அம்பாசடர் கார் பிராண்டை பீஜோ நிறுவனத்திடம் விற்பனை செய்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்!

Written By:

அம்பாசடர் கார் பிராண்டை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனத்திடம் விற்பனை செய்துவிட்டது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். இதனால், மீண்டும் அம்பாசடர் கார் பிராண்டுக்கு புத்துயிர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாட்டின் பிரதமர் முதல் சாமானிய மக்கள் வரை விரும்பி பயன்படுத்திய கார் மாடல் அம்பாசடர். மாறி வரும் விதிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அம்பாசடர் கார் மேம்படுத்தப்பட வில்லை. இதனால், விற்பனை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, பல தசாப்தங்களாக இந்தியர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த அம்பாசடர் கார் உற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அம்பாசடர் கார் பிராண்டை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனத்திடம் விற்பனை செய்துவிட்டதாக சிகே.பிர்லா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.80 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்கள் மற்றும் அம்பாசடர் கார் உற்பத்தி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால நிலுவைத் தொகையினை வழங்குவதற்காகவே அம்பாசடர் கார் பிராண்டை விற்பனை செய்துள்ளதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ்-2 [லேண்ட்மாஸ்டர்] காரில் மாற்றங்களை செய்து அம்பாசடர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, பல தசாப்தங்களாக இந்தியர்களின் முக்கிய போக்குவரத்து வாகனமாகவும், அந்தஸ்தின் சின்னமாகவும் விளங்கியது அம்பாசடர் கார்.

வலுவான கட்டமைப்பு, சிறந்த எஞ்சின், அதிக இடவசதி, எக்காலத்திற்கும் ஏற்ற டிசைன் அம்சங்கள் என்று அம்பாசடர் சாகா வரம் பெற்ற மாடலாகத்தான் இருந்தது. இந்த நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி 800 கார் அம்பாசடர் காரின் மவுசை மெல்ல கரைத்தது.

இருப்பினும், தொடர்ந்து வாடகை கார் மார்க்கெட்டில் சிறப்பான மாடலாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப எஞ்சினை மேம்படுத்துவதற்கான நிதி ஆதாரம் இல்லாததால், கடந்த 2014ம் ஆண்டு அம்பாசடர் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 1990ம் ஆண்டுகளில் இந்திய சந்தையில் கால் பதித்த பீஜோ நிறுவனம், பீஜோ 309 மாடலை விற்பனை செய்தது. மூன்று ஆண்டுகளில் வர்த்தகத்தை விலக்கிக் கொண்ட பீஜோ நிறுவனம் தற்போது இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பார்த்து மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் பீஜோ சிட்ரோவன் கார் குழுமம் இந்தியாவில் கால் பதிக்க முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை துவங்கி உள்ளது. சிகே பிர்லா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் கார் ஆலையில் தனது கார்களை அசெம்பிள் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

தற்போது சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் மிட்சுபிஷி எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையானது ஆண்டுக்கு 12,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஆலையில் தனது கார் மாடல்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய இருக்கிறது பீஜோ சிட்ரோவன் நிறுவனம்.

மேலும், அம்பாசடர் கார் பிராண்டையும் பீஜோ நிறுவனம் கையகப்படுத்தியிருப்பதால், அந்த பிராண்டில் மீண்டும் புதிய கார் மாடல் வெளியிடப்படுமா என்ற ஆவலும் எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் தகவல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Story first published: Saturday, February 11, 2017, 10:04 [IST]
English summary
Hindustan Motors sells Ambassador car brand to Peugeot.
Please Wait while comments are loading...

Latest Photos