2017ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதை தட்டிச் சென்ற மாருதி பிரெஸ்ஸா!

Written By:

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் புதிய கார் மற்றும் பைக்குகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2017ம் ஆண்டிற்கான சிறந்த கார் மாடலை தேர்வு செய்யும் பணிகளை விருது வழங்கும் அமைப்பு செய்தது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கைகளை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் அடங்கிய நடுவர் குழு சிறந்த கார் மற்றும் பைக் மாடலை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டது. பல்வேறு அம்சங்கள் மற்றும் காரணிகள் அடிப்படையில் சிறந்த கார் மற்றும் பைக்கை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.

நாட்டின் மதிப்புமிக்க இந்த விருதுக்காக புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா சூப்பர்ப், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஹோண்டா பிஆர்வி, ஆடி ஏ4, டட்சன் ரெடிகோ, ஜாகுவார் எக்ஸ்இ, மஹிந்திரா கேயூவி100, ஃபோக்ஸ்வேகன் அமியோ, மஹிந்திரா நூவோஸ்போர்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி உள்ளிட்ட பல புதிய கார் மாடல்கள் போட்டியிட்டன.

பல கட்ட வடிகட்டல்களுக்கு பிறகு ஹூண்டாய் எலான்ட்ரா, ஹூண்டாய் டூஸான், இசுஸூ டி மேக்ஸ் வி-க்ராஸ், ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்1, மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா டியாகோ உள்ளிட்ட கார் மாடல்கள் விருதை பெற களத்தில் இருந்தன.

இறுதியில், 2017ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் மாடலை விருதுக்கு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வந்த மாருதி பிரெஸ்ஸா கார் விற்பனையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

போர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி100 போன்ற போட்டியாளர்களையும் விற்பனைக்கு வந்த வேகத்தில் கீழே தள்ளி முன்னிலை பெற்றது. மாருதி நிறுவனத்தின் சாதாரண கார் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்ததும் இந்த காருக்கான வரவேற்பை அதிகரித்து.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் 88.5 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. மைலேஜிலும் சிறப்பான எஸ்யூவி மாடலாக இருந்து வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டதும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

இதுவரை 60,000 மாருதி பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாத நிலவரப்படி, விற்பனைக்கு வந்தது முதல் இதுவரை 1.72 லட்சம் முன்பதிவுகளை மாருதி பிரெஸ்ஸா கார் பெற்றிருக்கிறது.

கிட்டத்தட்ட 3 முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடித்தாலும், வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். சிறந்த தயாரிப்புகளுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் ஆதரவு தருவார்கள் என்பது இதன்மூலமாக தெரிகிறது.

இந்த காருக்கு ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் மாருதி பிரெஸ்ஸாவுக்கு அதிக ஆதரவை வழங்கி வருகின்றனர். மாருதி பிரெஸ்ஸா கார் ரூ.7.19 லட்சம் முதல் ரூ.9.66 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

பல போட்டியாளர்கள் மோதினாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பின்னுக்குத் தள்ளி இந்த விருதை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் பெற்றிருப்பது கவனிக்கத்த விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸா காரின் விற்பனைக்கு மேலும் வலுவூட்டும் விஷயமாகவே கருதலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki Vitara Brezza has won the Indian Car Of The Year (ICOTY) 2017 award.
Please Wait while comments are loading...

Latest Photos