2014ல் ரிலீசாகும் புதிய கார் மாடல்கள்: ஒரு பார்வை

By Saravana

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட அனைத்து கார் மாடல்களும் மார்க்கெட்டுக்கு வந்தாகிவிட்டது. புத்தாண்டும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவும் நெருங்கி வரும் இவ்வேளையில், புதிய கார்களின் வருகை குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களுக்கான பொற்காலமாக அமையும் என கருதப்படுகிறது. அந்தளவுக்கு புதிது புதிதாக எஸ்யூவி, எம்பிவி மாடல்கள் வரிசை கட்ட உள்ளன. இந்த நிலையில், கார் வாங்க திட்டமிட்டு காத்திருப்பவர்களுக்கு பயன்படும் வகையில், இந்த சிறப்பு தொகுப்பு அமைகிறது.

அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கும் மாருதியின் புதிய டீசல் கார் மற்றும் டட்சன் பிராண்டில் வர இருக்கும் குறைந்த விலை கார்கள் உள்பட 20க்கும் அதிகமான புதிய மாடல்களும், 10க்கும் அதிகமான ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்டு வரும் கார்கள் என 30க்கும் அதிகமான கார் மாடல்கள் இந்திய சாலைகளை அலங்கரிக்க தயாராகி வருகின்றன. அதுபற்றிய ஒரு சிறப்பு செயதித் தொகுப்பு.

புதிய ஹோண்டா சிட்டி

புதிய ஹோண்டா சிட்டி

கடந்த திங்கட்கிழமை புதிய ஹோண்டா சிட்டி அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு சற்று முன்னதாக வரும் ஜனவரியில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது. அப்போது விலை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் சிட்டி கார் வருவது அதிக ஆவலை வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஹோண்டா மொபிலியோ

ஹோண்டா மொபிலியோ

இந்தோனேஷிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மொபிலியோ கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியர்களுக்கும் தரிசனம் தர இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வருகிறது. 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த எம்பிவி கார் மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.

புதிய ஜாஸ்

புதிய ஜாஸ்

புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய ஜாஸ் காரை ஹோண்டா டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மிக சிறப்பான டிசைன் மற்றும் தரத்துடன், இந்த காரும் டீசல் மாடலில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹோண்டா வெஸல்

ஹோண்டா வெஸல்

டோக்கியோ மோட்டார் ஷோவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்தான் வெஸல். கவர்ச்சியும், கம்பீரமும் கலந்ததாக டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த எஸ்யூவி ஈக்கோஸ்போர்ட், டஸ்ட்டர், டெரானோ எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும். அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வரும் இந்த எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிகிறது.

ஐ10 செடான்

ஐ10 செடான்

கிராண்ட் ஐ10 காரைத் தொடர்ந்து, அதே பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய காம்பெக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அக்சென்ட் இடத்தை நிரப்ப வரும் இந்த புதிய கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியர்களுக்கு தரிசனம் தரும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

ஹூண்டாய் காம்பெக்ட் எஸ்யூவி

ஹூண்டாய் காம்பெக்ட் எஸ்யூவி

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை ஹூண்டாய் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய உள்ளது. டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் போட்டியாளராகத்தான் இதுவும் இருக்கும். பெட்ரோல், டீசலில் வர இருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி என்பதால் வரிச்சலுகை மூலம் போட்டியாளர்களுக்கு நெருக்கடி தரும் விலையில் வரும் என நம்பலாம்.

புதிய ஃபிகோ

புதிய ஃபிகோ

பிரேசிலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கா என்ற பெயரிலான புதிய ஃபிகோ காரின் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்டு பார்வைக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் முற்றிலும் மாறுபட்ட இந்த புதிய ஃபிகோ கார் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2015ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும்.

புதிய செடான்

புதிய செடான்

கா கான்செப்ட் காரின் அடிப்படையிலான புதிய செடான் காரை ஃபோர்டு வடிவமைத்து சோதனை செய்து வருகிறது. இந்த கார் கிளாசிக் செடான் காருக்கு மாற்றாக வருகிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இந்த புதிய செடான் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாக உள்ளது.

புதிய லீனியா

புதிய லீனியா

வடிவமைப்பு மாறுதல்களுடன், கூடுதல் வசதிகள் கொண்ட லீனியா காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபியட் அறிமுகம் செய்ய உள்ளது. மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் இந்த கார் மூலம் முக்கிய இடத்தை பிடிக்கும் விதத்தில் இந்த காரில் பல அம்சங்களை கவனித்து மாற்றங்களை செய்துள்ளது ஃபியட். டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையும் சுறுசுறுப்பாக அதிகரித்து வருவது புதிய லீனியாவுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

புன்ட்டோ அபார்த்

புன்ட்டோ அபார்த்

புன்ட்டோ காரின் அதிசக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் மாடலான புன்ட்டோ அபார்த் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்க ஃபியட் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ரூ.9 லட்சம் விலையில் புன்ட்டோ அபார்த் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

ஜீப் ரேங்லர்

ஜீப் ரேங்லர்

ஜீப் பிராண்டின் சிறப்பான ஆல்ரவுண்டர் எஸ்யூவி மாடல்தான் ரேங்லர். இந்த எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராண்ட் செரோக்கீ

கிராண்ட் செரோக்கீ

கடந்த ஓர் ஆண்டு காலமாக சோதனையில் இருக்கும் ஜீப் செரூக்கீ எஸ்யூவியை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. ரூ.45 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

2 புதிய கார்கள்

2 புதிய கார்கள்

விஸ்டா அடிப்படையில் இரண்டு புதிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஃபால்கன்- 4 என்ற ஹேட்ச்பேக் மற்றும் ஃபால்கன்- 5 என்ற செடானும் அடங்கும்.

டாடாவின் புதிய எஞ்சின்

டாடாவின் புதிய எஞ்சின்

இந்த இரண்டு கார்களில் செடான் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டிருக்கும் என்பதோடு, புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு வருகின்றன. தற்போது தீவிர சோதனையில் இந்த இரு கார்களையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இரு கார்களையும் காட்சிக்கு வைக்க டாடா திட்டமிட்டுள்ளது.

லாட்ஜி எம்பிவி

லாட்ஜி எம்பிவி

டஸ்ட்டரை மட்டும் நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என்று கொஞ்சம் தாமதமாக உணர்ந்து கொண்ட ரெனோ தற்போது புதிய மாடல்கள் அறிமுகத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் லாட்ஜி எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது அந்த நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. மாருதி எர்டிகாவுக்கு போட்டியை தரும் வகையிலான 7 சீட்டர் எம்பிவியாக இந்த கார் வர இருக்கிறது.

ரெனோவின் புதிய ஹேட்ச்பேக்

ரெனோவின் புதிய ஹேட்ச்பேக்

அடுத்த ஆண்டு புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்யும் திட்டமும் ரெனோவிடம் உள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார். ரூ.4 லட்சம் விலையில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது. 2015ல் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஏ ஸ்டார்

புதிய ஏ ஸ்டார்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அறிமுகம் செய்ய இருக்கும் மிக முக்கியமான மாடலாக புதிய ஏ ஸ்டார் காரை கூறலாம். வடிவமைப்பில் பல மாறுதல்களுடன் இந்த கார் வருகிறது. ஒய்எல் - 7 என்ற பெயரில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய கார் 800சிசி டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் பின்னர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுவதால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய செடான்

புதிய செடான்

ஒய்எல் -1 என்ற பெயரில் மாருதி சோதனை செய்து வரும் புதிய செடான் கார் எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக விற்பனைக்கு விடப்பட உள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பெக்ட் எஸ்யூவி

காம்பெக்ட் எஸ்யூவி

பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஐவி4 எஸ்யூவியை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி பார்வைக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் போட்டியாளராக களமிறங்கும். 2015ல் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.

எஸ்எக்ஸ்4 ஹேட்ச்பேக்

எஸ்எக்ஸ்4 ஹேட்ச்பேக்

ஸ்விஃப்ட்டுக்கும் மேலே நிலைநிறுத்தும் விதத்தில் எஸ்எக்ஸ்- 4 ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த காரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் கோ

டட்சன் கோ

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டட்சன் கோ கார் தற்போது சென்னையில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய கார் ரூ.3.5 லட்சம் விலையில் வர இருப்பது வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பால் திருப்பியிருக்கிறது.

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்

இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களுக்கு தரிசனம் தர இருக்கிறது. ரூ.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வர இருப்பதாக வெளியான தகவலால் பல வாடிக்கையாளர்கள் தங்களது எம்பிவி கார் கனவுக்கு பிரேக் போட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, கோ அடிப்படையிலான புதிய செடான் காரையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குறிப்பு

குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அறிமுகம் குறித்த கால அளவு மற்றும் இதர தகவல்களில் மாறுதல்கள் இருக்கலாம். மேலும், ஸ்லைடரில் மாதிரி படங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X