கனரக வாகன ஏற்றுமதியில் புதிய உச்சம்; ’மேன் இன் இந்தியா’ பிரச்சாரத்திற்கு முன்னோடியான டெய்மலர்..!!

Written By:

இந்தியாவில் கனரக வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் புதிய மைல்கல்லை படைத்துள்ளதாக இந்தியாவின் டெய்ம்லர் கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட பிரபல டெய்மலர் நிறுவனம், இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களை தயாரிக்க சென்னை பெருங்குடியில் 2012ல் கால்பதித்தது.

இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களை (பேருந்து, லாரி, டிரக்கு) தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் வெற்றிக்கரமாக செயல்பட்டு வரும் டெய்ம்லர், தனது 10,000வது டிரக்கை சமீபத்தில் சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியில் டெய்ம்லர் நிறுவனத்தின் இந்த எண்ணிக்கை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்திய தயாரிப்புகளுக்கு மத்திய அரசு முன்மொழிந்து வரும் ’மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்திற்கு இந்த சாதனை வலுசேர்ப்பதாக டெய்ம்லர் பெருமையுடன் கூறியுள்ளது.

டெய்ம்லர் இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த டிரக் இந்தோனேஷியாவிற்கு ஏற்றுமதி ஆகிறது.

40 டன் எடைக்கொண்ட அந்த டிரக்கை டெய்ம்லர், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ்-பென்ஸ் முத்திரை உடன் டெய்ம்லர் தயாரித்த மொத்தம் 250 டிரக்குகள், இந்தோனேஷியா மற்றும் இதர தெற்கு ஆசிய நாடுகளுக்கு சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பாரத்பென்ஸ் தயாரிப்புகளின் படி, நடுத்தர பயன்பாடு என்றால் 9 முதல் 16 டன் எடையில் கமர்ஷியல் வாகனங்கள் இருக்கும்.

அதுவே கனரக பயன்பாடு என்றால் 16 முதல் 49 டன் எடையில் கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கப்படும். இது பாரத்பென்ஸின் கோட்பாடு.

இதே வழிமுறைகளை பின்பற்றி தான் டெய்ம்லர் இந்தியாவில் தனது கமர்ஷியல் வாகனங்களை தயாரிக்கிறது. இந்திய ஆட்டோமொபைலுக்கு இதுவும் ஒரு கௌரவம் தான்.

இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் வாகனங்களை ஆசிய, மத்திய கிழக்கு நாடுகள், ஆஃப்ரிக்கா, மற்றும் லத்தின் அமெரிக்காவில் ஏற்றுமதி செய்கிறது.

டெய்ம்லர் இந்தியாவில் தயாரித்தாலும், அனைத்து வாகனங்களும் அந்தந்த நாடுகளுக்கான வாகன கொள்கையின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்படுகின்றன.

டிரக்குகளை தயாரிப்பதில் உலகின் முன்னோடியாகவும் டெய்ம்லர் இருந்து வருகிறது. டிரக்குகளை தவிர டெய்ம்லரின் சென்னை தொழிற்சாலையில் பேருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவிலிருந்து இதுவரை டெய்ம்லர் 1000 பேருந்துகள் வரை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்காக அந்நிறுவனம் தயாரித்த பள்ளிப்பேருந்துகளும் அடக்கம்.

மிட்சுஃபிஷி நிறுவனத்தின் ’ஃபுயூசோ’ டிரக்குகளும் சென்னை டெய்ம்லர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவற்றை சென்னையில் இருந்து கென்யா மற்றும் தென் ஆஃப்ரிக்க நாடுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து 10000 டிரக்குகளை ஏற்றுமதி செய்தது என்பது தொடக்கம் தான். மேலும் சந்தை வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தியாவில் நம்பகமான, திறமையான நிறுவனமாகவும் வளர டெய்ம்லர் பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஆசிய டெய்ம்லர் நிறுவனத்திற்கான தலைமை அதிகாரி மார்க் லிஸ்டோசெல்லா தெரிவித்தார்.

இந்தியாவில் தொழிற்சாலை அமைத்த பிறகு டெய்ம்லர் நிறுவனத்தின் வளர்ச்சி 2 மடங்காக உள்ளதாக டெய்ம்லர் கமர்ஷியல் வாகன பிரிவின் தலைமை அதிகாரி எரிக் நெலஷாஃப் கூறினார்.

மேலும்... #டெய்ம்லர் #daimler
English summary
Daimler commercial Vechile Exports Sales Cross 10000 trucks Milestone. Click for More Details...
Please Wait while comments are loading...

Latest Photos