செவர்லேயின் கார் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் செவர்லே செயில் செடான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான ஸ்விப்ட் டிசையரின் மார்க்கெட்டை குறிவைத்து போட்டியை கொடுக்கும் அம்சங்கள் மற்றும் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், டிசையரை ஒப்பிடும்போது செயில் செடான் சற்று பெரிய காராக இருக்கிறது. இருப்பினும், இரண்டிலும் எந்த கார் கொடுக்கும் மதிப்புக்கு மிகச்சிறந்ததாக இருக்கும் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு.
மேலும், செயில் செடான் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களின் கவனம் கொஞ்சம் இந்த காரின் பக்கமும் திரும்பியிருக்கிறது. எனவே, செடான் காரை தேர்வு செய்யும்போது இரண்டிலும் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொண்டால் கொஞ்சம் உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கில் இரண்டு கார்களையும் இங்கே ஒப்பிட்டு சாதக, பாதக அம்சங்களை வழங்குகிறோம்.
பாதுகாப்பு அம்சங்கள் - செயில் செடான்
டிசையரை விட கூடுதல் பாதுகாப்பு வசதிகளை செயில் செடான் கொண்டிருக்கிறது. செயில் செடானின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் 4 வேரியண்ட்களில் டாப்-3 வேரியண்ட்களில் டிரைவர் பக்கத்தில் காற்றுப் பை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, டாப் 2 வேரியண்ட்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சம். மேலும், டாப் எல்டி வேரியண்ட்டில் பயணிகள் பக்கத்திற்கும் காற்றுப் பை கொடுக்கப்பட்டுள்ளது.












































