட்டர் சுவிட்சுகள் மற்றும் ஒலிப்பானுக்கான சுவிட்ச் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. வலது புறத்தில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் சுவிட்ச் மற்றும் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டத்திற்கான சுவிட்ச் இடம்பெற்றிருக்கிறது.

சாதகங்கள்

  • அதிர்வுகள் குறைவான எஞ்சின்
  • மென்மையான உணர்வதை தரும் கியர் ஷிஃப்ட்
  • கவர்ச்சியான டிசைன்
  • சொகுசான சவாரி
  • சஸ்பென்ஷன்

பாதகங்கள்

  • சுவிட்ச் மற்றும் பிளாஸ்டிக் தரம் சுமார்
  • நடுத்தர வேகத்தில் பிக்கப் மிக குறைவு
  • டிஸ்க் பிரேக் வசதி இல்லை

சிறந்த சாய்ஸ்

ரஜினி படமென்றால் சில விஷயங்களை எதிர்பார்த்து செல்வோம், கமல் படமென்றால் சில விஷயங்களை எதிர்பார்த்து செல்வோம். அதேபோன்று, ஹீரோ ஸ்பிளென்டர் பிராண்டின் மீதான எதிர்பார்ப்புகளுடன் செல்வோரை நிச்சயம் ஏமாற்றாது. பட்ஜெட் விலையில் புதிய பைக்கை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு சிறந்த சாய்ஸாக கூறலாம்.

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Wednesday, July 20, 2016, 17:25 [IST]
English summary
Hero Splendor iSmart 110 Road Test Review In Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK