கார் விற்பனைக் கணக்கில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய ஃபியட் நிறுவனம்

By Meena

கார் உற்பத்தியில் உலகின் 7 - ஆவது மிகப் பெரிய நிறுவனமாக திகழ்வது ஃபியட் கிரிஸ்லெர் ஆட்டோ மொபைல்ஸ் லிமிடெட். சர்வதேச அளவில் இந்த நிறுவனம் தயாரித்த கார்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. கூடவே நன்மதிப்பும் சேர்ந்துள்ளது.

இத்தாலி மற்றும் அமெரிக்க கூட்டு நிறுவனமான ஃபியட் கிரிஸ்லெர் ஆட்டோ மொபைல்ஸ் லிமிடெட், பல்வேறு புதிய சாதனைகளை எட்டிப் பிடிக்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்தான் புதிய சர்ச்சை ஒன்றில் அது சிக்கியுள்ளது.

ஃபியட் சர்ச்சை

விற்பனை எண்ணிக்கையில் முறைகேடு செய்ததாகவும், பொய்யான விற்பனை கணக்குகளை எழுதி சரிவர செயல்படாத டீலர்களுக்குக் கூட வெகுமதி வழங்கியதாகவும் ஃபியட் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஃபியட் நிறுவன டீலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து, அமெரிக்க நீதித் துறை, பங்கு - பரிவர்த்தனை வாரியம், அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (எஃப்.பி.ஐ.) ஆகிய அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் வசமாக சிக்கியுள்ளது ஃபியட் கிரிஸ்லெர் நிறுவனம்.

கிரிஸ்லெர் நிறுவனம் திவால் கணக்கு காட்டிய கம்பெனிகளில் ஒன்று. இந்நிலையில், ஃபியட்டுடன் இணைந்து கடந்த 75 மாதங்களாக லாபக் கணக்குகளை அளித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் செய்தி வெளியிட்ட ஆட்டோமோடிவ் நியூஸ் என்ற பத்திரிகை, கடந்த 11-ஆம் தேதி ஃபியட் கிரிஸ்லெர் நிறுவன மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

இதேபோல், அந்நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. விற்பனை எண்ணிக்கை முறைகேட்டு விசாரணைக்குள் சிக்கியிருப்பதை ஃபியட் நிறுவனம் மறுக்கவில்லை.

மாறாக, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் விசாரணை நடவடிக்கைகளுக்கு, தாங்கள் முழு ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்துள்ளது.

விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கைகள் வெளியானால்தான் இந்த விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். அந்த அறிக்கை சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி மார்க்கெட்டில் ஃபியட் நிறுவனத்துக்கு பல சோதனைகள் இனி காத்திருக்கின்றன...

Most Read Articles
English summary
Fiat Under Investigation Over Possible Fraudulent Sales Figures.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X