டாடா ஹெக்ஸா எஸ்யூவி பெங்களூர் டீலர்ஷிப்பில் தரிசனம்!

Written By:

டாடா ஹெக்ஸா எஸ்யூவி கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்திலும் இந்த கார் மிக சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான் பேராவலை தூண்டியிருக்கிறது.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்புகளுக்கு ஹெக்ஸா கார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. பெங்களூரில் உள்ள டீலர்ஷிப்புக்கு வந்த புதிய டாடா ஹெக்ஸா காரை எமது வாசகர் விக்கி ஹன்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளார். அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஆரியா காருக்கு மாற்றாக இந்த புதிய டாடா ஹெக்ஸா கார் நிலைநிறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆரியா பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் மொத்தம் 14 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. XE, XT, XMA, XTA என கியர்பாக்ஸ் ஆப்ஷன் மற்றும் இருக்கை வசதியை பொறுத்து பல வேரியண்ட்டுகளில் வருகிறது.

 

இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். மேலும், இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இருவிதமான சக்தியை வெளிப்படுத்தும் மாடல்களில் வருகிறது.

வேரிகோர்300 மாடலின் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும், வேரிகோர்400 டீசல் எஞ்சின் மாடல் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும் இருக்கும். வேரிகோர் 300 மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கிறது.

வேரிகோர்400 மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் நான்கு விதமான டிரைவிங் மோடுகள் கொண்டதாக கிடைக்கும்.

ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், உயர்தர லெதர் இன்டீரியர் போன்ற பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இந்த காரில் ஹார்மன் நிறுவனத்தின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 6 உயிர் காக்கும் காற்றுப் பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுடன் போட்டி போடும்.

ஸ்பை படங்கள் உதவி: விக்கி ஹன்ட்டர்

Story first published: Tuesday, December 6, 2016, 18:34 [IST]
English summary
Tata Hexa SUV spotted in dealerships ahead of launch.
Please Wait while comments are loading...

Latest Photos