6 ஏர்பேக்குகளுடன் பட்ஜெட் விலையில் அசத்தும் ஃபோர்டு ஃபிகோ கார்...!!

பட்ஜெட் விலையில் அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கும் பட்ஜெட் கார் மாடல் குறித்த விபரங்கள் இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளன.

Written By:

கார்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகளுடன் கார்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அரசு விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னரே சில கார் நிறுவனங்கள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகளை அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக வழங்க துவங்கிவிட்டன. அதில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் பிற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.

ஏனெனில், பிரிமியம் கார் மாடல்களின் உச்சபட்ச வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டுகளில் 2 ஏர்பேக்குகளை மட்டும் வழங்கி வரும் நிலையில், ஃபோர்டு கார் நிறுவனம் பட்ஜெட் மாடல்களான தனது ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களில் 6 ஏர்பேக்குளை கொடுத்து அசத்தி இருக்கிறது.

விலை உயர்ந்த கார்களில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படும் நிலையில் ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக மாறியிருக்கின்றன. அதிகபட்சமாக 6 ஏர்பேக்குகளுடன் குறைவான விலையில கிடைக்கும் கார் மாடல் என்ற பெருமையும் ஃபோர்டு ஃபிகோவுக்கு கிடைத்துள்ளது.

தற்போது ஃபோர்டு ஃபிகோ காரின் டாப் வேரியண்ட் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஃபோர்டு ஃபிகோ காரின் பெட்ரோல் மாடல் ரூ.6.29 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.17 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இதுபோன்று பல ஏர்பேக்குகள் கொடுக்கப்படுவதன் மூலமாக, விபத்தின்போது பயணிகளின் பாதுகாப்புக்கு அதிகபட்ச வலு சேர்ப்பதாக இருக்கிறது. முன்பக்கத்தில் மட்டும் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட கார்களில் பக்கவாட்டு மற்றும் பின்புற மோதல்களின்போது பயணிகள் படுகாயங்கள் அடைய வாய்ப்பு எழும்.

ஆனால், 6 ஏர்பேக்குகள் இருக்கும்போது பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு பெற வழி இருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ காரில் முன்புறத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிக்கான இரண்டு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர்த்து, பக்கவாட்டில் இரண்டு சைடு ஏர்பேக்குகளும், 2 திரை சீலை போன்று விரிந்து பாதுகாப்பை தரும் கர்ட்டெயின் ஏர்பேக்குகளும் உள்ளன.

ஃபோர்டு ஃபிகோ காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் தவிர்த்து, அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இடம்பெற்று இருக்கின்றன.

ஃபிகோ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரில் கூடுதலாக கார் அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கு உதவிபுரியும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அதிக தரைப்பிடிப்பை தரும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், மலைச் சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு நுட்பங்கள் உள்ளன.

ஃபிகோ காரின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் ஃபோர்டு எமர்ஜென்சி அசிஸ்ட் வசதியும் உள்ளது. கார் விபத்தில் சிக்கிவிட்டால், ஓட்டுனரின் முயற்சி இல்லாமலேயே, எந்த இடத்தில் கார் விபத்தில் சிக்கியிருக்கிறது என்பதை அருகில் உள்ள அவசர உதவி மையத்துக்கு தகவல் கொடுத்துவிடும். இது ஃபோர்டு நிறுவன கார்களில் மிக பிரத்யேகமான ஆபத்து கால வசதி.

இதுபோன்ற பல சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிறந்த மாடலாக ஃபோர்டு ஃபிகோ விளங்குகிறது. அதேநேரத்தில், இந்த காரின் க்ராஷ் டெஸ்ட் ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை. அப்போது காரின் கட்டுமான தரம் குறித்த ஆய்வுத் தகவலும் கிடைத்துவிடும். எப்படியிருந்தாலும், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் மாடலாக ஃபோர்டு ஃபிகோ கார் விளங்குகிறது.

ரூ.15 லட்சத்திற்குள்ளான கார் மார்க்கெட்டில் ஃபோர்டு ஃபிகோ காரை தவிர்த்து, ஃபோர்டு ஆஸ்பயர், ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா, ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட கார் மாடல்கள் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கின்றன.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
This is The Safest Budget Car In India.
Please Wait while comments are loading...

Latest Photos