விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்... முன்னணி மாருதி கார்கள் தள்ளாட்டம்!

கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதத்தில் எந்தெந்த கார் மாடல்கள் டாப் 10 இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

கடந்த மாதம் தந்திராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் விற்பனை சிறப்பான வளர்ச்சி பெற்றது. மாருதி, ஹூண்டாய் ஆகிய இரண்டு ஜாம்பவான் கார் நிறுவனங்களும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில் எந்தெந்த கார் மாடல்கள் டாப் 10 இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த செய்தியில் காணலாம்.

10. மாருதி செலிரியோ

கடந்த மாதத்தில் 9,581 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகி உள்ளன. மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த தேர்வாக உள்ளது. அத்துடன் விரிவான சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு வசதியும், குறைவான பராமரிப்பு செலவும் இந்த காருக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

09. ரெனோ க்விட்

கடந்த செப்டம்பரில் 10,558 ரெனோ க்விட் கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 9,801 க்விட் கார்கள் மட்டுமே விற்பனையானது. இதனால், 7வது இடத்திலிருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. விரைவில் வரும் ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடல் இந்த காரின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் என நம்பலாம்.

08. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

கடந்த செப்டம்பர் மாத்ததில் 9,375 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 10,056 மாருதி பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால், 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. டீசல் மாடலில் மட்டுமே கிடைத்தாலும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல சிறப்பம்சங்களையும், மாருதியின் நம்பகத்தன்மையுடன் வெற்றிகரமான மாடலாக வலம் வருகிறது.

07. மாருதி பலேனோ

கடந்த மாதத்தில் 10,718 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைன், வசதிகளில் பிரிமியமாகவும், விலையில் சரியாகவும் இருப்பதே இதன் வெற்றிக்கு காரணமாகியிருக்கிறது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதத்தில் 11,532 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. செப்டம்பரில் 8வது இடத்தில் இருந்த இந்த கார் தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்தது. டிசைன், வசதிகளில் வாடிக்கையாளர்களின் சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காராக இருக்கிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

பட்ஜெட் கார் பிரியர்களின் சிறந்த சாய்ஸ். தொடர்ந்து விற்பனையில் சிறப்பான இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 14,079 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் தன்னிகரற்ற மாடலாக இருக்கிறது.

04. மாருதி ஸ்விஃப்ட்

முதல் நான்கு இடங்கள் மாருதிக்கு குத்தைக்கு விட்டது போல்தான் மாதாமாதம் இந்த டாப் 10 பட்டியல் அமைகிறது. அதில், கடந்த அக்டோபரும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த 4 இடங்களையும் மாறி மாறி பிடித்துக் கொள்கின்றன. கடந்த மாதத்தில் 4வது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் பிடித்தது. கடந்த மாதத்தில் 14,611 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியான விலையில் சிறந்த பேக்கேஜ் கொண்ட கார்.

03. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதத்தில் 15,075 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறைவான விலையில் நிறைவான அம்சங்களை பெறறிருக்கிறது. அத்துடன், குறைவான பராமரிப்பு, அதிக எண்ணிக்கையிலான சர்வீஸ் மையங்கள் போன்றவை இந்த காரின் விற்பனையை தொடர்ந்து சிறப்பான இடத்தில் வைத்து இருக்கிறது.

02. மாருதி டிசையர்

கடந்த ஆண்டு அக்டோபரில் 21,084 டிசையர் கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 17,682 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், தொடர்ந்து முதல் இரண்டு இடங்களுக்குள் தனது விற்பனையை தக்க வைத்து வருவதே சாதனைதான். போட்டி அதிகரித்தாலும் டிசையர் மதிப்பு குறையவில்லை.

01. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதத்தில் 18,854 மாருதி ஆல்ட்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. குறைவான பட்ஜெட்டில் சிறந்த கார். நம்பகத்தன்மை, பராமரிப்பு செலவு என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 22,681 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 18,854 ஆல்ட்டோ கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது. இது நிச்சயம் ரெனோ க்விட், டட்சன் ரெடிகோ போன்ற புதிய கார்களின் வரவால் மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனையில் சற்று சரிவை ஏற்படுத்தியிருப்பதே காட்டுகிறது.

முன்னணி மாருதி கார்கள் தள்ளாட்டம்!

முதல் நான்கு இடங்களில் மாருதி கார் மாடல்கள் இடம்பிடித்தாலும், புதிய மாடல்களின் வரவால், அந்த மாருதி கார்களின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது புலனாகிறது. அதேநேரத்தில், மாருதி பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற புதிய மாடல்களை வைத்து அந்த சரிவை மாருதி சரி கட்டியிருப்பதுடன், கடந்த மாதம் விற்பனையில் 24.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki’s top-selling cars witnessed a huge decline in sales compared to previous year.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK