டாடா ஹெக்ஸா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹைதராபாத்தில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் புதிய டாடா ஹெக்ஸா காரை டிரைவ்ஸ்பார்க் டீம் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த காரின் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Written By:

1991ம் ஆண்டு டாடா சியாரா எஸ்யூவியுடன் பயணிகள் வாகன மார்க்கெட்டில் நுழைந்த டாடா மோட்டார்ஸ், முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சஃபாரி எஸ்யூவியுடன் வாடிக்கையாளர்களை தன் பால் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து, யுட்டிலிட்டி ரக பயணிகள் வாகன சந்தையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஹெக்ஸா என்ற புதிய கிராஸ்ஓவர் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் வரும் இந்த புதிய காரை கடந்த 18 மற்றும் 19 தேதிகளில் ஹைதராபாத்தில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது கிடைத்த அனுபவங்களையும், இந்த புதிய காரின் சாதக, பாதகங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

புதிய டாடா கார்கள் டிசைனில் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்த புதிய டாடா ஹெக்ஸா காரும் கவர்ச்சிகரமான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரின் முக அமைப்பும், பானட்டும் மிக கம்பீரமாக எஸ்யூவி ரக வாகனம் போன்று காட்சி தருகிறது.

பானட்டுக்கு கீழே வலிமையான க்ரில் அமைப்பு உள்ளது. க்ரில்லுக்கு கீழ் பகுதியில் க்ரோம் பட்டை ஒன்று புன்முருவல் பூத்தது போன்ற தோற்றத்தை தருகிறது. க்ரில்லின் இருபக்கத்திலும் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கவர்ச்சியூட்டுகின்றன.

மிக வலிமையான தோற்றத்திலான முன்புற பம்பர் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகளுக்கு கீழாக கச்சிதமாக தோன்றும் பனிவிளக்குகள் ஹெக்ஸாவுக்கு சிறப்பு சேர்க்கின்றன. பக்கவாட்டில் பெல்ட் லைனுக்கு மேலாக ஜன்னலை ஒட்டி க்ரோம் சட்டம் நீளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. டி பில்லரின் மேல் பகுதியில் கூரையை மடித்துவிட்டது போன்ற அமைப்பு கவர்கிறது.

எஸ்யூவி வாகனத்துக்குரிய அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பிரம்மாண்டமான 19 இன்ச் வீல்கள் வலிமையான தோற்றத்தை தருகின்றன. ரூஃப்ரெயில்களும் எஸ்யூவி ரகம் என்பதை காட்டும் அம்சமாக உள்ளது. ஆரியா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருப்பதும், பக்கவாட்டில் சற்று ஆரியா கார் சாயல் இருப்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

டாடா ஹெக்ஸா காரின் பின்புற டிசைன் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அழகாக செதுக்கப்பட்ட டெயில் லைட்டுகள், அதனை இணைக்கும் பெரிய க்ரோம் சட்டம், இரட்டை புகைப்போக்கிகள், ஸ்கிட் பிளேட் ஆகியவை பின்புறத்தை மிக கவர்ச்சியாக காட்டும் அம்சங்கள்.

மொத்தத்தில், ஆரியா காரின் அடிப்படையிலான கார் என்பதை மறைக்க டாடா டிசைனர்கள் ரொம்பவே மெனக்கெட்டுள்ளனர். அதற்கு பலனும் கிட்டியிருக்கிறது. ஆம், தோற்றத்தில் கவர்ச்சிகரமாகவே இருக்கிறது டாடா ஹெக்ஸா.

உட்புற வடிவமைப்பு

வெளிப்புறத்தில் க்ரோம் அலங்காரம் தூக்கலாக இருப்பதால் சற்று பிரிமியம் மாடலாக தெரிகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதத்தில், உட்புறத்திலும் மிகச் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. கருப்பு வண்ணத்திலான இருக்கை, டேஷ்போர்டு ஆகியவை இதனை மிகவும் பிரிமியம் மாடலாக காட்டுகிறது. இருக்கைகளில் இரட்டை தையல் வேலைப்பாடுகளுடன் கவர்கிறது.

சென்டர் கன்சோலில் 5 இன்ச் அளவுடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோலில் இருக்கும் கட்டுப்பாட்டுகளும், சுவிட்சுகளும் ஓட்டுனர் எளிதாக இயக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கும் தெளிவாக இருக்கின்றன.

இந்த காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கனெக்ட்நெக்ஸ்ட் சாட்நவ் சிஸ்டம் உள்ளது. இந்த காரில் 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மிக சிறப்பான ஒலிதரத்தையும், துல்லியத்தையும் வழங்குகிறது. இதனை ட்யூனிங் செய்வதற்கு 1,000 மணிநேரம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து இந்த காரில் மிக முக்கிய விஷயம் மூட் லைட்டிங் எனப்படும் விரும்பிய வண்ணங்களில் மெல்லிய ஒளியை வழங்கும் விளக்கொளி அமைப்பு. 8 விதமான வண்ண ஒளியை வழங்கும் இந்த சிஸ்டத்தை ஸ்மார்ட்போன் மூலமாகவே கட்டுப்படுத்தலாம்.

இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனி ஏசி வென்ட்டுகள் உள்ளது மிக முக்கிய சிறப்பு.

ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடனேயே இது ஒரு எஸ்யூவி ரக காராக மனதில் பட்டது. அதாவது, ஓட்டுனர் இருக்கை அமைப்பு மிகுந்த சவுகரியமாகவும், வெளிப்புறத்தை சிறப்பாக பார்த்து ஓட்டுவதற்குமாக நன்றாக உள்ளது. பின்னால் வரும் வாகனங்களை மிக துல்லியமாக காட்டுகின்றன சைடு வியூ மிரர்கள். மேலும், ரியர் வியூ கேமராவும் உள்ளது.

முதல் வரிசை இருக்கை போன்றே, இரண்டாவது வரிசை இருக்கையும் போதிய இடவசதியை கொண்டுள்ளன. தலை மற்றும் கால்களுக்கு போதிய இடவசதி உள்ளது. இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால், நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

மூன்றாவது வரிசையில் பெஞ்ச் இருக்கை அமைப்பு. ஆனால், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் என்பதுடன், கால் வைப்பதற்கான லெக்ரூம் மிக குறைவாக தெரிகிறது. இதனால், நெருக்கடியாக இருக்கிறது. மிக நீண்ட கேபின் அமைப்பு கொண்ட காராக இருந்தும், மூன்றாவது வரிசை நெருக்கடியாக இருந்தது ஏமாற்றம்.

கதவுகள் போதிய அளவு திறப்பதும், ஏறி, இறங்குவதற்கு போதுமானதாகவே கருதலாம். இந்த காரில் 6 பேர் செல்வதற்கான இருக்கைகள் உள்ள நிலையில், பொருட்கள் வைப்பதற்கான இடவதியும் குறைவாகவே இருக்கிறது.

இதுபோன்ற 6 சீட்டர் யுட்டிலிட்டி ரக வாகனத்தில் ரொம்பவே எதிர்பார்க்க முடியாது என்றாலும், சற்று ஏமாற்றம்தான். ஆனால், மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் கூடுதல் இடவசதியை பெறலாம்.

 

மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சீரான வேகத்தில் காரை இயக்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகளும் டாடா ஹெக்ஸாவை பிரிமியம் கார் மாடலாக தரம் உயர்த்தும் அம்சங்கள். இரவு நேரத்தில் காரை நிறுத்தும்போது, சிறிது நேரம் ஒளிரும் ஹெட்லைட்டுகளை ரிமோட் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

 

டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் வருகிறது. ஆஃப் ரோடு விஷயங்களுக்கு ஏதுவாக, மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உண்டு.

இந்த காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் எஞ்சின் செயல்திறனை கம்போர்ட், டைனமிக், ரஃப்ரோடு மற்றும் ஆட்டோ என்று 4 விதங்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மோடிலிருந்து மற்றொரு மோடிற்கு மிக எளிதாக மாற்றும் வகையில் ரோட்டரி நாப் எனப்படும் திருகு அமைப்பு சென்டர் கன்சோலுக்கு கீழாக இடம்பெற்றிருக்கிறது. ரஃப்ரோடு ஆப்ஷனை தேர்வு செய்தால், கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதால், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக மாறிவிடும்.

அடுத்து இந்த காரை ஓட்டிய அனுபவத்தை பார்க்கலாம். டாடா ஹெக்ஸா காரின் மேனுவல் மற்றும் ஆட்டோடமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு மாடல்களையுமே டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

அதில், டாடா ஹெக்ஸா காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலின் ஓட்டுதல் சுகம், மிகவும் செம்மையான அனுபவத்தை வழங்கியது. போக்குவரத்து மிகுந்த நகர்ப்புறத்திலாகட்டும், நெடுஞ்சாலைகளாகட்டும் எஞ்சின் டார்க் மிகச் சிறப்பாகவே இருந்தது. ஆட்டோமேட்டிக் மாடலில் எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்வதற்கான டிரைவிங் மோடுகள் கிடையாது. மேலும், 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

எதிர்பார்த்ததைவிட உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது இதன் எஞ்சின். ஆரியா காரைவிட இதன் டார்க் திறன் 80 என்எம் வரை கூட்டப்பட்டு இருப்பதை பிக்கப்பில் உணர முடிகிறது. 

ஆட்டோமேட்டிக் மாடலில் கண்ட சுகத்தை, இதன் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் பெறவில்லை என்பதே உண்மை. பெரிதும் எதிர்பார்த்து மேனுவல் மாடலை ஓட்டும்போது அந்த செம்மையான உணர்வு இந்த மாடலில் மிஸ்ஸிங். 

மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலை ஓட்டும்போது க்ளட்ச் சற்று கடினமான உணர்வை தந்தது. மேலும், ஒவ்வொரு மோடிலும் வைத்து ஓட்டும்போது அதிக வித்தியாசத்தை உணர முடியவில்லை.

கார் பிரியர்களை இதன் எஞ்சின் எந்தளவுக்கு கவரும் என்று சொல்ல முடியாது. பவர் டெலிவிரி அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. அதேநேரத்தில், நடுத்தர வேகத்தில் மிகச் சிறப்பான செயல்திறனை காட்டுகிறது இதன் டீசல் எஞ்சின்.

டாடா ஹெக்ஸா காரின் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் மாடல்களை 200 கிமீ தூரம் வரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அனைத்து வித சாலைநிலைகளிலும் ஓட்டியதில், சராசரியாக லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தந்தது.

தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான போதுமான இடவசதிகள்  கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 29 பொருட்களுக்கான இடவசதி உள்ளன.

பிரம்மாண்ட வடிவம், 2,280 கிலோ எடை, அதிக கிரவுண்ட் கிளயரன்ஸ் போன்ற விஷயங்களை தாண்டி, இந்த கார் சிறப்பான நிலைத்தன்மையுடன் செல்கிறது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பு மிகச் சிறப்பாகவும், சொகுசாகவும் இருக்கிறது. வளைவுகளில் கூட நிலைகுலையாமல் செல்கிறது.

பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சிறப்பான கார் மாடலாக வந்துள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வளைவுகளில் கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கான பாஷ் நிறுவனத்தின் 9வது தலைமுறை கார்னர் ஸ்டெபிளிட்டி சிஸ்டம் உள்ளது. அதிக தரைபிடிப்பை வழங்கும் விசேஷ எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அனைத்து சக்கரங்களுக்கும் சரியான பிரேக்கிங் பவரை செலுத்தும் இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் அசிஸ்ட் வசதி போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள்.

சாதகங்கள்

  • ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகள் 
  • சுவிட்சுகள் எளிதாக இயக்கும் அமைப்பு
  • 6 ஏர்பேக்குகள்
  • ஆட்டோமேட்டிக் மாடலின் ஸ்போர்ட் மோடு வசதி
  • 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம்
  • சிறப்பான ஓட்டுனர் இருக்கை

பாதகங்கள்

  • ஸ்டீயரிங் பீட்பேக் சிறப்பாக இல்லை
  • நெருக்கடியான மூன்றாவது வரிசை இருக்கை

எமது அபிப்ராயம்

தினசரி பயன்பாடு, நீண்ட தூர பயணம் மட்டுமின்றி, ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு கிராஸ்ஓவர் ரக மாடலாக டாடா ஹெக்ஸா மார்க்கெட்டுக்கு வருகிறது. போட்டியாளர்களைவிட இந்த காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருப்பதால், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக, நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக கருதலாம். உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் ஆட்டோமேட்டிக் மாடலும் நிச்சயம் சிறப்பான வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்து, இதற்கான வரவேற்பு அமையும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, October 22, 2016, 18:43 [IST]
English summary
The Tata Hexa review provides details of the exterior and interiors, drive, ride and handling, performance, pros and cons, images, safety features and most of all the verdict.
Please Wait while comments are loading...

Latest Photos