இந்தியாவில் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்; அமெரிக்காவில் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியது.!!

Written By:

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மாசு உமிழ்வு மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் மிஷிகன் மாகாண நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் ஜெர்மனின் பிரபல வோக்ஸ்வேகன் நிறுவனம் மாசு உமிழ்வு மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பிறகு அமெரிக்காவில் தற்போது வாகனங்களின் மீது அதிக கவனத்தை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்க சுற்றுப்புற சூழல் விதிகளுக்கு எதிராக சில டீசல் மாடல் கார்களை தயாரித்திருப்பதாக கூறி மிஷிகன் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே சில்வர்டோ மற்றும் ஜி.எம்.சி சியரா போன்ற டீசலில் இயங்கும் 7 லட்சம் எண்ணிக்கையிலான வாகனங்களால் அமெரிக்க சுற்றுச்சூழலில் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

வோக்ஸ்வேகனின் மாசு உமிழ்வு மோசடிக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டால், ஆட்டோமொபைல் துறையில் அங்கு புயல் வீசி வருகிறது.

சில்வர்டோ மற்றும் ஜி.எம்.சி சியரா வாகனங்களை பயன்படுத்தி வரும் பொதுமக்களும் தங்கள் கார்கள் திரும்ப பெறப்படுமா என்று கதிகலங்கி உள்ளனர்.

அமெரிக்காவில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்களில் வோக்ஸ்வேகனுக்கு இணையாக பேசப்பட்ட நிறுவனம் ஃபியட் கிரைஸ்லர்.

ஃபியட் நிறுவனம் தயாரித்த ஏனைய கார்களால் அமெரிக்காவில் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேறுவது அதிகரித்துள்ளதாக அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்தது.

ஃபியட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடியே அதே சட்ட நிறுவனம் தான் மிஷிகன் மாகாணத்தில் ஜெனரல் மோட்டார்ஸிற்கு எதிராக வாதாடவுள்ளது.

இந்த நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞரான ஸ்டீவ் பெர்மன் வோக்ஸ்வேகனின் கார்களை விட செவர்லேவின் டிரக்கு வாகனங்கள் நான்கு மடங்கு மாசு உமிழ்வு மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.

வோக்ஸ்வேகன் செய்த மோசடிக்காக, அந்நிறுவனம் 11.3 பில்லியன் டாலர்கள் வரை அபராதம் செலுத்த தீர்ப்பு கூறப்பட்டது. மேலும் சுமார் 50 லட்சம் கார்களையும் திரும்பப்பெற உத்தரவிடப்பட்டது.

இதே தீர்ப்பை தான் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் எதிர்பார்ப்பதாக ஸ்டீவ் பெர்மன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வோக்ஸ்வேகனுக்கு முன்னதாக ஃபியட் நிறுவனத்தின் கிரைஸ்லர் டீசல் கார் அமெரிக்காவின் சுற்றுப்புற சூழல் விதிகளுக்கு புறம்பாக தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை ஃபியட் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை, மாறாக கார் தயாரிப்பில் முறைகேடு செய்யவில்லை என அந்நிறுவனம் வாதாடியது.

தற்போது ஃபியட் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது போலத்தான் ஜெனரல் மோட்டார்ஸூம் மாசு உமிழ்வு மோசடியில் ஈடுபடவில்லை என கூறிவருகிறது.

தனது நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி புகாரை சட்டரீதியாக சந்திக்க தயார் என மிஷிகன் நீதிமன்றத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே பிக்-அப் மற்றும் டிரக்கு மாடல் வாகனங்கள் அமெரிக்கவில் எவ்வளவு தூரம் சுற்றுப்புறசு சூழலை பாதிப்படைய செய்துள்ளன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமெரிக்க சுற்றுப்புறச்சூழல் அமைப்பு பதிலளிக்க மறுத்துவிட்டது.

English summary
General Motor Emission Cheating lawsuit filed in Michigan federal Court. click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos