ரெனோ க்விட் ஏஎம்டி Vs மாருதி வேகன் ஆர் ஏஎம்டி: ஒப்பீடு!

மாருதி வேகன் ஆர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் சிறப்பம்சங்கள், விரைவில் விற்பனைக்கு வரும் ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடலின் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து வழங்கியிருக்கிறோம்.

Written By:

இந்தியாவின் சிறிய கார் மார்க்கெட்டில் மிகவும் ஸ்திரமான விற்பனையுடன் ஆதிக்கம் செலுத்தி வரும் மாடல் மாருதி வேகன் ஆர். சரியான பட்ஜெட்டில் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மாருதி வேகன் ஆர் கார் பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியுடன் மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு வந்தது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், மார்க்கெட்டில் புதிய பிளாக் பஸ்டர் கார் மாடலாக வலம் வரும் ரெனோ க்விட் கார் தற்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இந்த இரு மாடல்களில் எது சிறப்பானது என்பதை அலசும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

வடிவம்

மாருதி வேகன் ஆர் காரைவிட ரெனோ க்விட் கார் நீளத்தில் 80மிமீ வரையிலும், அகலத்தில் 84மிமீ வரையிலும், வீல் பேஸ் 22மிமீ கூடுதலாகவும் உள்ளது. மேலும், ரெனோ க்விட் காரின் கிரவுன்ட் க்ளியரன்ஸ் என்பது 15 மிமீ வரை கூடுதலாக இருக்கிறது. இதனால், மேடுபள்ளமான சாலைகளில் கூட ரெனோ க்விட் கார் சிறப்பாக இருக்கும். உயரத்தில் மட்டும் 22மிமீ குறைவு. 

டிசைன்

மாருதி வேகன் ஆர் கார் சிறந்த பேக்கேஜ் கொண்ட மாடல். ஆனால், டிசைன் என்று வரும்போது ரெனோ க்விட் கார் நம்மை ஈர்த்துவிடுகிறது. அட்டைப் பெட்டி போன்ற தோற்றத்தை கொண்ட வேகன் ஆர் காரைவிட க்ராஸ்ஓவர் ஸ்டைலிலான ரெனோ க்விட் கார் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது. மாருதி வேகன் ஆர் காரின் டிசைன் எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் இல்லை.

இடவசதி

மாருதி வேகன் ஆர் காருடன் ஒப்பிடும்போது, ரெனோ க்விட் காரின் கேபின் இடவசதி சற்று தேவலாம். சராசரி பருமன் மற்றும் உயரம் கொண்டவர்களுக்கு கால் வைப்பதற்கும், கூரை இடிக்காத அளவுக்கு போதுமான இடவசதி இருக்கிறது. பின் இருக்கையில் இரண்டு பேர் வசதியாக பயணிக்கலாம். மூன்று பேர் வரை அட்ஜெஸ்ட் செய்து செல்ல முடியும்.

மறுபுறத்தில் மாருதி வேகன் கார் அதிக உயரம் கொண்டதாக இருப்பதால், வளத்தியானவர்கள் கூட சிரமம் இல்லாமல் அமர்ந்து செல்ல முடியும். ஆனால், பின் இருக்கையில் மூன்றாவது நபர் அமர்ந்தால் மிகுந்த நெருக்கடியாக இருக்கும். இந்த சிறிய வகை கார்களில் பெரிய அளவில் இடவசதியை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ரெனோ க்விட் பரவாயில்லை.

இன்டீரியர்

மாருதி வேகன் ஆர் கார் பீஜ் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் கொண்டது. அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் உள்ளது. இதனால், ரெனோ க்விட் காரைவிட சற்று பிரிமியமான உணர்வை தரும். ஆனால், மாடர்ன் வசதிகள் கொண்ட ரெனோ க்விட் காரின் இன்டீரியர் அமைப்பு மாருதி வேகன் ஆர் காரை எளிதில் மறக்க செய்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாட்டிலைட் நேவிகேஷன் வசதி போன்றவை ரெனோ க்விட் காரை முன்னிறுத்துகின்றன.

எஞ்சின்

ரெனோ க்விட் காரில் இருக்கும் 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சினும் கிட்டத்தட்ட இதே சக்தியையும், டார்க்கையும் வேறு ஆர்பிஎம்.,மில் வழங்குகிறது. இரண்டிலும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

கியர்நாப்

மாருதி ஆல்ட்டோ காரின் ஏஎம்டி மாடலில் வழக்கமான கியர் லிவர் அமைப்பு உள்ளது. ஆனால், ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடலில் இதுவரை எந்த காரிலும் காண முடியாத வகையில், சென்டர் கன்சோல் கீழ்புறத்தில் திருகு அமைப்பு மூலமாக எளிதாக கியரை மாற்றும் வசதி உள்ளது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதுடன், கியர் லிவர் இல்லாததால், பொருட்கள் வைத்துக் கொள்வதற்கான இடவசதியை அளிக்கும்.

மைலேஜ்

மாருதி வேகன் ஆர் கார் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், ரெனோ க்விட் கார் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் மாருதி வேகன் ஆர் கார் சராசரியாக லிட்டருக்கு 16 முதல் 18 கிமீ மைலேஜ் வரையிலும், ரெனோ க்விட் கார் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜுக்கும் குறையாமலும் இருக்கும்.

சேமிப்பு

எனவே, மைலேஜிலும் வேகன் ஆர் காரை எளிதாக வீழ்த்துகிறது ரெனோ க்விட் கார். மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு எரிபொருள் செலவை கணக்கிடும்போது, ரெனோ க்விட் கார் மூலமாக அதிகப்படியான சேமிப்பை பெற முடியும்.

பூட் ரூம் இடவசதி

மாருதி வேகன் ஆர் காரில் 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. ஆனால், ரெனோ க்விட் கார் உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிப்பதுடன், 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதியை பெற்றிருக்கிறது. அதாவது, மாருதி வேகன் ஆர் காரைவிட மிக அதிக கொள்திறன் வசதியை பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு

மாருதி வேகன் ஆர் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை ஆப்ஷனலாக கிடைக்கிறது. ஆனால், ரெனோ க்விட் காரில் டிரைவருக்கான ஏர்பேக் மட்டுமே ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது என்பது பெரிய குறை.

மதிப்பு

விற்பனைக்கு பிந்தைய சேவை, நம்பகத்தன்மை போன்றவற்றில் மாருதி வேகன் ஆர் கார் இந்தியர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றிருக்கின்றன. மறுபுறத்தில் ரெனோ நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய சேவை, சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

விலை ஒப்பீடு

மாருதி வேகன் ஆர் ஏஎம்டி கார் ரூ.5.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடல் ரூ.4.30 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

எது பெஸ்ட்?

நம்பகத்தன்மை, விற்பனைக்கு பிந்தைய சேவையில் மாருதி வேகன் ஆர் கார் முன்னிலை பெறுகிறது. டிசைன், இடவசதி, மைலேஜ், வசதிகள், விலை என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தருவதில் ரெனோ க்விட் கார் முன்னிலை பெறுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The specification comparison of the Renault Kwid AMT vs Maruti Wagon R AMT provides insights on design, engine specification and gearbox, features, safety, mileage, pricing and the important verdict.
Please Wait while comments are loading...

Latest Photos