பிஎம்டபிள்யூ லோகோவை காப்பியடித்த சீன நிறுவனங்களுக்கு அபராதம்!

Written By:

காப்பியடிக்கும் கலாச்சாரத்தில் ஊறிப்போன நாடு சீனா. குறிப்பாக, அந்நாட்டு கார் நிறுவனங்கள் உலகின் முன்னணி கார் பிராண்டுகளின் முத்திரைகளையும், சின்னங்களையும் காப்பியடித்து கார் மாடல்களை வெளியிட்டு வருகின்றன.

அந்நாட்டில் அறிவுசார் படைப்பு உரிமைக்கான விதிகளின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் வெளிநாட்டு கார் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இந்த நிலையில், இந்த மோசடிகளுக்கு முடிவு கட்டும் விதத்தில் வந்திருக்கும் ஒரு தீர்ப்பானது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.

பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் சின்னத்தை போன்று மாதிரி சின்னங்களை பயன்படுத்திய இரு சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அறிவுசார் சொத்து மற்றும் படைப்பு உரிமை நீதிமன்றம் அதிரடியாக அபராதம் விதித்துள்ளது.

டிகுவோ பயோமா குரூப் என்ற நிறுவனமும், சுவான்ஜியா என்ற நிறுவனமும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லோகோவை போன்ற பிராண்டு முத்திரைகளை பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட இரு சீன நிறுவனங்களும் பிஎம்டபிள்யூ லோகோவை பிரதிபலிக்கும் வகையிலான பிராண்டு சின்னங்களை பயன்படுத்தியது தெரிய வந்தது.

சுவான்ஜியா நிறுவனமானது காலணிகள், தோல் பைகள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதில் பிரபலமானது. இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் பிஎம்டபிள்யூ லோகோவை பிரதிபலிக்கும் சின்னத்தை பயன்படுத்தி வந்துள்ளது. இது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் 3 மில்லியன் யுவான் [இந்திய மதிப்பில் ரூ.2.9 கோடி] அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அறிவுசார் சொத்து மற்றும் படைப்பு உரிமை நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பானது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதலை தந்துள்ளது.

அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்டு முத்திரையை போன்றதொரு சின்னத்தை சீனாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான BYD பயன்படுத்தி வருகிறது. ஆனால், அதுகுறித்து பிரச்னை இந்த வழக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தை போன்றே இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுனமும் இதுபோன்றதொரு வழக்கு ஒன்றை சீன நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. சீனாவை சேர்ந்த லேண்ட்விண்ட் என்ற கார் நிறுவனம் எக்ஸ்7 என்ற சொகுசு எஸ்யூவி மாடல் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இந்த எஸ்யூவி மாடலானது லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியின் காப்பியடிக்கப்பட்ட மாடலாக இருக்கிறது. அத்துடன், எவோக் எஸ்யூவியைவிட பன்மடங்கு குறைவான விலையில் வந்தது. இந்த கார் மாடல் குறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் சீன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலமாக, வெளிநாட்டு கார் மாடல்களை காப்பியடிக்கும் சீன நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாகவே அமைந்துள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஆரம்ப புள்ளியாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது.

English summary
Also, British luxury carmaker Jaguar Land Rover is currently involved in a similar legal battle with a Chinese manufacturer LandWind.
Please Wait while comments are loading...

Latest Photos