செவர்லே என்ஜாய் எம்பிவி காரின் விலை அதிரடி குறைப்பு... ஹேட்ச்பேக் விலையில் கிடைக்கிறது!

Written By:

செவர்லே என்ஜாய் எம்பிவி காரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போது பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களின் விலைக்கு இணையாக இந்த 8 சீட்டர் காரின் விலை குறைக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிரடி விலை குறைப்பிற்கு காரணங்கள் சொல்லப்படவில்லை.

விற்பனையை நிறுத்துவதற்காக இருப்பு இருக்கும் கார்களை தீர்த்துக் கட்டும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதா அல்லது பண்டிகை காலத்தையொட்டிய சிறப்பு விலையாக அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. இருப்பினும் இது எதிர்பாராத விலையாகவே கருத முடியும். புதிய விலை விபரங்களை தொடர்ந்து காணலாம்.

செவர்லே என்ஜாய் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தலா 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மேலும், 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி மற்றும் 8 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் கிடைக்கிறது.

குறைந்தபட்சமாக ரூ.1.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1.93 லட்சம் வரையில் விலை அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. வேரியண்ட் வாரியாக புதிய விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

செவர்லே என்ஜாய் பெட்ரோல் மாடலின் LS8 மற்றும் LS7 ஆகிய வேரியண்ட்டுகள் ரூ.4.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது பல பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களின் விலைக்கு இணையானதாக இருக்கிறது. அதாவது ஆன்ரோடு ரூ.6 லட்சத்தை ஒட்டி இருக்கும் என்பதால் பண்டிகை காலத்தில் கார் வாங்குவோரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

நடுத்தர வகையிலான LT8 மற்றும் LT7 ஆகிய வேரியண்ட்டுகள் ரூ.5.64 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. அதாவது, ரூ.6.5 லட்சத்தில் இந்த நடுத்தர வேரியண்ட்டை வாங்கிவிடலாம். பெரும்பாலானவர்களுக்கு இந்த மாடல் சிறந்த சாய்ஸாக அமையும்.

செவர்லே என்ஜாய் பெட்ரோல் மாடலின் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் LTZ8 மற்றும் LTZ7 ஆகிய வேரியண்ட்டுகல் ரூ.6.24 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். அதன்படி, ரூ.7 லட்சத்தில் அனைத்து வசதிகளும் கூடிய டாப் வேரியண்ட்டை பெற்றுவிட முடியும். நேரடி போட்டியாளரான மாருதி எர்டிகா காரின் டாப் வேரியண்ட் ரூ.10 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் வரையில் வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று, செவர்லே என்ஜாய் காரின் டீசல் மாடலின் LS8 மற்றும் LS7 ஆகிய வேரியண்ட்டுகள் ரூ.5.99 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.7 லட்சம் அடக்க விலையில் கிடைக்கும்.

என்ஜாய் காரின் LT8 மற்றும் LT7 ஆகிய வேரியண்ட்டுகள் ரூ.6.64 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ரூ.7.50 லட்சம் ஆன்ரோடு விலையில் மிட் வேரியண்ட்டை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.

LTZ8 மற்றும் LTZ7 ஆகிய வேரியண்ட்டுகள் ரூ.7.24 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ரூ.8.25 லட்சம் ஆன்ரோடு விலையில் டாப் வேரியண்ட்டை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து செவர்லே என்ஜாய் காரின் முக்கிய சிறப்பம்சங்களின் விபரங்களையும் இணைத்திருக்கிறோம்.

செவர்லே என்ஜாய் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 131 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 73 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டு மாடல்களிலுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 175மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ், 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் மற்றும் 165 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்களுக்கான இடவசதியை கொண்டுள்ளது.

இந்த விலை குறைப்பு குறித்து அருகாமையிலுள்ள செவர்லே டீலர்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே செவர்லே என்ஜாய் காரின் பெட்ரோல் மாடல் ரூ.6.52 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.88 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 19, 2016, 12:49 [IST]
English summary
Chevrolet Enjoy Witnesses Huge Price Slash All Of A Sudden. Read the complete details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos