ஆயிரம் கோடி ரூபாயை விழுங்கிய நானோ காரை கட்டிக் கொண்டு அழுவது ஏன்? - சைரஸ் மிஸ்திரி காட்டம்!

Written By:

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடியாக தூக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் பெரும் எதிர்பார்ப்பை எதிர்பார்த்த டாடா சன்ஸ் போர்டு உறுப்பினர்களுக்கு, மிஸ்திரியின் செயல்பாடுகள் ஏமாற்றம் தந்ததுடன், பெரும் இழப்பும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாடா சன்ஸ் குழுமத்தின் போர்டு உறுப்பினர்களுக்கு சைரஸ் மிஸ்திரி 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டாடா குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார். குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நானோ கார் திட்டம்தான் பெரும் தடைக்கல்லாக அமைந்துவிட்டதாக மறைமுகமாக ரத்தன் டாடாவையும் குறை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து, அவர் டாடா சன்ஸ் குழுமத்தின் போர்டு உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் ஆக்ரோஷமாக பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ரத்தன் டாடாவை குறிவைத்து அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

டாடா நானோ கார் தோல்வி என்ற தெரிந்த பின்னும், அந்த காரின் உற்பத்தி தொடர்வதற்கு உணர்ச்சி ரீதியிலான விஷயங்களே காரணம். நானோ கார் மூலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி வரை பெரும் இழப்பு ஏற்பட்டது.

அந்த காரின் உற்பத்தியை நிறுத்தாதற்கு மற்றொரு காரணம், நானோ அடிப்படையிலான எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்திருப்பதே. நானோ உற்பத்தியை நிறுத்தினால், அந்த எலக்ட்ரிக் கார் நிறுவனத்தையும் மூட வேண்டியிருந்திருக்கும்," என்று கூறியிருக்கிறார்.

ரத்தன் டாடாவின் கனவு காராக உருவாக்கப்பட்ட நானோ கார் பெரும் தோல்வியடைந்த பின்னரும், அதனை வெற்றி பெற வைப்பதிலேயே டாடா மோட்டார்ஸ் குறியாக இருந்தது. புதிய கார்களை அறிமுகம் செய்வதில் அவர்கள் நாட்டம் செலுத்தவில்லை என்று டாடா மோட்டார்ஸ் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தியதற்கு காரணமே நானோ கார்தான் என்று உணர்த்தியிருக்கிறார் சைரஸ் மிஸ்திரி. உலகின் குறைந்த விலை காரான நானோவை தயாரிப்பதற்கு எடுத்த முயற்சிகளும், பெரும் முதலீடுகளமே முக்கிய காரணம்.

கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி வரை டாடா நானோ கார் தயாரிப்புக்கும், சந்தைப்படுத்துதலுக்கும் செலவிடப்பட்டிருக்கிறது. இதற்காக, டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதி பெறப்பட்டு இந்த திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், நானோ கார் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த சூழலில் அந்த காரின் உற்பத்தியை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், ரத்தன் டாடாவின் மனதில் உருவான திட்டம் என்பதால் தொடர்ந்து அந்த காருக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் டாடா மோட்டார்ஸ் தவறிவிட்டதாக அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நானோ கார் அறிமுகம் செய்யப்பட்ட 2009 ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை நம் நாட்டு மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட புதிய கார்கள் அறிமுகமாகியிருக்கின்றன. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு புதிய காரை கூட அறிமுகம் செய்யவில்லை.

குறிப்பாக, காம்பேக்ட் எஸ்யூவி, காம்பேக்ட் எம்பிவி போன்ற அதிக வர்த்தக வாய்ப்புள்ள செக்மென்ட்டுகளில் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த டாடா தவறியது. 2014ம் ஆண்டில்தான் போல்ட், ஸெஸ்ட் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுவே அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாதகமாக அமைந்துவிட்டதாக சைரஸ் மிஸ்திரி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் செல்லும் குடும்பத்தினர் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவான மாடலாக டாடா நானோ கார் திட்டத்தை கையிலெடுத்தனர்.

இதற்காக, மேற்குவங்கத்தில் புதிய ஆலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, அங்கிருந்த டாடா நானோ கார் ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், மேற்கு வங்க ஆலை கட்டுமானத்தில் பெரும் இழப்பையும் டாடா மோட்டார்ஸ் சந்தித்தது.

ஒரு லட்ச ரூபாய் கார் என்ற முழக்கத்துடன் வந்த நானோ கார் எதிர்பார்த்தபடி விற்பனையிலும் எதிர்பார்த்தபடி போனியாகவில்லை. இதனால், டாடா நானோ திட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனாலும், அந்த காரின் உற்பத்தியை நிறுத்தாமல் அந்த காரை எப்படியாவது வெற்றி பெற வைக்கும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.

தற்போது டாடா நானோ காரை மேம்படுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதனை பெலிக்கன் என்ற புதிய பெயரில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைரஸ் மிஸ்திரி கூறியிருக்கும் கருத்துக்கள் பொருத்தமானதா, டாடா நானோ காரின் உற்பத்தியை நிறுத்துவதே சிறந்த வழியா அல்லது அது தொடர வேண்டுமா என்பது பற்றிய உங்களது கருத்துக்களையும் கருத்துப் பெட்டியில் முன் வைக்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, October 27, 2016, 14:00 [IST]
English summary
Tata Nano Car Project Should Be Shut: Cyrus Mistry.
Please Wait while comments are loading...

Latest Photos