மாருதி ஸ்விஃப்ட் டெக்கா எடிசன்: டக்கரான அம்சங்கள் என்னென்ன?

Written By:

இந்திய வாடிக்கையாளர்களால் ஆராதிக்கப்படும் மாருதி ஸ்விஃப்ட் கார் தற்போது புதிய மாடல்களால் சற்று நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்த நெருக்கடியை போக்கிக்கொள்ளும் விதத்தில், கூடுதல் வசதிகளுடன் மாருதி ஸ்விஃப்ட் டெக்கா என்ற சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. கால் பந்தாட்டத்தில் 10ம் நம்பர் ஜெர்ஸியுடன் ஜொலித்த ஜாம்பவான்களை போன்று, கார் மார்க்கெட்டில் ஜொலிக்கும் ஸ்விஃப்ட் காரின் பெர்ஃபார்மென்ஸை உணர்த்தும் விதத்தில் இந்த பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதாவது, Deca என்பது ஆங்கிலத்தில் 10 என்ற எண்ணை குறிக்கிறது. எனவே, 10 ஆம் எண் ஜெர்ஸியுடன் கால் பந்தாட்ட விளையாட்டில் ஜொலித்த பிரேசில் நாட்டின் ரிவால்டோ, பிரான்ஸ் நாட்டின் ஜிடேன், அர்ஜென்டினா நாட்டின் மரடோனா ஆகியோரை பிரதிபலிக்கும் விதத்தில் இந்த மாடல் களமிறங்கியிருக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு நிறைவான வசதிகளுடன் அசத்தும் இந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் டெக்கா எடிசனில் இருக்கும் 10 முக்கிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. வெளிப்புறத்தில் பார்த்தவுடனே இதன் தனித்துவத்தை சட்டென தெரிகிறது. காரின் முன்புறத்திலிருந்து கூரை வழியாக பின்புறம் வரை இரண்டு வெள்ளை நிற பட்டை கோடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பக்கவாட்டிலும் இந்த பட்டை கோடுகள் உள்ளன என்பதுடன், 10 என்ற எண்ணும் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருக்கிறது. சைடு மிரர்கள் இரட்டை வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஸ்கர்ட்டுகளுடன் கூடிய பம்பர் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது.

2. சிலருக்கு இந்த சிவப்பு வண்ணம் பிடிக்கவில்லையெனில், பியர்ல் ஒயிட் என்ற வெள்ளை வண்ண ஆப்ஷனும் உண்டு.

3. வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் ஏராளமான சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இருக்கைகள் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் கவர்கின்றன. இருக்கையின் நடுப்பகுதியில் 10 என்ற எண் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது காரின் இன்டீரியருக்கு தனித்துவத்தை அளிக்கிறது.

4. இருக்கைகள் சொகுசாகவும், தனித்துவமாகவும் இருப்பதோடு, ஆர்ம் ரெஸ்ட்டுகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஸ்டீயரிங் வீலும், கருப்பு- சிவப்பு வண்ண கவர் போடப்பட்டிருக்கிறது.

5. ஸ்விஃப்ட் காரை வாங்கும் பலர், டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டத்தை மாற்றுவது வழக்கம். அந்த பிரச்னையை தவிர்க்கும் விதத்தில், இந்த காரில் சோனி பிராண்டின் டச்ஸ்கிரீன் திரையுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் உள்ளது. புளூடுத் இணைப்பு, யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் வசதிகளுடன் கவர்கிறது. மேலும், 6 இன்ச் விட்டமுடைய 4 சோனி ஸ்பீக்கர்கள் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

6. இந்த காரின் டேஷ்போர்டில் சென்டர் கன்சோல் மற்றும் கதவுகளின் உட்பக்கத்தில் ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் அலங்காரத்துடன் தனித்துவத்தை பெற்றிருக்கிறது. இது டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் அமைப்பின் கவர்ச்சியை கூட்டியிருக்கிறது.

7. மாருதி ஸ்விஃப்ட் டெக்கா எடிசனில் சிவப்பு வண்ண ஆம்பியன்ட் அலங்கார விளக்குகள் உள்ளன. இது நீண்டதூர பயணத்திற்கு இனிமை சேர்க்கும் விஷயம்.

8. மாருதி ஸ்விஃப்ட் டெக்கா எடிசன் மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்ரும் சென்சார்கள் நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீயாக இடம்பெற்றுள்ளது. சென்டர் கன்சோலில் இருக்கும் சோனி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் டச் ஸ்கிரீனுடன் இந்த ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா இணைக்கப்பட்டிருக்கிறது.

9. மாருதி ஸ்விஃப்ட் டெக்கா எடிசன் VXi மற்றும் VDi ஆகிய நடுத்தர வகை வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சினும் உள்ளன. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

10. மாருதி ஸ்விஃப்ட் டெக்கா எடிசனின் பெட்ரோல் மாடல் ரூ.5.94 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.87 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். இது லிமிடேட் எடிசன் என்பதால், சீக்கிரமே முன்பதிவு செய்துவிடுங்கள். கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான வசதிகளுடன் வந்திருக்கிறது இந்த மாருதி ஸ்விஃப்ட் டெக்கா எடிசன்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Wednesday, September 14, 2016, 16:33 [IST]
English summary
Maruti Swift Deca: Top 10 Highlights That Make This Limited Edition Swift The Most Sought After Car. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos