டாடா மோட்டார்ஸ் - ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா கூட்டணி பற்றி 10 முக்கிய விஷயங்கள்!

Written By:

புதிய கார் மாடல்களை தயாரிப்பதற்காக ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜெனிவாவில் நடந்து வரும் சர்வதேச வாகன கண்காட்சியின்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

டாடா மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன் மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் இணைந்து செயலாற்ற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் குன்ட்டெர் பட்செக், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மேத்தியாஸ் முல்லர், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாிர பெர்ஹார்டு மேயர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வாகன உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த புதிய கூட்டணியின் நோக்கம், அதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க இருக்கும் புதிய தயாரிப்புகள் குறித்த முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கார்களை வடிவமைக்கும் பணிகளில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சார்பில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலமாக மூன்று நிறுவனங்களுமே பயன் பெறும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது 6 முதல் 9 வரையிலான வெவ்வேறு டிசைன் தாத்பரியங்கள் கொண்ட பிளாட்ஃபார்ம்களில் புதிய கார்களை உருவாக்கி வருகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலமாக, இரண்டே பிளாட்ஃபார்ம்களில் புதிய கார்களை உருவாக்க முடியும். இதனால், கார் வடிவமைப்பு செலவீனம் வெகுவாக குறையும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்தி வரும் புதிய Advanced Modular Platform[AMP] மிகச் சிறப்பானதாக ஃபோக்ஸ்வேகன் கருதுகிறது. அதனை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்க இருக்கிறது. தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் MQB என்ற பிளாட்ஃபார்மின் அடிப்படையில், தனது கீழ் செயல்படும் பல கார் நிறுவனங்களின் மாடல்களை தயாரித்து வருகிறது. அதே MQB பிளாட்ஃபார்மின் தொழில்நுட்பங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளும்.

இந்த புதிய பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இந்தியாவுக்கான பல புதிய பட்ஜெட் கார் மாடல்களை உருவாக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, பல மாறுதல்களுடன் புதிய கார்களை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்களும் தங்களது பிராண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளன. இதன்மூலமாக, உதிரிபாகங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளதால், தயாரிப்பு செலவு குறையும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சிறிய வகை எஞ்சின்கள் மிகவும் திறன் வாய்ந்தவையாக பெயர் பெற்றவை. இந்த எஞ்சின்களை டாடா மோட்டார்ஸ் தனது கார்களில் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. மேலும், எஞ்சின்களை மேம்படுத்துவதற்கான செலவீனத்தையும் டாடா, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா ஆகியவை பங்கிட்டு கொள்ளவும் வழி ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் கார் மாடல் வரும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இது நீண்ட கால அடிப்படையிலான கூட்டணியாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உலக அளவில் இந்தியா மிக முக்கிய மார்க்கெட்டாக ஃபோக்ஸ்வேகன் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால்தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்பட முடிவு செய்துள்ளன. அதேநேரத்தில், இந்த கூட்டணி இந்திய மார்க்கெட்டை மட்டும் குறி வைக்கவில்லை. நிஸான்- ரெனோ கூட்டணி போன்று சர்வதேச அளவில் பயன்படும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

ஆம். இந்த கூட்டணியில் உருவாகும் புதிய கார் மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளன. இதனால், சர்வதேச அளவில் இந்த கூட்டணி முக்கியத்துவம் பெற இருக்கிறது. குறிப்பாக, ஸ்கோடா நிறுவனம் பல புதிய நாடுகளில் கால் பதிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்த கூட்டணி பெரிதும் துணை புரியும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் குவென்ட்டர் பட்செக் ஜெர்மனியை சேர்ந்தவர். டெய்ம்லர் நிறுவனத்தில் பணியாற்றியவர். தனக்கு இருக்கும் தொடர்புகளை வைத்துக் கொண்டு இந்த வரலாற்று சிறப்பமிக்க கூட்டணியை வெற்றிகரமாக முடித்துள்ளார் பட்செக். அண்மையில், டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற தமிழரான சந்திரசேகர் தலைமையின் கீழ் செய்யப்பட்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாகவும் இது வர்ணிக்கப்படுகிறது.

புதிய டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் காரின் படங்கள்!

அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கும் வர இருக்கும் டாடா டாமோ ரேஸ்மோ காரின் உயர் துல்லிய தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Some Important Things To Know About Tata-Volkswagen-Skoda Joint Venture.
Please Wait while comments are loading...

Latest Photos