இந்தியாவின் டாப் - 10 ஸ்போர்ட்ஸ் கார் மாடல்கள் - சிறப்புத் தொகுப்பு!

இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த 10 ஸ்போர்ட்ஸ் கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

பந்தய களத்தில் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து தலை தெறிக்க ஓடும் ரேஸ் கார்களை பார்த்து வியந்து போன கார் பிரியர்கள், அதேபோன்ற செயல்திறன் மிக்க கார்களை வாங்குவதற்கு ஆவல் கொண்டிருந்தனர். அவர்களது ஆர்வத்தையும், தாகத்தையும் தணிக்கும் விதத்தில், சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களுடன் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் வெளியிடப்பட்டன.

அந்த கார்களுக்கு ஆதரவு அமோகமாக பெருகியதையடுத்து, பல நிறுவனங்கள் இந்த ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் கால் பதித்தன. அதில், உலக அளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த ஸ்போர்ட்ஸ் கார்கள் தற்போது இந்தியாவிலும் சர்வசாதாரணமாக பறக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், இந்தியாவில் விற்பனையாகும் டாப் - 10 ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

10. ஜாகுவார் எஃப்- டைப் [ஆர் கூபே]

உலக அளவில் அழகிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்று கார் பிரியர்களால் புகழப்படும் மாடல். மிக கவர்ச்சிகரமான டிசைன், ஜாகுவார் பிராண்டின் மதிப்பு இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

இந்த காரில் இருக்கும் 5,000சிசி எஞ்சின் அதிகபட்சமாக 543 பிஎச்பி பவரையும், 680 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. லிட்டருக்கு 14.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படும் இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 73 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. மணிக்கு 299 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. ரூ.1.94 கோடி விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

09. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி- ஜிடி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் செயல்திறன்மிக்க கார்களை உருவாக்கும் பிரிவுதான் ஏஎம்ஜி. அதன் கைவண்ணத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. ஏஎம்ஜி பிராண்டின் பிரத்யேக பாடி கிட் மற்றும் அதிசக்திவாய்ந்த எஞ்சின் இந்த காருக்கு மதிப்பு தரும் விஷயம்.

இந்த காரில் 3,982சிசி எஞ்சின் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு பேர் பயணிப்பதற்கு வசதி கொண்ட இந்த கார் லிட்டருக்கு 7.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காரில் 75 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளு. ரூ.2.31 கோடி விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

08. ஆடி ஆர்8 வி10 ப்ளஸ்

ஆடி நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆர்8. தனித்துவமான வடிவமைப்பும், செயல்திறன் மிக்க எஞ்சினும் இந்த காரின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றன. இந்த காரில் இருக்கும் 5,204சிசி வி10 எஞ்சின் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இரண்டு பேர் செல்லத்தக்க இந்த கார் லிட்டருக்கு 6.71 கிமீ மைலேஜ் தருமாம். இந்த காரிலும் 75 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. ரூ.2.47 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

07. போர்ஷே 911 டர்போ எஸ்

மிக தனித்துவமான வடிவமைப்பால் உலக அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல். நீண்ட பாரம்பரியமும், தொழில்நுட்பமும் இந்த காருக்கு கூடுதல் வலுசேர்க்கும் அம்சங்கள்.

இந்த காரில் இருக்கும் 3,800சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 560 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது. 4 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டது. ரூ.2.62 கோடி விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மணிக்கு 330 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

06. ஃபெராரி கலிஃபோர்னியா டி

இந்தியாவில் விற்பனையாகும் ஃபெராரி மாடல்களில் குறைவான விலை கொண்டது. இந்த காரில் இருக்கும் 3,855சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 553 பிஎச்பி பவரையும், 755 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. லிட்டருக்கு 9.52 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.3.37 கோடி விலையில் கிடைக்கிறது.

05. லம்போர்கினி ஹூராகென்

உலக அளவில் லம்போர்கினி பிராண்டுக்கான மதிப்பும், வரவேற்பும் தெரிந்த விஷயம். பார்ப்பவர்களை தனது வித்தியாசமான டிசைனால் சுண்டி இழுத்துவிடும். டிசைன் மட்டுமல்ல, எஞ்சின் திறனிலும் சளைத்ததல்ல.

இந்த காரில் இருக்கும் 5,204சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 2 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த கார் லிட்டருக்கு 10.6 கிமீ மைலேஜ் தருமாம். இந்த காரில் 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.3.43 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

04. ஃபெராரி 488ஜிடிபி

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக ஃபெராரி விளங்குகிறது. பேரை கேட்டாலே அதிருதுல்ல, என்பதற்கு ஏற்ப இந்த கார்களின் டிசைனும், செயல்திறனும் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகின்றன. ஃபெராரி 488ஜிடிபி காரில் இருக்கும் 3,902சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 660 பிஎச்பி பவரையும், 760என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 பேர் செல்வதற்கான இந்த கார் லிட்டருக்கு 8.77 கிமீ மைலேஜ் தருமாம். 78 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.3.88 கோடியில் விற்பனை செய்யப்படுகிறது.

03. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

இந்தியாவில் விற்பனையாகும் ஃபெராரி கார்களில் மிக காஸ்ட்லியான மாடல் இதுதான். அதேபோன்று, சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலுமாக இருக்கிறது. பெரும் கோடீஸ்வர்களின் கராஜை அலங்கரிக்கக்கூடிய அம்சங்களை கொண்டது.

இந்த காரில் இருக்கும் 6,262சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 741 பிஎஸ் பவரையும், 690 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டது. இந்த கார் லிட்டருக்கு 5.5 கிமீ மைலேஜ் தருமாம். 92 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.4.72 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

02. அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ்

ஜேம்ஸ்பாண்ட் படப்புகழ் அஸ்டன் மார்ட்டின் பிராண்டுக்கு உலக அளவில் பெரும் ரசிகர்கள் உள்ளது. தனித்துவமான டிசைனும், வல்லமை பொருந்திய எஞ்சினும் இந்த காரின் மீதான மதிப்பை கூட்டச் செய்கின்றன.

இந்த காரில் இருக்கும் 5,935சிசி வி12 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 564 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட இந்த கார் லிட்டருக்கு 8 கிமீ மைலேஜ் தருமாம். 78 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.5.50 கோடி விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

01. லம்போர்கினி அவென்டேடார்

லம்போர்கினி நிறுவனத்தின் காஸ்ட்லியான மாடல். உலக அளவில் வாடிக்கையாளர்களிடத்தில் பேராதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த காரில் 6,498சிசி பெட்ரோல் எஞ்சினும், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 700பிஎஸ் பவரையும்,690 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டது. இந்த கார் லிட்டருக்கு 5 கிமீ முதல் 8 கிமீ வரை மைலேஜ் தருமாம். 90 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.5.05 கோடி முதல் ரூ.5.62 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, November 26, 2016, 13:19 [IST]
English summary
Ten Best Sports Cars Available in India
Please Wait while comments are loading...

Latest Photos