டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

குவாலிஸ், இன்னோவா, ஃபார்ச்சூனர் போன்ற சிறந்த கார் மாடல்களுடன் இந்திய வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்ற டொயோட்டா கார் நிறுவனம், அதே நம்பகத்தன்மையை வைத்து பட்ஜெட் கார் மார்க்கெட்டிலும் தனது வர்த்தகத்தை விஸ்தீரணப்படுத்த முடிவு செய்தது.

இதற்காக, ஹேட்ச்பேக் ரகத்தில் லிவா காரையும், அதன் செடான் ரகமாக எட்டியோஸ் காரையும் சில ஆண்டுகளுக்கு முன் களமிறக்கியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரு மாடல்களும் எதிர்பார்த்த அளவு போனியாகவில்லை.

அதேநேரத்தில், சந்தைப் போட்டியில் பின்தங்கிய எட்டியோஸ் காரின் விலை, வடிவம், வசதிகள் போன்றவை டாக்சி ஆபரேட்டர்களுக்கு பொருத்தமாக இருந்ததால், அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், தனிநபர் மார்க்கெட்டில் இரு கார்களும் போதிய வரவேற்பை பெறாத நிலையே தொடர்கிறது.

தனிநபர் மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பெறுவதற்கான முயற்சிகளை டொயோட்டா செய்யாமல் இல்லை. அவ்வப்போது மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியும் லிவா காருக்கும், எட்டியோஸ் காருக்கும் பெரிய வரவேற்பு இல்லை. இந்த நிலையில், மீண்டும் சில மாற்றங்களுடன் டொயோட்டா லிவா மற்றும் எட்டியோஸ் கார்கள் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரில் நடந்த அறிமுக விழாவின்போதே, எட்டியோஸ் பிளாட்டினம் காரின் டீசல் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு டொயோட்டா வழங்கியது. குறைந்த தூரம் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான இந்த வாய்ப்பில் கிடைத்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இது ரியல் பிளாட்டினாமா, ரீல் பிளாட்டினமா பார்க்கலாம்.

டிசைன்

டொயோட்டா எட்டியோஸ் காரின் முகப்பில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வந்தது டொயோட்டா. ஆனால், தற்போதுதான் அது முழுமை பெற்றுள்ளதாக கருதலாம். எட்டியோஸ் பிளாட்டினம் மாடலின் முன்புறம் நவீன மாடலாக உருப்பெற்றிருக்கிறது.

ஹெட்லைட் டிசைனில் அதிக மாற்றம் தெரியவில்லை என்றாலும், முன்பக்க க்ரில் அமைப்பு, புதிய பம்பர், பெரிய ஏர்டேம், பனி விளக்குகள் அறை ஆகிய அனைத்தும் முற்றிலும் புதுமையாக இருக்கிறது. முந்தைய எட்டியோஸ் மாடல்களைவிட இது மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறலாம்.

பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. புதிய லிவா காரில் புதிய டிசைன் கொண்ட வீல்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எட்டியோஸ் பிளாட்டினம் காரில் பழைய டிசைனிலான சக்கரங்களே பயன்படுத்தப்பட்டிருப்பது சற்று ஏமாற்றம்தான். பின்புறத்தில் பம்பரிலும், டெயில் லைட் க்ளஸ்ட்டரிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்டீரியர்

காரின் முன்புறம் போன்றே, காரின் உட்புறத்திலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கருப்பு நிற பேனலில் வெள்ளை நிற எழுத்துக்களுடன் தெளிவாக இருக்கிறது. டிஜிட்டல் ஆர்பிஎம் மீட்டர் புதிது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரின் விளக்கின் பிரகாசத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. டேஷ்போர்டின் நடுவில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம் பெறவில்லை.

கருப்பு மற்றும் தந்த வண்ணக் கலவையுடன் கூடிய இரட்டை வண்ண டேஷ்போர்டு கவர்ச்சியாக இருக்கிறது. புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன் இருக்கைகளுக்கு அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய ஹெட்ரெஸ்ட்டுகள் உள்ளன. பின் இருக்கைகளின் அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதால், சொகுசாக இருக்கின்றன.

இந்த காரில் புளுடூத் இணைப்பு மற்றும் யுஎஸ்பி போர்ட் வசதியுடன் கூடிய 2 டின் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு விசாலமான உணர்வை தரும் கேபின் இடவசதியை கொண்டுள்ளது.

டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புதிய ஸ்பீக்கர்கள் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். இந்த மாற்றங்கள் மூலமாக, தனிநபர் வாடிக்கையாளர்களை டொயோட்டா குறிவைத்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.

எஞ்சின்

பழைய எட்டியோஸ் காரில் இருந்த அதே எஞ்சின்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 132 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சிந் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எங்களது சோதனை ஓட்ட ஆய்வின்போது குறைந்த தூரமே காரை இயக்க வாய்ப்பு இருந்தது. எனவே, சரியான மைலேஜ் விபரங்களை பெற இயலவில்லை. டீசல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ முதல் 19 கிமீ வரை மைலேஜ் தரும் என்று நம்பலாம்.

ஓட்டுனர்களுக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை தரும் பட்ஜெட் கார்களில் எட்டியோஸ் காரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், டர்போலேக் குறைவான டீசல் எஞ்சின் சிறந்த உணர்வை தருகிறது. குறிப்பாக, நகர்ப்புறத்தில் டீசல் மாடலை ஓட்டுபவர்களுக்கு இது உகந்த நண்பனாக இருக்கும்.

டீசல் எஞ்சின் மூலமாக வரும் அதிர்வுகளை குறைக்க டொயோட்டா சிறப்பான பணிகளை இந்த காரில் எடுத்திருக்கிறது. இருந்தபோதிலும், அதிகவேகத்தில் செல்லும்போது கேபினுக்குள் அதிக அதிர்வுகளையும், சப்தத்தையும் உணர முடிகிறது.

சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்பிரிங்குகள் மூலமாக நிலையான ஓட்டுதல் அனுபவத்தை கொடுத்தாலும், ஹார்டு டைப் சஸ்பென்ஷனாக இருப்பதால், அதிக சொகுசாக இல்லை. அதிக அளவில் டாக்சி மார்க்கெட்டுக்காக நகர்ப்புறத்தில் பயன்படுத்தப்படுவதால், க்ளட்ச் பெடல் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்பைவிட இயக்குவதற்கு மென்மையாக இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்து கொள்ளாத நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா. அதன்படி, புதிய எட்டியோஸ் பிளாட்டினம் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனர், முன் இருக்கை பயணிக்கான இரட்டை காற்றுப் பைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியாக பிரித்தனுப்பக்கூடிய எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் வசதியுடன் இணைந்து செயலாற்றும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சொகுசு கார்களில் கொடுக்கப்படும் ISOFIX என்ற உயர்வகை சைல்டு சீட் பிடிமான அமைப்பும் இதில் இடம்பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது.

முன்புற மற்றும் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளாகும்போது, மோதல் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணிகளை காக்கும் வகையில், கிரம்பிள் ஸோன் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டுள்ளது. உடல்கூடு கூடுதல் உறுதித்தன்மை கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. பின்புற இருக்கையில் மூன்று முனை சீட் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

விலை விபரம்

பெட்ரோல் வேரியண்ட்டுகள்

எட்டியோஸ் பிளாட்டினம் ஜிஎக்ஸ்: Rs. 6,94,430
எட்டியோஸ் பிளாட்டினம் வி: Rs. 7,22,141
எட்டியோஸ் பிளாட்டினம் விஎக்ஸ்: Rs. 7,85,256

டீசல் வேரியண்ட்டுகள்

எட்டியோஸ் பிளாட்டினம் ஜிஎக்ஸ்டி: Rs. 8,07,470
எட்டியோஸ் பிளாட்டினம் விடி: Rs. 8,35,181
எட்டியோஸ் பிளாட்டினம் விஎக்ஸ்டி: Rs. 8,98,296

 

 

எமது அபிப்ராயம்

இடவசதி, பாதுகாப்பு அம்சங்களில் போட்டியாளர்களைவிட ஒருபடி முன்னே நிற்கிறது புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம். 4 மீட்டருக்குள் அடக்கப்பட்ட காம்பேக்ட் செடான் கார்களைவிட மிகச்சிறப்பான இடவசதி, பொருட்கள் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி, மைலேஜ் மற்றும் சரியான விலை என சிறப்பாகவே இருக்கிறது.

ஆனால், டாக்சி கார் என்ற முத்திரைதான் இந்த காருக்கு பாதகமான விஷயமாகிவிட்டது. அத்துடன், டேஷ்போர்டின் நடுவே இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு தனிநபர் பயன்பாட்டுக்கான வாங்கும் வாடிக்கையாளர்களை கவராது. டிசைனிலும் வாடிக்கையாளர்களை கவரும் அளவுக்கு இல்லை என்பதும் இதன் பாதகமான அம்சம்.

இந்த செக்மென்ட்டில் டொயோட்டாவுக்கு முக்கிய இடம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், வடிவமைப்பிலும், வசதிகளிலும் எட்டியோஸ் முற்றிலும் காராக மாறினால் மட்டுமே, இது ரியல் பிளாட்டினமாக இருக்க முடியும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
First drive and road test review of the Toyota Etios Platinum. Here is all you need to know about the Etios Platinum and what one can expect in real world conditions. Read the test drive report in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos