லெக்சஸ் ஆர்எக்ஸ் 450எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான சந்தை மிக வலுவாக இருப்பதை மனதில் கொண்டு டொயோட்டா நிறுவனம் தனது லெக்சஸ் சொகுசு கார்களை களமிறக்குவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே திட்டம் போட்டு வந்தது.

இதுகுறித்து அவ்வப்போது பரபரப்பான செய்திகளும், வதந்திகளும் எழுந்து அடங்கும். இந்த வதந்திகளை உண்மையாக்கும் விதமாக சமீபத்தில் டொயோட்டா கார் நிறுவனம் மூன்று லெக்சஸ் சொகுசு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மூன்று கார்களையும் சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் டீம் ஊட்டியில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தது. இதில், முதலாவதாக இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்ட ஆர்எக்ஸ் 450எச் சொகுசு காரின் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் காணலாம்.

லெக்சஸ் ஆர்எக்ஸ் 450எச் எஸ்யூவியானது ஹைப்ரிட் எரிநுட்பத்தில் இயங்கும் மாடல். இந்த செக்மென்ட்டில் வால்வோ எக்ஸ்சி90 மாடலுக்கு அடுத்து வந்திருக்கும் புதிய ஹைப்ரிட் கார் இதுதான். இந்த ஹைப்ரிட் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவுக்கு சரியான சாய்ஸாக இருக்குமா என்பதையும் தொடர்ந்து அலசி ஆராயலாம்.

டிசைன்

லெக்சஸ் கார்களுக்கே உரித்தான முகப்பு க்ரில் அமைப்பு மிக பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. அதற்கு தக்கவாறு மிக கூர்மையான ஹெட்லைட் டிசைன், பம்பர் டிசைன் காரின் தோற்றத்தை கம்பீரமாக காட்டுகிறது.

மேலும், க்ரோம் பட்டையுடன் கூடிய ஹனிகோம்ப் க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் ஆகியவையும் முகக்கிய சிறப்பம்சங்கள். மொத்தத்தில் பிற மாடல்களிலிருந்து தனித்து தெரிகிறது லெக்சஸ் ஆர்எக்ஸ் 450 எச் எஸ்யூவி.

பக்கவாட்டில் மிகவும் நளினமான பாடி லைன்களும், சீராக எழுந்து பின்னோக்கி சற்றே தாழ்ந்து சென்று முடியும் கூரை அமைப்பு காருக்கு அழகை தரும் விஷயம். பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகள், கம்பீரமான 18 இன்ச் அலாய் வீல் டிசைன், வித்தியாசமான சி பில்லர் போன்றவை பக்கவாட்டுக்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

பின்புறத்தில் டெயில் லைட்டுகள் மிகவும் சிறப்பான டிசைனை பெற்றிருக்கின்றன. சட்டென முடியாமல் சற்றே பின்பக்கம் துருத்தி நிற்கும் பூட் ரூம் டிசைனும் முத்தாய்ப்பான விஷயமாக இறுக்கிறது. இந்த காரில் 453 லிட்டர் கொள்ளளவு உடைய பூட் ரூம் இருக்கிறது. சென்சார் மூலமாக பூட் ரூம் அருகில் சென்றாலே தானாக திறந்து கொள்ளும் வசதியும் உண்டு.

இன்டீரியர்

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த லெக்சஸ் ஆர்எக்ஸ் 450எச் காரின் எஃப்- ஸ்போர்ட் வேரியண்ட்டில் சிவப்பு வண்ண லெதர் இருக்கைகள் மற்றும் அலங்காரம் உட்புறத்தை ஆக்கிரமித்திருந்தது. இதுதவிர, அலுமினியம் மற்றும் மர தகடுகளுடன் அலங்கார வேலைப்பாடுகளும் கவரும் அம்சங்கள்.

முன்புற இருக்கைகள் மிகவும் தாராள இடவசதியுடன், அமர்ந்து செல்வதற்கு மிக சொகுசாக இருந்தன. இந்த இருக்கைகளை 10 விதங்களில் அமர்வதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியும். மேலும், குளிர்ச்சியாகவும், வெதுவெதுப்பாகவும் இருக்கும் வசதியும் இந்த இருக்கைகளில் உண்டு.

மிக தாழ்வாக அமைக்கப்பட்டு இருக்கும் டேஷ்போர்டு அமைப்பு, சாலையை தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. டேஷ்போர்டின் நடுநாயகமாக 12.3 இன்ச் திரையுடன் கூடிய பிரம்மாண்டமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ரிமோட் டச் இன்டர்ஃபேஸ் என்ற ஜாய் ஸ்டிக் போன்ற கட்டுப்பாட்டு சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கம்ப்யூட்டர் மவுஸ் போன்று இதனை எளிதாக இயக்க வாய்ப்பாக இருக்கிறது. இந்த காரில் 15 ஸ்பீக்கர்களுடன் கூடிய மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் உயர்தரமான ஒலி தரத்தில் பாடல்களை கேட்க உதவுகிறது.

பின்புற இருக்கைகளும் மிகச் சிறப்பாகவும், வசதியாகவும் இருக்கிறது. சாய்மான வசதியுடன் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில், இது க்ராஸ்ஓவர் மாடல் என்பதை காட்டும் விதத்தில், பின்புற இருக்கைகளில் சற்று உயரமானவர்கள் அமர்ந்தால் தலை இடிக்கிறது.

இந்த காரின் உட்புறத்தில் அதிர்வுகளும், சப்தமும் மிகவும் குறைவாக இருப்பதும் சிறப்பு. அந்தளவுக்கு சப்த தடுப்பு கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் கூரையில் பனோரோமிக் சன் ரூஃப் இருப்பதும் கூடுதல் சிறப்பு.

இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைவில்லை. ஓட்டுனர், முன் இருக்கை பயணி, பின்புற பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் விதத்தில் உட்புறம் முழுவதம் 10 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மல்டி டெர்ரெய்ன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல்,பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் இருக்கின்றன.

எஞ்சின்

இந்த காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுக்கு துணையாக இரண்டு மின் மோட்டார்களும் இயங்குகின்றன. பெட்ரோல் எஞ்சினும், மின் மோட்டார்களும் இணைந்து செயல்படும்போது, அதிகபட்சமாக 308 பிஎச்பி பவரையும், 335 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

எஞ்சின் ஆற்றல் இ-சிவிடி கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது. இந்த காரில் ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் என 4 விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆரம்ப நிலையில் மின் மோட்டார்களில் கார் இயக்கப்படுகிறது. இதனால், ஆரம்ப வேகத்தில் சற்று மந்தமாக இருக்கிறது. பின்னர் இந்த காரில் இருக்கும் இரட்டை டர்போ சார்ஜர் பொருத்தப்பட்ட வி6 பெட்ரோல் எஞ்சின் தனது சாகசத்தை காட்டுவதற்கு தயாராகிவிடுகிறது.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறனுடன் ஓட்டுபவரை சிலிர்க்க வைக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார்கள் பிரேக் பிடிக்கும்போது ஜெனரேட்டர் போன்று செயல்பட்டு, பேட்டரியை சார்ஜ் செய்கின்றன.

நெடுஞ்சாலையில் ஹைப்ரிட் காருக்கு உரிய செயல் திறனுடன் மிகச் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக, ஸ்போர்ட் ப்ளஸ் மோடில் வைத்து ஓட்டும்போது சஸ்பென்ஷன் சற்று விரைப்பாகிவிடுவதால், வளைவுகளில் பாடி ரோல் குறைவாகிறது. இதனால், நம்பிக்கையுடன் அதிவேகத்தில் வளைவுகளை கடக்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

சிறப்பான டிசைன், பாதுகாப்பு வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின், சொகுசு வசதிகள் என அனைத்து விதத்திலும் இந்த கார் எல்லோரையும் கவரும். அதேநேரத்தில், விலை என்று வரும்போதுதான் வாடிக்கையாளர்கள் சற்று தயங்க வைக்கிறது.

ரூ.1.07 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை என்பதுதான் வாடிக்கையாளர்களுக்கு சற்று தயக்கம் தரும் விஷயம். இந்த கார் பிஎம்டபிள்யூ எக்ஸ்6, ஜாகுவார் எஃப் பேஸ், போர்ஷே மசான் உள்ளிட்ட மாடல்களைவிட அதிக எரிபொருள் சிக்கனம், குறைந்த கார்பன் வெளியிடும் தன்மை ஆகியவற்றில் முன்னிலை பெறுகிறது. போட்டி மாடல்களை டிசைனில் ஒரு கை பார்க்கிறது லெக்சஸ் ஆர்எக்ஸ் 450எச் கார்.

English summary
So, despite its price tag, does the RX450h have what it takes to take on its German rivals and Volvo (the XC90 is the only other hybrid in the segment)? Is the new Lexus RX450h the perfect hybrid SUV for India or is it another utility vehicle that's trying to be green.
Please Wait while comments are loading...

Latest Photos