ஜிஎஸ்டி வரியால் சிறிய கார் விலை தடாலடியாக குறைய வாய்ப்பில்லை?

Written By:

நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டு வருவதற்காக சரக்கு மற்றும் சேவை வரி[ஜிஎஸ்டி] விதிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது. புதிய வரிக்கொள்கையின்படி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்ற முறையில் வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு முறையால் கார் மார்க்கெட்டுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, சிறிய வகை கார்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, ஜிஎஸ்டி வரியால் கார் மார்க்கெட்டிற்கு பெரிய அளவிலான நன்மைகளை எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய வகை கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது சிறிய வகை கார்களுக்கு கிட்டத்தட்ட 30 சதவீதம் வரி விதிப்பு இருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் 12 சதவீதம் வரை வரி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சிறிய வகை கார்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் கார் விலையில் அனேகமாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. அப்படி இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் விலை கூடுமே தவிர, குறையாது என்று தகவல்கள் கூறுகின்றன.

நடுத்தர வகை கார்களுக்கு இப்போது 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இந்த கார்களுக்கு 28 சதவீத வரி ஜிஎஸ்டி வரியுடன், கூடுதலாக கல்வி வரியும் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், நடுத்தர வகை கார்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட அதே 40 சதவீத வரி விதிக்கப்படும்.

மாருதி சியாஸ், மாருதி எர்டிகா கார்களின் ஹைபிரிட் எரிபொருள் வகை மாடல்களுக்கு மத்திய அரசின் ஃபேம் திட்டத்தின்கீழ் மானியச் சலுகை கிடைக்கும் என்பதால் அவற்றின் விலை சற்றே குறைவாக இருக்கலாம்.

சொகுசு காரகளுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி மற்றும் கல்வி வரியுடன் சேர்த்து கிட்டத்தட்ட 40 சதவீத வரி விதிக்கப்படும். அதாவது, தற்போதுள்ள 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால், சொகுசு கார்களின் விலை ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று இறக்குமதி கார்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்தும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

சிறிய கார்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மூலமாக 12 சதவீதம் வரை வரி குறையும். இதனால், கார் விலை குறையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களால் அடுத்த ஆண்டு சிறிய கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக இருக்கிறது.

அதேபோன்று, வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டால் கார் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்படும். அதன் மூலமாக கார் விற்பனை அதிக வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கார் நிறுவனங்களுக்கும் இந்த தகவல்கள் ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது.

ஆனால், இந்த வரி விதிப்பு குறித்து உறுதியான தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. மொத்தத்தில் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் கார் மார்க்கெட்டுக்கு பெரிய அளவிலான பலன் கிடைக்காது என்று இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Friday, November 4, 2016, 10:08 [IST]
English summary
GST Impact on Car Prices- Analysis.
Please Wait while comments are loading...

Latest Photos