பயோ- டீசலில் இயங்கும் ஸ்கானியா சொகுசு பஸ்கள்: கேஎஸ்ஆர்டிசி அறிமுகம்!

பயோ டீசலில் இயங்கும் ஸ்கானியா மல்டி ஆக்சில் பஸ்களை கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.

Written By:

வாகனங்கள் வெளியிடும் புகையில் இருக்கும் நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு உமிழ்வை குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், குறைவான மாசு உமிழ்வு தன்மை கொண்ட சொகுசு பஸ் மாடல்களை ஸ்கானியாக நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பஸ் மாடல்களை கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம்[KSRTC] பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக இந்த பயோ டீசலில் இயங்கும் சிறப்பம்சத்துடன் ஸ்கானியா நிறுவனத்தின் சொகுசு பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இந்த புதிய பஸ் மாடல்களை பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த பஸ்களின் சிறப்புகள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சாதாரண டீசலில் இயங்கும் பஸ்களைவிட பயோ டீசலில் இயங்கும் பஸ்களிலிருந்து வெளியேறும் மாசு உமிழ்வு 60 முதல் 70 சதவீதம் குறைவாக இருக்கும் என்பதே ஆகச் சிறந்த விஷயம். கனரக வாகனங்கள் வெளியிடும் புகையிலிருந்து வெளிப்படும் நச்சுப் பொருட்கள் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு விளைவித்து வரும் நிலையில், இந்த பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் வந்துள்ளது.

மொத்தம் 25 பயோ டீசல் மல்டி ஆக்சில் பஸ்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இடையிலான நீண்ட தூர வழித்தடங்களில் இந்த பயோ டீசல் பஸ்கள் சேவைக்கு வந்துள்ளன.

இந்த பஸ்கள் பயோ டீசல் அல்லது டீசல் என இரண்டிலும் இயக்கும் சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. பயோ டீசல் இல்லாதபட்சத்தில் சாதாரண டீசலிலும் இயக்க முடியும். இந்த பஸ்களுக்கான பயோ டீசல் தெலங்கானா மாநிலத்திலிருந்து சப்ளை செய்யப்பட உள்ளது.

தற்போது பயோ டீசல் உற்பத்தி குறைவாக இருந்தாலும், அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதால், எதிர்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலத்தில் வாங்க திட்டமிடப்பட்டிருக்கும் அனைத்து டீசல் பஸ் மாடல்களிலும், பயோ டீசலில் இயங்கும் சிறப்பம்சத்துடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கேஎஸ்ஆர்டிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கான முன்மாதிரியான முயற்சியாக இருக்கும்.

ஏற்கனவே உள்ள டீசல் பஸ்களில் எந்த விதமான மாறுதல்களும் இல்லாமல், 20 சதவீதம் பயோ டீசலும் 80 சதவீதம் சாதாரண டீசலும் கலந்து இயக்குவதற்கும் திட்டமிட்டு இருப்பதாக கேஎஸ்ஆர்டிசி தெரிவித்துள்ளது.

பெங்களூர்- குந்தாப்பூர், பெங்களூர் - பீதர், பெங்களூர்- திருப்பதி மற்றும் பெங்களூர்- சென்னை ஆகிய வழித்தடங்களில் இந்த பயோ டீசல் பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பஸ்களுக்கான கட்டணத்தில் எந்தவித மாறுதல்கள் இல்லை. ஏற்கனவே, வசூலிக்கப்பட்ட அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, December 26, 2016, 11:30 [IST]
English summary
KSRTC Introduces Scania bio-diesel buses.
Please Wait while comments are loading...

Latest Photos