டட்சன் ரெடிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

By Saravana Rajan

இந்தியா போன்ற பட்ஜெட் விலை கார்களுக்கு முக்கியத்துவம் கொண்ட நாடுகளுக்காக ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது பழைய டட்சன் பிராண்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது. இந்த பிராண்டில் முதலாவதாக டட்சன் கோ என்ற ஹேட்ச்பேக் ரக காரையும், டட்சன் கோ ப்ளஸ் என்ற மினி எம்பிவி காரையும் விற்பனைக்கு விட்டது. அந்த இரு கார்களும் எதிர்பார்த்த அளவு எடுபடாத நிலையில், தற்போது ரூ.2.5 லட்சம் பட்ஜெட்டில் புதிய ரெடிகோ என்ற சிறிய ரக ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த காரை சமீபத்தில் கொல்கத்தாவில் வைத்து டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கார் உருவான அதே பிளாட்ஃபார்மில் உருவாகியிருக்கும் கார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த காரின் சாதக, பாதகங்கள் குறித்து கிடைத்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ரெனோ- நிசான் கூட்டணியின் பட்ஜெட் விலை கார்களுக்கான CMF-A பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரெனோ க்விட் பெற்ற வெற்றியை போன்று இந்த காரும் பெரிய வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் நிசான் இந்த காரை வரும் 1ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. ரெனோ க்விட் காருக்கு காத்திருப்பு காலம் நீண்டு கிடக்கும் நிலையில், மாற்றாக இந்த காரை யோசிக்கலாமா என்பதை இந்த காரின் சிறப்பம்சங்களையும், சாதக, பாதகங்களையும் வைத்து நீங்களே எளிதாக முடிவு செய்துகொள்ளலாம்.

டிசைன் யுக்தி

டிசைன் யுக்தி

ஆல்ட்டோ, இயான் போன்று இல்லாமல், ரெனோ க்விட் போன்று வழக்கமான டிசைன் அம்சங்களிலிருந்து வேறுபட்டால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நோக்கிலேயே, இந்த காரும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட குட்டி கார் மாடலாக உருவாக்க முனைந்துள்ளனர். அதற்காக, சில மாறுபட்ட சிறப்பம்சங்களை இந்த கார் கொண்டிருக்கிறது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

டட்சன் பிராண்டுகளுக்குரிய அறுகோண வடிவிலான தேன்கூடு வடிவிலான க்ரில் அமைப்பு, பெரிய ஹெட்லைட், வலுவாக தோற்றம் கொண்ட வீல் ஆர்ச்சுகள் மற்றும் பாடி லைன்கள் காரின் தோற்றத்தை வலுவானதாக காட்டுகிறது. இது அனைத்து வாடிக்கையாளர் மனதையும் கொள்ளை கொள்ளும் என்று கூற இயலாது. ரெனோ க்விட் அளவுக்கு அது நேர்த்தியானதாக இல்லை என்பது இதன் மைனஸ். ஆனால், க்விட்டை மறந்துவிட்டு மார்க்கெட் லீடரான ஆல்ட்டோ காருடன் ஒப்பிட்டு பார்த்தால், இந்த காரின் டிசைன் கம்பீரமாக இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

வெளிப்புறத்தில் கம்பீரமாக தெரியும் இந்த காரின் உட்புறம் மிகவும் டல்லடிக்கிறது. கவர்ச்சிகரமான விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ். அட்ஜெஸ்ட் வசதி இல்லாத ஏசி வென்ட், ஒழுங்கற்றதாக தெரியும் டேஷ்போர்டு அமைப்பு ஆகியவை முதல் பார்வையிலேயே உதட்டை பிதுக்க வைத்துவிடுகிறது. ஆனால், இது பட்ஜெட் கார் என்பதை நினைவூட்டிக் கொண்டு மனதை சமரசம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

இளம் வாடிக்கையாளர்கள்

இளம் வாடிக்கையாளர்கள்

இந்த காரின் உட்புற அமைப்பு, வசதிகள் நிச்சயமாக இந்த தலைமுறை வாடிக்கையாளர்களை சட்டென கவராது. ஆல்ட்டோ டிசைனுக்கு இது பரவாயில்லை என்பவர்கள் இந்த காரை தேர்வு செய்ய முனைவர் என்று கூறலாம். அதேநேரத்தில், ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார பொருட்களை டட்சன் நிறுவனம் இந்த காருக்கு வழங்க இருப்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசி சிஸ்டம்

ஏசி சிஸ்டம்

இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சங்களில் குளிர்சாதன வசதி மிக முக்கியமானது. ஆம், இதன் ஏசி சிஸ்டம் மிகச்சிறப்பாகவும், மிக விரைவாகவும் குளிர்ச்சியை வழங்குகிறது. சென்னை போன்று கோடை கால வெப்பத்தில் தகிக்கும் நகரங்களுக்கு இது நிச்சயம் சிறப்பானதாக இருக்கும்.

ஏசி வென்ட் அமைப்பு

ஏசி வென்ட் அமைப்பு

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இந்த காரில் டேஷ்போர்டில் நடுவில் இருக்கும் முக்கிய ஏசி வென்ட் அட்ஜெஸ்ட் வசதி இல்லை என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதற்கான காரணம், பின்புற இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் நல்ல குளிர்ச்சியை பெறும் வகையில் இந்த ஏசி வென்ட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் இருக்கை

ஓட்டுனர் இருக்கை

ஓட்டுனர் இருக்கை உயர்த்தப்பட்ட அமைப்பில் இருப்பதால், சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட ஏதுவாகிறது.

இடவசதி

இடவசதி

இந்த காரின் மிக முக்கிய பலம் உட்புறத்தில் இடவசதி. ஏ செக்மென்ட்டில் உள்ள சிறிய ரக கார்களில் சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. தலை இடிக்காத அளவு உயரமுடைய கூரை அமைப்பு மற்றும் 542மிமீ இடைவெளி கொண்ட கால் வைப்பதற்கான இடவசதி இதன் மிகப்பெரிய பலம். அலங்காரங்களை விரும்பாத வாடிக்கையாளர்களை டட்சன் ரெடி கோ காரின் இந்த இடவசதி நிச்சயம் கவரும்.

எஞ்சின்

எஞ்சின்

ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 3 சிலிண்டர்கள் கொண்ட 799சிசி பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் இருக்கிறது. அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், செயல்திறனில் க்விட்டைவிட ரெடி கோ மிகச்சிறப்பானதாக இருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

ரெனோ க்விட் காரைவிட டட்சன் ரெடி கோ கார் 25 கிலோ கெர்ப் எடை குறைவாக இருப்பதால், செயல்திறனில் ரெடிகோ சிறப்பாக இருக்கிறது. அதேபோல, 57 கிலோ எடை கொண்ட இந்த எஞ்சினின் எடைக்கு ஈடாக டார்க் திறனை வெளிக்கொணரும் வல்லமையும் உற்சாகத்தை தருகிறது.

மைலேஜ்

மைலேஜ்

நெடுஞ்சாலை, கரடுமுரடான சாலைகள், கொல்கத்தா நகரின் டிராஃபிக் ஜாம் நிறைந்த சாலைகளில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது, சராசரியாக லிட்டருக்கு 19 கிமீ மைலேஜை இந்த கார் தந்தது. இந்த காரில் 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

பிக்கப் சிறப்பு

பிக்கப் சிறப்பு

இலகு எடை விகிதம் கொண்டிருப்பதால், 72 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இதன் எஞ்சின் ஆரம்ப நிலையில் அலட்டிக் கொள்ளாமல் மிகச்சிறப்பான பிக்கப்பை தருகிறது. எனவே, நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கும்.

சிட்டி கார்

சிட்டி கார்

குறைவான வேகத்தில் ஸ்டீயரிங் வீல் மிக மென்மையாக இருப்பதும், டிராஃபிக் ஜாமில் ஓட்டும்போதும் சோர்வு தரவில்லை. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளைந்து, புகுந்து செல்வதற்கும், குறுகலான சாலைகளில் செல்வதற்கும் மிகச்சிறப்பாக இருக்கிறது.

கையாளுமை

கையாளுமை

சிறிய ரக கார்களில் மிகச்சிறப்பான கையாளுமையை கொண்டதாக இருக்கிறது. அதேநேரத்தில் 185மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த கார் இந்திய சாலை நிலைகளுக்கு மிக ஏற்றதாக இருந்தாலும், வளைவுகளில் திரும்பும்போது பாடி ரோல் தெரிகிறது. எனவே, வளைவுகளில் சற்று வேகத்தை குறைத்தே கட்டுப்படுத்த வேண்டும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன் சிறப்பானதாக இருக்கிறது. சிறப்பான கையாளுமையை வழங்குவதில் சஸ்பென்ஷனுக்கு முக்கிய பங்குண்டு. அதேநேரத்தில், பள்ளம் மேடுகளில் குலுங்கல்கள் சற்று அதிகம் இருக்கிறது.

 கவனிக்க...

கவனிக்க...

இந்த காரின் மைனஸாக கூற வேண்டியவைகளில் ஒன்று, பிரேக், ஆக்சிலரேட்டர் பெடல்களைவிட சற்றே உயர்த்தி அமைக்கப்பட்ட கிளட்ச் பெடல். இது உயரமான ஓட்டுனர்கள் காலை வளைத்துக் கொண்டு ஓட்ட வேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகலாம். சராசரி உயரம் கொண்டவர்கள் தொடர்ந்து ஓட்டும்போது இந்த பிரச்னை பழக்கத்தில் மறைந்துவிடும்.

 பிரேக் செயல்திறன்

பிரேக் செயல்திறன்

இந்த காரின் பிரேக் செயல்திறனும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் உள்ளது. இதன் பிரேக் பெடல் பஞ்சு போல மிக மென்மையான உணர்வை தருவது நம்பிக்கையை குறைக்கிறது.

பூட்ரூம்

பூட்ரூம்

இந்த காரில் 222 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் வசதி இருக்கிறது. ஷாப்பிங் செல்வதற்கும், சிறிய குடும்பத்தினருக்கும் ஏற்றதாக இருக்கும்.

சிறப்புகள்

சிறப்புகள்

  • கம்பீரமான டிசைன்
  • உயரமான டிரைவிங் பொசிஷன்
  • இலகுவான ஸ்டீயரிங் வீல்
  • சிறந்த பிக்கப்
  • அதிக ஹெட்ரூம்
  • பெரிய ஜன்னல்கள்
  • அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்
  • சிறப்பான டர்னிங் ரேடியஸ்
  • ஏசி சிஸ்டம்
  • வசதியான இருக்கைகள்
  • குறைகள்

    குறைகள்

    • சிறிய கிளவ்பாக்ஸ்
    • போதிய பாட்டில் ஹோல்டர்கள் இல்லை
    • ஒற்றை வைப்பர் சிஸ்டம்
    • பவர் விண்டோ சுவிட்சுகள் அமைவிடம்
    • உலோக பாகங்கள் தெரியும் வகையிலான கதவுகள், பில்லர்கள்
    • கவர்ச்சியற்ற இன்டீரியர்
    • மேடான சாலையில் ஏறும்போது போதிய சக்தியை வழங்காத எஞ்சின்
    • பாதுகாப்பு அம்சங்கள்
    • டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

      டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

      கம்பீரமான டிசைன், சிறப்பான மைலேஜ், இடவசதி போன்றவை இந்த காரின் வலுசேர்க்கும் அம்சங்களாக இருக்கும். ரூ.2.5 லட்சம் விலையில் இந்த காரை எதிர்பார்க்கலாம் என நிசான் தெரிவித்துள்ளது. இவை அனைத்தையும் வைத்து பார்த்தாலும் ரெனோ க்விட், மாருதி ஆல்ட்டோ கார்களைவிட சிறந்த சாய்ஸ் என்று கூற முடியாது. அதேநேரத்தில், மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் கார்களுக்கு மாற்றாக புத்தம் புதிய மாடலை விரும்புபவர்களுக்கும், ரெனோ க்விட் காரின் காத்திருப்பு காலத்தால் நொந்து போனவர்களுக்கும் இது சிறந்த மாற்றாக அமையும்.

      புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

      புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Most Read Articles
English summary
Datsun redi-GO Test Drive Report In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X