தமிழகத்துக்கு வடபோச்சே... ரூ.7,000 கோடியுடன் ஆந்திராவில் லேண்ட் ஆனது கியா!

Written By:

நீண்ட யோசனைக்கு பின்னர் ஆந்திராவில் புதிய கார் ஆலையை அமைக்க தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது கியா மோட்டார்ஸ்.

ஹூண்டாய் கார் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் கியா கார் நிறுவனம். இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், கார் விற்பனையை துவங்க திட்டமிட்டது.

இதற்காக, இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைக்கவும் திட்டமிட்டது. தமிழகம், குஜராத், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கார் ஆலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் சென்னை அருகே கார் தொழிற்சாலை அமைத்ததால், அதே வழியில் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் கார் ஆலை அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

பெரிய அளவிலான முதலீடும், வேலைவாய்ப்பும் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இறுதியில் ஆந்திராவில் புதிய கார் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது கியா மோட்டார்ஸ். இதற்காக, ஆந்திர அரசுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது கியா மோட்டார்ஸ்.

மேலும், 1.1 பில்லியன் டாலர் (ரூ.7,055 கோடி) ஆந்திராவில் அமைக்கப்படும் கார் ஆலையில் முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது கியா மோட்டார்ஸ். ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் இந்த புதிய கார் ஆலை அமைய இருக்கிறது.

கியா கார் ஆலை 536 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆலை கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, 2019ம் ஆண்டு இந்த புதிய ஆலையில் கார் உற்பத்தி துவங்கப்படும். ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த கார் ஆலை அமைக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஹூண்டாய் கார் ஆலையில் இருந்து அனந்த்பூரில் அமைய இருக்கும் கியா கார் ஆலை 400 கிமீ தொலைவில் இருப்பதால், உதிரிபாகங்கள் பரிமாற்றம் உள்ளிட்டவற்றிற்கு ஏதுவாக இருக்கும். அத்துடன், கியா நிறுவனத்தின் புதிய கார் ஆலையில் ஹூண்டாய் கார்களையும் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில் 40 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் கார் உற்பத்தியை துவங்க கியா திட்டமிட்டுள்ளது. படிப்படியாக, உள்ளூர் உதிரிபாகங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. முதலாவதாக, எஸ்யூவி மாடல் ஒன்றையும், செடான் கார் மாடலையும் அறிமுகம் செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழல்களால், இந்த கார் ஆலை திட்டம் கைவிட்டு போய் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், ஆரம்பத்தில் கியா மோட்டார்ஸ் ஆலை தமிழகத்திற்கு வரும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது ஆந்திராவுக்கு அந்த ஆலை திட்டம் கிட்டி இருக்கிறது.

மேலும்... #கியா #kia
English summary
Kia Motors has finally revealed some of its future plans for India, including details about the plant and what vehicles can be expected.
Please Wait while comments are loading...

Latest Photos