மாருதி ஸ்விஃப்ட் Vs மாருதி பலேனோ: இரண்டில் எதை வாங்குவது புத்திசாலித்தனம்?

By Saravana

இந்தியாவின் மிகவும் விருப்பமான ஹேட்ச்பேக் கார் மாடல் மாருதி ஸ்விஃப்ட். இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது மாருதி. டிசைன், வசதிகள், மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ், கையாளுமை மற்றும் விலை என அனைத்திலும் கில்லி.

இந்த நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஃபியட் புன்ட்டோ போன்ற பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான அம்சங்கள் பொருந்திய மாடலாக மாருதி பலேனோ காரை மாருதி களமிறக்கியது. வெவ்வேறு விருப்பங்களை கொண்ட வாடிக்கையாளர்களை கருதி அறிமுகம் செய்யப்பட்டாலும், இரண்டு கார்களையும் தேர்வு செய்வதில் பல வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

புதிய கார் வாங்குவோரின் அனைத்து எதிர்பார்ப்புகள், தேவைகளையும் பூர்த்தி செய்வதில் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ என இரண்டு கார்களுமே மிகச்சிறப்பானதாக இருந்தாலும், இறுதி முடிவு எடுக்கும்போது இந்த இரண்டில் எதை வாங்குவது என்ற குழப்பம் பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதத்தில் சில முக்கிய அம்சங்களை வைத்து இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

டிசைன் ஒப்பீடு:

ஸ்விஃப்ட் பலேனோ

மாருதி ஸ்விஃப்ட் காரின் துறுதுறுப்பான டிசைன் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த ஒன்று. குறிப்பாக, இளைய சமுதாய வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மற்றொரு புறத்தில் மாருதி பலேனோ கார் மிக நவீன டிசைன் அம்சங்களை தாங்கி வசீகரிக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காருடன் ஒப்பிடும்போது அளவில் பெரிதாகவும், சற்று பந்தாவாகவும் இருக்கிறது பலேனோ. தாழ்வான கூரை அமைப்பு, பெரிய வீல்கள் போன்றவை மிக சிறப்பான கவர்ச்சியை தருகிறது. ஸ்விஃப்ட் டிசைனுக்கு நானும் ரசிகன்தான் என்றாலும், இப்போது கவனம் பலேனோ டிசைன் பக்கம்தான் குடை சாய்கிறது. அந்தளவுக்கு ஸ்விஃப்ட் காரை மூலை முடுக்குகளெல்லாம் பார்த்து சலித்து போய்விட்டதும் காரணம்.

எஞ்சின்:

மாருதி பலேனோ எஞ்சின்

மாருதி ஸ்விஃப்ட் காரில் 85 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின்கள் இரண்டுமே வாடிக்கையாளர்களிடம் அதிக நம்பகத்தன்மையை பெற்றவை.

இதே எஞ்சின்கள்தான் மாருதி பலேனோ காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, எஞ்சினை வைத்து ஒப்பிட தேவையில்லை. அதேநேரத்தில், மாருதி பலேனோ கார் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

இடவசதி:

இடவசதி

மாருதி ஸ்விஃப்ட் தயாரிக்கப்பட்ட அதே கட்டமைப்பில்தான் மாருதி பலேனோ காரும் உருவாக்கப்பட்டது. ஆனால், ஸ்விஃப்ட் காரைவிட 30 மிமீ உயரத்திலும், வீல் பேஸில் 90 மிமீ நீளமாகவும் இருக்கிறது மாருதி பலேனோ. இதனால், உட்புறத்தில் மிக தாராள இடவசதியை அளிக்கிறது மாருதி பலேனோ. மாருதி ஸ்விஃப்ட் காரின் பின் இருக்கை சற்று நெருக்கடியானதுதான்.

முக்கிய அம்சங்கள்:

இன்டீரியர்

ஸ்விஃப்ட்டில் இல்லாத சில நவீனத்துவமான சிறப்பம்சங்கள் மாருதி பலேனோவில் உண்டு. புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆப்பிள் கார் பிளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் ஆகியவை மிக முக்கியமானவை. அத்துடன், ஸ்விஃப்ட் கார் 15 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாருதி பலேனோ காரில் 16 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது காரின் கம்பீரத்தை வெகுவாக கூட்டுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:

பாதுகாப்பு

மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. ஆனால், இந்த வசதிகள் மாருதி பலேனோவின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இருப்பதோடு, கூடுதலாக ரிவர்ஸ் கேமராவும் உள்ளது.

மைலேஜ்:

மைலேஜ்

ஸ்விஃப்ட் காரைவிட பெரிதாக தெரிந்தாலும், 75 கிலோ எடை குறைவாக இருக்கிறது மாருதி பலேனோ. இதனால், பெட்ரோல், டீசல் மாடல்கள் 8 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கிறது மாருதி பலேனோ கார்.

பூட் ரூம்:

பூட்ரூம்

மாருதி ஸ்விஃப்ட் காரில் 204 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் உள்ளது. ஆனால், மாருதி பலேனோ காரில் 334 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் உள்ளது. இந்த செக்மென்ட்டிலேயே சிறப்பான பூட் ரூம் இடவசதி கொண்ட கார் மாடல் மாருதி பலேனோ.

விலை ஒப்பீடு:

மாருதி ஸ்விஃப்ட் கார் ரூ.5.58 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது. மாருதி பலேனோ கார் ரூ.6.05 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

தீர்ப்பு:

கவர்ச்சியான டிசைன், குறைந்த பராமரிப்பு, போதிய வசதிகள், பலேனோவைவிட குறைவான விலை போன்றவை மாருதி ஸ்விஃப்ட் காருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள். ஆனால், கார் வாங்குவது என்பது பலருக்கும் ஆயுட்கால முதலீடாக இருக்கும் பட்சத்தில், ஸ்விஃப்ட்டை விட சற்றே கூடுதலான பட்ஜெட்டில் கிடைக்கும் மாருதி பலேனோ நிச்சயம் சிறப்பான தேர்வாக அமையும்.

வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், டிசைன், பிரிமியம் அந்தஸ்து போன்ற அனைத்திலும் சிறப்பான தேர்வாக மாருதி பலேனோ அமையும். மாதத் தவணையில் கூடுதலாக ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கூடுதலாக செலுத்த வலு இருந்தால் மாருதி பலேனோவை வாங்குவதே புத்திசாலித்தனமாக அமையும்.

Most Read Articles
English summary
Maruti Baleno Vs Maruti Swift: Comparison.
Story first published: Friday, June 3, 2016, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X