ரேஸ் கார்களிலிருந்து சாதாரண கார்களுக்கு வந்த நவீன தொழில்நுட்பங்கள்!

Written By:

ரேஸ் கார்களுக்கும், சாதாரண சாலையில் இயக்குவதற்கான கார்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளது அறிந்த விஷயம்தான். அதிவேகம், அதற்கு தக்க கட்டுமானம், சக்திவாய்ந்த எஞ்சின், நவீன கட்டுப்பாட்டு தொழில்நுட்ப வசதிகள் என ரேஸ் கார்களின் தொழில்நுட்பத்திற்கும், சாதாரண கார்களுக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உள்ளன.

ஆனால், ரேஸ் கார்களில் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்கள், இன்று சர்வசாதாரணமாக வெகுஜன பயன்பாட்டு கார்களில் புகுத்தி பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அவ்வாறு, இன்று அன்றாட வாழ்வில் சகஜமாகிவிட்ட அந்த தொழில்நுட்பங்களை இந்த செய்தியில் காணலாம்.

10. ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்று குறிப்பிடப்படும் தானியங்கி கியர்பாக்ஸ் கார்கள் இன்று இந்தியாவில் வெகு பிரபலமாகிவிட்டன. தொடர்ந்து ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தொழில்நுட்பமானது முதலில் ரேஸ் கார்களில்தான் பயன்படுத்தப்பட்டன. க்ளட்ச் பிரச்னை இல்லாமல் வெகு சுலபமாக காரை இயக்குவதற்கு இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் சிறப்பான வசதியை அளிக்கிறது. அதேபோன்று, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் போன்றவை விலை உயர்ந்த கார்களில் மட்டுமே முன்பு வழங்கப்பட்டன. ஆனால், தற்போது அவை பட்ஜெட் கார் மாடல்களில் கூட இப்போது கிடைக்கிறது.

09. புஷ் பட்டன் ஸ்டார்ட்

கார் சாவியை திருகி எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் காலம் மலையேறி வருகிறது. இப்போது பல கார்களில் இருக்கும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி மூலமாக, ஓட்டுனரின் பாக்கெட்டில் சாவி இருந்தால், பொத்தானை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும்.

08. சஸ்பென்ஷன்

அம்பாசடர் உள்ளிட்ட பல கார்களில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பு இருந்ததை கண்டிருக்கலாம். ஆனால், இப்போது வரும் கார்களில் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்படுகிறது. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு மூலமாக கார் அதிக நிலைத்தன்மையுடனும், சொகுசான பயணத்தையும் வழங்கும். ஃபார்முலா ஒன் ரேஸ் கார்களில் பயன்படுத்தப்பட்ட மல்டிலிங்க் சஸ்பென்ஷனும், ராலி ரேஸ் கார்களில் பயன்படுத்தப்பட்ட மெக்பெர்ஷன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும் இப்போது பல நவீன கார்களில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.

07. டயர்கள்

கார் நிலையாகவும் தரைப்பிடிப்புடன் வழுக்காமல் செல்வதற்கும், மைலேஜுக்கும் டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இன்றைக்கு கார்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் ரேஸ் கார்களின் டயர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டவைதான். ரேஸ் கார்களில் அதிக தரைப்பிடிப்பை வழங்கும் சாஃப்ட் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சீக்கிரமாக தேய்ந்துவிடும். ஆனால், சாதாரண கார்களில் அவை நீண்ட உழைப்பை தரும் வகையில் சற்று கடினமான கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

06. டிஸ்க் பிரேக்

இன்றைக்கு கார், பைக்குகளில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், 1950களிலையே ரேஸ் கார்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சாதாரண டிரம் பிரேக்குகளைவிட இந்த டிஸ்க் பிரேக்குகள் சிறப்பான நிறுத்தும் திறனை வழங்குகின்றன.

05. ஏர் இன்டேக்

இன்றைக்கு பல எஸ்யூவி வகை கார்களில் காணப்படும் பானட் ஸ்கூப் எனப்படும் காற்று உள்வாங்கும் அமைப்புகள் ரேஸ் கார்களிலிருந்துதான் வந்தவை. அதிவேகத்தில் இயங்கும் எஞ்சின் சூடாவதை தவிர்ப்பதற்காக, காற்று குளிர்விப்பு முறைக்காக இந்த ஏர் ஸ்கூப்புகள் ரேஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டன.

04. டியூவல் கேம் சாஃப்ட்

புதிய கார் வாங்கும்போது புரோஷரில் DOHC எஞ்சின் என்ற குறிப்பை காண முடியும். அதாவது, எஞ்சினுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் வால்வுகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் சிறிய உலோக தண்டுதான் கேம் சாஃப்ட் என்று குறிப்பிடப்படுகிறது. வால்வுகள் மூலமாக எரிபொருளை எரிப்பதற்கான காற்று உள்வாங்கும்போது திறந்து பின்னர் புகை கழிவாக வெளியேற்றும். எஞ்சின் செயல்திறனை அதிகரிப்பதற்காக கார் எஞ்சின்களில் வால்வுகளின் வேகத்தை அதிகரிப்பதற்காக இரண்டு கேம் சாஃப்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 1900 முதல் ரேஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பமானது இப்போது சாதாரண கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

03. ஏரோடைனமிக்ஸ்

கார் வாங்குவோரின் முதல் பார்வை, காரின் டிசைன் எவ்வாறு இருக்கிறது என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு வரும் அனைத்து கார்களும் காற்றை கிழித்துக் கொண்டு எளிதாக முன்னோக்கி செல்வதற்கான சிறப்பான ஏரோடைனமிக் டிசைனுடன் வடிவமைக்கப்படுகின்றன. காற்றை கிழித்துக் கொண்டு எளிதாக செல்வதற்காக ரேஸ் கார்களில் பல தொழில்நுட்பங்கள் பயந்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் இப்போது சாதாரண கார்களிலும் பயன்பாட்டுக்க வந்துவிட்டன. ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக இருந்தால், காரின் செயல்திறன் சிறப்பாக இருப்பதோடு, அதிக மைலேஜ் கிடைக்க வழி செய்கிறது.

02. உதிரிபாகங்கள்

ரேஸ் கார்களில் எஞ்சினுக்கு பளுவை குறைப்பதற்காக இலகு எடையும், அதிக உறுதித்தன்மை கொண்ட உடல்கூடு பாகங்களும், உதிரிபாகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், கார்பன் ஃபைபர் மற்றும் அதிக உறுதித்தன்மை கொண்ட அலுமினிய உதிரிபாகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. விலை அதிகம் என்பதை தாண்டி இந்த வகை மூலப்பொருட்கள் அடங்கிய உதிரிபாகங்கள் தற்போது சாதாரண கார்களிலும் பயன்பாட்டுக்க வந்து கொண்டிருக்கின்றன.

01. பாதுகாப்பு அம்சங்கள்

ஃபார்முலா ஒன் கார்களின் உடல்கூடு அமைப்பு கார்பன் ஃபைபராலும், நாஸ்கார் ராலி பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கார்கள் கவிழ்ந்தால் ஓட்டுனரை காப்பதற்கு ரோல் கேஜ் அமைப்பும் கொடுக்கப்படுகின்றன. இவை தற்போது சாதாரண கார்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. வலுவான உலோக குழாய்கள் வெல்டு செய்து இணைக்கப்பட்டு, கார் கவிழும்போது உடல்கூடு அமைப்பில் பாதிப்பு ஏற்படாமல் இவை தாங்கிக் கொள்ளும். அதேபோன்று, ஓவிஆர்எம் எனப்படும் நவீன சைடு மிரர்கள் 1900களிலேயே ரேஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டன.

எந்தவொரு தொழில்நுட்பமும் வெகுஜன மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வரும்போதுதான் அது முழுமையான வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. அவ்வாறு, ஒரு காலத்தில் விலை உயர்ந்த, அரிய விஷயங்கள் தற்போது சாதாரண கார்களில் காணக் கிடைப்பது அந்த தொழில்நுட்பத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
These are the top 10 technology which are used in everyday car are derived from race car technology.
Please Wait while comments are loading...

Latest Photos