ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- அனைத்து விபரங்களும் இங்கே!

Written By:

எஸ்யூவி வகை கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை மனதில் கொண்டு பல புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்கி வருகின்றன கார் தயாரிப்பு நிறுவனங்கள். அந்த வகையில், க்ரெட்டா மூலமாக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இன்று புதிய டூஸான் எஸ்யூவி வகை கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் இடம்பெற்று இருக்கும் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி 4,475மிமீ நீளமும், 1,850மிமீ அகலமும், 1,660மிமீ உயரமும் கொண்டது. ரூஃப் ரெயில்கள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றிருக்கிறது.

வழக்கம்போல் ஹூண்டாய் கார்களுக்கு உரிய முத்தாய்ப்பான பல டிசைன் அம்சங்களை இந்த கார் பெற்று இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், கண்ணை கவரும் ஹெட்லைட் அமைப்பு, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும், அறுகோண வடிவிலான க்ரோம் பட்டைகள் கொண்ட க்ரில் அமைப்பு, கச்சிதமான பம்பவர் மற்றும் பனிவிளக்குகள் என அனைத்தும் பிரிமியமான மாடலாக காட்டுகிறது.

பெரிய வீல் ஆர்ச்சுகள், வலுவான பாடி லைன்கள், மெல்லிய ரூஃப் ரெயில்களுடன் பக்கவாட்டு டிசைனும் சிறப்பாக பொருந்தியிருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் இருப்பது போன்ற சற்றே மாறுதல்கள் கொண்ட டெயில் லைட் வலுவான பம்பர் மற்றும் அதனுடன் இயைந்துள்ள ஸ்கிட் பிளேட், இரட்டை புகைப்போக்கி குழாய்கள் ஆகியவை மிக நேர்த்தியாக இருக்கின்றன.

இன்டீரியரிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய டூஸான் எஸ்யூவியில் 8 அங்குல வடிவத்திலான தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் உள்ளது.

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் சப்போர்ட் செய்யும். சாட்டிலைட் நேவிகேஷன் வசதி, 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், லெதர் இருக்கைகள், டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டி குறைப்பதற்கான வசதி என நவீன வசதிகள் பலவற்றை கொண்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 13.03 கிமீ மைலேஜ் வரையிலும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 12.95 கிமீ மைலேஜ் தரும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 182 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.42 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.38 கிமீ மைலேஜையும் வழங்கும்.

'ஹூண்டாய் டூஸான் மாடலில் 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை அனுப்பும் இபிடி தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வாகனத்தை சரியான சமநிலையில் செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சரிவான சாலைகளில் கார் பின்னோக்கிச் செல்வதை தவிர்க்கும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

விலை விபரம்

  • பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ்: ரூ.18.99 லட்சம்
  • பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஜிஎல்: ரூ.21.79 லட்சம்
  • டீசல் மேனுவல் கியர்பாக்ஸ்: ரூ.21.59 லட்சம்
  • டீசல் ஆட்டோமேட்டிக் ஜிஎல்: ரூ.23.48 லட்சம்
  • டீசல் ஆட்டோமேட்டிக் ஜிஎல்எஸ்: ரூ.24.99 லட்சம்

English summary
Hyundai's new Tucson comes with two new engines, a brand new interior and a whole host of safety features.
Please Wait while comments are loading...

Latest Photos