கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஃபோர்டு முதலிடம்!

Written By:

கடந்த மாதம் கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் கார் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஃபோர்டு கார் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. உள்நாட்டு கார் விற்பனையில் மாருதி நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட பாதியளவு சந்தை பங்களிப்பை மாருதி பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் உள்ளது.

ஆனால், இந்தியாவின் கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம்தான் முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஃபோர்டு கார் நிறுவனம் முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. இது ஹூண்டாய் நிறுவனத்துக்கு சற்று அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த மாதத்தில் எந்தெந்த நிறுவனம் எவ்வளவு கார்களை ஏற்றுமதி செய்திருக்கின்றன என்ற தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

01. ஃபோர்டு

கடந்த மாதத்தில் 17,860 கார்களை ஃபோர்டு கார் நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கிறது. வெளிநாடுகளில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு நல்ல டிமான்ட் இருப்பதால், அதன் ஏற்றுமதி சிறப்பாக இருக்கிறது. ஈக்கோஸ்போர்ட்தான் ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அதற்கடுத்து, ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் ஃபோர்டு நிறுவனத்தின் ஏற்றுமதி 44 சதவீத வளர்ச்சியை இதுவரை பதிவு செய்திருக்கிறது.

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த மாதத்தில் 16,506 ஹூண்டாய் கார்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி சற்றே சரிவை சந்திந்துள்ளது.

03. மாருதி சுஸுகி

கடந்த மாதம் மாருதி நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 12,131 கார்களை மாருதி கார் நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது மாருதி. தொடர்ந்து ஃபோர்டு ஆதிக்கம் தொடர்ந்தால் மாருதி இந்த இடத்திலேயே வைக்கப்படும் நிலை ஏற்படும்.

04. நிசான்

நிசான் நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 9,232 கார்களை நிசான் ஏற்றுமதி செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் மைக்ரா கார் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், ஏற்றுமதியில் இந்தியாவின் சிறந்த மாடல்களில் ஒன்றாகவும் நிசான் மைக்ரா தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

05. ஃபோக்ஸ்வேகன்

உள்நாட்டு விற்பனையில் பின்தங்கி இருக்கும் நிறுவனங்கள் பல ஏற்றுமதியில் அசத்தி வருகின்றன. அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 7,538 கார்களை ஃபோக்ஸ்வேகன் ஏற்றுமதி செய்திருக்கிறது. மேலும், உள்நாட்டு விற்பனையைவிட ஏற்றுமதியின் மூலமாக சிறப்பான வர்த்தகத்தை இவை பெற்று வருகின்றன.

06. ஜெனரல் மோட்டார்ஸ்

செவர்லே பிராண்டில் கார்களை விற்பனை செய்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 7,044 கார்களை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏற்றுமதியை வைத்துத்தான் இந்திய வர்த்தகத்தை ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சமாளித்து வருவதும் புலனாகிறது.

07. ரெனோ

கடந்த மாதத்தில் 1,371 கார்களை ரெனோ கார் நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கிறது. மேலும், க்விட் காரை சர்வதேச சந்தையில் கொண்டு செல்லும் முயற்சியும், ரெனோ டஸ்ட்டரும் ஏற்றுமதியில் ரெனோ இந்தியா கார் நிறுவனத்துக்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08. டொயோட்டா

டொயோட்டா கார் நிறுவனம் 8வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 1,242 கார்களை டொயோட்டா ஏற்றுமதி செய்திருக்கிறது. உலக அளவில் கார் உற்பத்தியில் டொயோட்டா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

09. மஹிந்திரா

இந்தியாவின் மிகப்பெரிய வாகன குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா கடந்த மாதம் 9வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 1,021 கார்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கிறது.

10. டாடா மோட்டார்ஸ்

வாகன உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவில் முன்னிலை பெற தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த மாதத்தில் 867 பயணிகள் வாகனங்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கிறது.

இதர நிறுவனங்கள்

ஹோண்டா கார் நிறுவனம் 600 கார்களையும், ஃபியட் நிருவனம் 71 கார்களையும் கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்திருக்கின்றன.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, September 22, 2016, 11:15 [IST]
English summary
Ford Tops in Car export in India August 2016. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos