விற்பனையில் உலகின் டாப் -10 எஸ்யூவி மாடல்கள்... நம்பர் 1 யார் தெரியுமா?

விற்பனையில் உலகின் டாப் 10 இடங்களை பிடித்த எஸ்யூவி மாடல்களின் பட்டியலை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

நம் நாட்டு மார்க்கெட் மட்டுமின்றி, உலக அளவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு மிக பெரிய அளவில் இருக்கிறது.  இந்த செக்மென்ட் கடும் சந்தைப் போட்டி மிக்கதாக மாறி உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு  விற்பனையில் உலகின் டாப்-10 இடங்களை பிடித்த எஸ்யூவி மாடல்களின் விபரங்களை இப்போது பார்க்கலாம். நம் நாட்டு மார்க்கெட்டில் பின்தங்கி இருக்கும் ஒரு மாடல்தான் உலக அளவில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. சரி, வாருங்கள் பட்டியலுக்குள் நுழையலாம்.

10. ஃபோர்டு எஸ்கேப்

கடந்த 2015ம் ஆண்டு விற்பனையில் 7வது இடத்தை பிடித்த ஃபோர்டு எஸ்கேப் எஸ்யூவி தற்போது 10 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 3,71,601 ஃபோர்டு எஸ்கேப் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு விற்பனையைவிட தற்போது 0.4 சதவீம் விற்பனை சரிந்துள்ளது.

ஃபோர்டு எஸ்கேப் எஸ்யூவியான கிராஷ் டெஸ்ட் சோதனையில் அதிகபட்சமாக 5 நட்சத்திர தர அந்தஸ்து பெற்ற மாடல். இந்த கார் 1.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின், 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

09. நிஸான் ரோக்

பெயருக்கு தக்கவாறு மிக வலிமையான தோற்றத்தை பெற்ரஇருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 3,73,436 நிஸான் ரோக் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் இந்த எஸ்யூவியின் விற்பனை 14.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டில் 11 வது இடத்தில் இருந்து தற்போது 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

நிஸான் ரோக் எஸ்யூவியில் 2.5 லிட்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2.5 லிட்டர் எஞ்சினுடன் 40பிஎச்பி பவரை வழங்க வல்ல மின் மோட்டாருடன் கூடிய ஹைப்ரிட் மாடலிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

08. நிஸான் எக்ஸ்-ட்ரெயில்

டாப் 10 பட்டியில் இடம்பிடித்துளள மற்றொரு நிஸான் தயாரிப்பு எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி. கடந்த ஆண்டு 4,12,729 நிஸான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனை கணிசமாக உயர்ந்த போதிலும், 5வது இடத்திலிருந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிஸான் எஸ்யூவி உலக அளவில் சிறந்த எஸ்யூவி மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த காரில் 140 பிஎச்பி பவரை அளிக்க 2.0 லிட்டர் எஞ்சின் மற்றும் 228 பிஎச்பி பவரை வழங்கும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 130 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினும் உண்டு.

07. நிஸான் காஷ்கய்

நிஸான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல் என்ற பெருமையை நிஸான் காஷ்கய் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு 4,49,520 நிஸான் காஷ்கய் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி 10வது இடத்திலிருந்தது கடந்த ஆண்டு 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டிலிருந்து நிஸான் காஷ்கய் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனையில் உள்லது. இந்த கார் 1.2 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனை செய்யப்படுகிறது.

06. கியா ஸ்போர்ட்டேஜ்

கடந்த 1993ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது கியா ஸ்போர்ட்டேஜ் எஸ்யூவி. தற்போது மூன்றாவது தலைமுறை மாடலாக விற்பனையில் உள்ளது. கடந்த ஆண்டு 4,92,666 ஸ்போர்ட்டேஜ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனை 9.3 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கியா ஸ்போர்ட்டேஜ் எஸ்யூவியில் 1.6 லிட்டர், 2.0 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், 1.7 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

05. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

கடந்த ஆண்டு 5வது இடத்தை ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி பெற்றது. கடந்த ஆண்டில் 5,19,656 டிகுவான் எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன. விற்பனை அதிகரித்தாலும், மூன்றாவது இடத்திலிருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் டிகுவான். தற்போது இரண்டாம் தலைமுறை மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. இரண்டு விதமான வீல் பேஸ் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும், சீனாவிலும் விற்பனைக்கு செல்கிறது.

04. ஹவல் எச்6

சீனாவை சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. கடந்த ஆண்டு உலக அளவில் 5,80,683 எச்6 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சீனாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாகவும் இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு விற்பனை 55.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. 5 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் அங்கு கிடைக்கிறது.

03. ஹூண்டாய் டூஸான்

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விற்பனையில் உலக அளவில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு 6,39,053 டூஸான் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டைவிட விற்பனை 110.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கிறது. இந்த எஸ்யூவி 1.6 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

02. டொயோட்டா ஆர்ஏவி4

கடந்த ஆண்டு 7,23,988 டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலிடத்தை பெறுவதற்கான முயற்சியில் இறுதியில் மிக நெருக்கமாக போராடி இரண்டாவது இடத்தை பிடித்தது.

காம்பேக்ட் க்ராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த இந்த கார் 1994ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கிறது. தற்போது 4ம் தலைமுறை மாடல் விற்பனையில் உள்ளது. 2.0 லிட்டர், 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் பெட்ரோல் மாடல் ஹைப்ரிட் ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

01. ஹோண்டா சிஆர்வி

விற்பனையில் உலகின் நம்பர்-1 எஸ்யூவி மாடல் ஹோண்டா சிஆர் வி.,தான். கடந்த ஆண்டு 7,52,670 சிஆர் வி கார்கள் உலக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனை 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இது ஒரு புதிய விற்பனை மைல்கல்லையும் ஹோண்டா சிஆர் வி பதிவு செய்துள்ளது.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியானது 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. டீசல் மாடல் இல்லாமல் உலகின் நம்பர்-1 மாடலாக பதிவு செய்திருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் இல்லாமல், பெரிய அளவிலான விற்பனை இல்லையென்றாலும், உலக அளவில் விற்பனையில் சிறந்து விளங்குகிறது.

கடந்த ஆண்டு 27.1 மில்லியன் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த செக்மென்ட் உலக அளவில் 20.2 சதவீதம் என்ற வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கடும் சந்தைப் போட்டி மூலமாக வாடிக்கையாளர்கள் பல புதிய மாடல்களை தேர்வுக்கு கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Honda managed to fight off competition and the CR-V managed to sell more than three-quarter million, while the SUV segment grew 27 million in worldwide sales with a share of 26 percent of total sales.
Please Wait while comments are loading...

Latest Photos