சென்னை ஹூண்டாய் ஆலையில் 7 மில்லியன் கார்கள் உற்பத்தி!

Written By:

நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதோடு, பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ஹூண்டாய் கார் ஆலை மகத்தான புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. ஆம், அந்த ஆலையில் இதுவரை 70 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

70 லட்சமாவது காராக ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் உற்பத்தி பிரிவிலிருந்து நேற்று வெளிவந்தது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ மற்றும் உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் கணேஷ் மணி ஆகியோர் இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி சரியாக 18 ஆண்டுகளில் இந்த சாதனையை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி என்ற அளவுடன் தொடர்ந்து பல புதிய மைல்கல்களை இந்த ஆலை கடந்து வருகிறது.

அதாவது, ஹூண்டாய் நிறுவனத்துக்கு உலக அளவில் உள்ள கார் ஆலைகளில் சீனாவுக்கு அடுத்து அதிக கார்களை உற்பத்தி செய்யும் கார் ஆலையாக சென்னை ஹூண்டாய் ஆலை பெருமை பெற்றிருக்கிறது.

1998ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட சென்னை ஹூண்டாய் ஆலையில் 2006ம் ஆண்டு ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை தாண்டியது. அப்போது சான்ட்ரோ கார் ஒரு மில்லியனாவது கார் என்ற பெருமையுடன் உற்பத்திப் பிரிவிலிருந்து வெளிவந்தது.

2013ம் ஆண்டில் 5 மில்லியனாவது கார் பாலிவுட் நடிகரும், ஹூண்டாய் விளம்பர தூதருமான ஷாரூக்கான் முன்னிலையில் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது. தற்போது ஹூண்டாய் க்ரெட்டா 7 மில்லியனாவது காராக உற்பத்திப் பிரிவிலிருந்து வெளிவந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு நாட்டின் மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனம் என்ற பெருமையையும் ஹூண்டாய் தக்க வைத்து வந்தது. மொத்தம் 24,64,723 கார்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

"வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளதாக ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ தெரிவித்தார். ஹூண்டாய் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவும், ஒத்துழைப்பையும் நல்கி வரும் தமிழக அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பில் ஹூண்டாய் கார் ஆலை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அத்துடன், சமூக நல திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Hyundai created history by rolling out its 7 millionth car from its production line in its state-of-art facility in Sriperumbudur in Chennai.
Please Wait while comments are loading...

Latest Photos