மாருதி 800 மாடல் தயாரிப்பை நிறுத்த முடிவு!

By
Maruti800
டெல்லி: மாருதி சுசுகி நிறுவனம் தனது மாருதி 800 பிராண்ட் மாடல் கார்களின் உற்பத்தியை வரும் மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் சிறிய ரக கார்கள் வரிசையில் மிகப் பிரபலமான மாருதி 800 மாடலை மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 1983ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

குறைந்த விலை, அதிக மைலேஜ், சிறிய தெருக்களிலும் லாவகமாக செல்வதற்கான வாகன அமைப்பு, குறைந்த பராமரிப்பு செலவு என பல்வேறு காரணங்களால் மாருதி 800 கார் பலராலும், குறிப்பாக நடுத்தர சிறு குடும்பங்களில் விரும்பப்பட்டது.

வாகனங்கள் பயன்படுத்தும் எரிபொருள் அளவு மற்றும் அவை வெளியேற்றும் புகை ஆகியவற்றுக்கு ஏற்ப என்ஜினுக்கு பாரத் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்கிற தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது வாகனங்களின் என்ஜின்களுக்கு பாரத் ஸ்டேஜ்-3 தரச்சான்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறை வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத் ஸ்டேட்-4 என்ற புதிய விதிமுறை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட 13 நகரங்களில் நடைமுறைக்கு வருகிறது.

எனவே, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத் ஸ்டேஜ்-4 தரம் கொண்ட என்ஜின்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பாரத் ஸ்டேஜ்-4 தரம்கொண்ட என்ஜின்களுடன் மாருதி 800 கார் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா கூறியுள்ளார்.

மாருதி 800 காருக்குப் பதிலாக புதுரக கார் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த இடத்தை மாருதி ஆல்டோ பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மாருதி 800 கார் உற்பத்தியை மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எனினும் இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த காரின் விற்பனை தொடரும் என கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மாருதி 800 விற்பனை, இதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 37 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Story first published: Tuesday, February 16, 2010, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X