கார் உற்பத்தியில் தென்கொரியாவை வீழ்த்தி 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

Written By:

கார் உற்பத்தியில் உலக அரங்கில் வெகு வேகமான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது இந்தியா. இதனை உணர்த்தும் விதத்தில், தற்போது கார் உற்பத்தியில் 5வது பெரிய நாடாக உயர்ந்துள்ளது.

கார் உற்பத்தியில் தென்கொரியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் தென்கொரியாவில் 2.55 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் 2.57 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தளவுக்கு இந்த செய்திக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன தெரியுமா?

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கார் உற்பத்தியில் உலகின் 5வது நாடு என்ற பெருமையை தென்கொரியா தக்க வைத்து இருந்தது. இந்தநிலையில், தென்கொரியாவின் ஆஸ்தான இடத்தை அசைத்து முன்னேறியிருக்கிறது இந்தியா.

இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் உள்நாட்டு கார் விற்பனை மிக நிலையான வளர்ச்சியை பெற்று வருகிறது. ஆனால், தென்கொரியாவின் உள்நாட்டு கார் விற்பனையும், ஏற்றுமதியும் டல் அடித்துவிட்டது.

மறுபுறத்தில் ஊதிய உயர்வுக்காக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் உற்பத்தி வரி அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.

எனினும், மிக குறைந்த வித்தியாசத்தில் இந்தியா 5வது இடத்தை பிடித்திருந்தாலும், நம் நாட்டின் உள்நாட்டு விற்பனை வளர்ச்சி சீராக இருப்பதால், இந்த இடத்தை தக்க வைக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

உலக அளவில் கார் உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் தென்கொரிய நாடுகள் இருந்தன. தற்போது இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

வரும் 2020ம் ஆண்டில் கார் உற்பத்தியில் உலக அளவில் டாப் 3 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு, நிசான் - ரெனோ, ஹூண்டாய் உள்ளிளிட்ட பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவை முக்கிய உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்தி வருகின்றன. மேலும், குஜராத்தில் புதிய கார் ஆலையை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி அமைத்து வருகிறது. இந்த புதிய ஆலை செயல்பட துவங்கியதும் கார் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

அதேபோன்று, தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனமும் இந்தியாவில் கார் உற்பத்தி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது. உள்நாட்டு நுகர்வும் சிறப்பாக இருப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் கார் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Thursday, September 29, 2016, 10:10 [IST]
English summary
India Emerges As 5th Largest Car Maker In The World 2016. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos