கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை... எந்த சாலையிலும் ஓட்டுவதற்கு ஹிமாலயன்!

By Saravana

நாட்டின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு புதிய ரக மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, கான்டினென்டல் ஜிடி மூலமாக கஃபே ரேஸர் ரக மார்க்கெட்டில் நுழைந்த அந்த நிறுவனம் அடுத்ததாக, அட்வென்ச்சர் டூரர் எனப்படும் சாகச பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற ரகத்தில், ஹிமாலயன் என்ற பெயரில் புதிய மோட்டார்சைக்கிளை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆஃப்ரோடு மற்றும் சாகசப் பயண பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேராவலை உண்டு பண்ணியிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய விமர்சனத்தை தற்போது படிக்கலாம்.

ஏன் 'அட்வென்ச்சர் டூரர்'?

மோட்டார்சைக்கிள் பிரியர்களின் கனவாக கருதப்படும் இமயமலை சாகசப் பயணம் என்றவுடன் அவர்களது முதல் சாய்ஸ் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள்தான். சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த மாடலாகவே இருக்கின்றன. ஆனால், இமயமலைப் பயணத்தின்போது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் அதிக எடை, குறைவான மைலேஜ், குறைவான கிரவுண்ட் கிளிரயன்ஸ் போன்றவை நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

சிறப்பான மாடல்:

இமயமலை பயணத்திற்கு தனது பிராண்டு மோட்டார்சைக்கிளுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, தனது பிராண்டு விரும்பிகளுக்கு ஓர் சிறப்பான மோட்டார்சைக்கிள் மாடலை வழங்க வேண்டும் என்ற உந்துதலில் இந்த புதிய மாடலை உருவாக்கியிருக்கிறது. மேலும், ஆஃப்ரோடு மற்றும் நீண்ட தூர பயணங்கள் என இரண்டிற்கும் ஏற்ப இருப்பதால், பைக் பயண பிரியர்களையும், சாகசப் பிரியர்களையும் வெகுவாக ஈர்க்கும் வாய்ப்புள்ளது.

டிசைன்:

சாகச ரக மோட்டார்சைக்கிள்களுக்கு உள்ள டிசைன் தாத்பரியங்களை கொண்டிருந்தாலும், அதிலிருந்து வேறுபடுத்தும் சில அம்சங்களை கொண்டுள்ளது. வட்ட வடிவிலான ஹெட்லைட், அதி இடைவெளி கொண்ட மட்கார்டு, எளிதாக காலூன்றும் வகையில் தாழ்வான இருக்கை அமைப்பு, தொடைகளுக்கு சப்போர்ட் தரும் பெட்ரோல் டேங்க் அமைப்பு, அகலமாக கைப்பிடி சற்றே மேலே உயர்த்தப்பட்ட சைலென்சர், நீண்டு முடியும் வால் பகுதி ஆகியவை மூலமாக தன்னை ஒரு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என்பதை எளிதாக காட்டி விடுகிறது. அதாவது, ஆஃப்ரோடு சாகசங்களுக்கான அனைத்து டிசைன் அம்சங்களுடன் கவர்கிறது.

செயல்திறன்:

இந்த புதிய சாகச ரக மோட்டார்சைக்கிளில் எல்எஸ்400 ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஒற்றை சிலிண்டருடன் இயங்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சாகச ரக மோட்டார்சைக்கிளுக்கு இந்த பவர் போதாது என்பது பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பிற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் போன்றே மிகச்சிறப்பான டார்க்கை வழங்கும் என்பதால், ஆஃப்ரோடு பிரியர்களை சமாதானப்படுத்தும் என நம்பலாம்.

மைலேஜ்:

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மைலேஜ் குறைவாக தரும் என்ற பொதுவான கருத்தையும் இந்த மோட்டார்சைக்கிள் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் என தகவல்கள் தெரிவிப்பதும், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் நீண்ட தூர பயணங்களின்போது எரிபொருள் பிரச்னை இல்லாமல் பயணத்தை தொடர வகை செய்யும். அத்துடன், இமயமலை பயணம் செல்வோர்க்கு ஏதுவாக ஜெர்ரி கேன் எனப்படும் கூடுதல் பெட்ரோல் கேனை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பையும் ராயல் என்ஃபீல்டு வழங்க உள்ளது. ஆக மொத்தத்தில் இமயமலை சாகசப் பயணம் மேற்கொள்வோரை மனதில் வைத்தே இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகிறது.

கையாளுமை, ஓட்டுதல் தரம்...

இலகு எடை, உறுதிமிக்க ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் நிச்சயம் மிகச்சிறப்பான கையாளுமையை வழங்கும். அத்துடன் மிகுந்த நிலைத்தன்மை கொண்டதாகவும், ஓட்டுபவருக்கு நம்பிக்கையுடன் செலுத்தும் மாடலாக இருக்கும். கிரவுண்ட் கிளிரயன்ஸ் அதிகமிருந்தாலும், இருக்கை அமைப்பு சிறப்பான ஓட்டுதல் சுகத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

முன்புறத்தில் லாங் டிராவல் எனப்படும் அதிக இடைவெளியில் நகரும் அமைப்புடைய ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் அமைப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மோட்டார்சைக்கிள் கரடு முரடான சாலைகளை எளிதாக எதிர்கொள்ள உதவும். முன்புறத்தில் 21 இன்ச் ஸ்போக்ஸ் வீலும், பின்புறத்தில் 18 இன்ச் வீலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இது வழக்கமாக ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் வீல் அளவுதான்.

மீட்டர் கன்சோல்:

அனலாக் மற்றும் டிஜிட்டல் திரை என இரண்டையும் கொண்ட மீட்டர் கன்சோல் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் அளவு, திசைக்காட்டி, டாக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர் போன்ற வசதிகளை மீட்டர் கன்சோல் அமைப்பு கொண்டுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்கிலேயே, கூடுதலான ஜெர்ரி கேனையும் பொருத்துவதற்கு போல்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பணத்திற்கு மதிப்பு?

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பு இருக்கிறது. இமயமலைப் பயணங்களின்போது கரடுமுரடான சாலைகளை எளிதாக கடந்தாலும், நீர் வழித்தடங்களை கடக்கும்போது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் சற்று அச்சப்படுவதாக அமைந்து வந்தது. ஆனால், இந்த புதிய மோட்டார்சைக்கிளின் கிரவுண்ட் கிளிரயன்ஸ், இலகு எடை போன்றவை இனி நீர் வழித்தடங்கள் உள்பட அனைத்து கரடு முரடான பகுதிகளை எளிதாக கடக்கும் என்பதோடு, எரிபொருள் பிரச்னை இல்லாத பயண அனுபவத்தை வழங்கும் என நம்பலாம். அதேநேரத்தில், இதன் உயரமான கைப்பிடிகள் மீது சந்தேகம் எழுகிறது. இருப்பினும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மாடலாக இருக்கும் என்பதே எமது நம்பிக்கை.

வரவேற்பு பெறுமா?

"Purpose built" என்று கூறப்படும் குறிப்பிட்ட பயன்பாட்டை மட்டுமே இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால், பிற புல்லட்டுகள் போல விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரியதாக இருக்காது. ஆனால், குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தையும், இமயமலை சாகசப் பயண ஏற்பாட்டாளர்களுக்கும் சிறப்பான மாடலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan Review in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X