டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி மாடலை களமிறக்கும் மஹிந்திரா!

Written By:

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இணையான ரகத்தில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மஹிந்திரா சில ஆண்டுகளுக்கு முன் களமிறக்கியது. ஆனால், சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இதையடுத்து, சாங்யாங் பிராண்டை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ள மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது.

புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி Y400 என்ற குறியீட்டுப் பெயரில் சாங்யாங் நிறுவனம் உருவாக்கி வருகிறது. சாங்யாங் LIV-2 கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது. தென்கொரியாவில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

இதே எஸ்யூவியை தனது சொந்த பிராண்டில் ரீபேட்ஜ் செய்து வெளியிட மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இந்த எஸ்யூவிக்கான உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்தே பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால், போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் இந்த எஸ்யூவியை களமிறக்க மஹிந்திராவுக்கு வாய்ப்பு கிட்டும். தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை விட மேலான ரகத்தில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும்.

புதிய மஹிந்திரா பிரிமியம் எஸ்யூவி மாடலானது 7 சீட்டர் மாடலாக வெளிவர இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட புதிய மஹிந்திரா எஸ்யூவியானது 120மிமீ கூடுதல் வீல்பேஸ் கொண்டதாக இருக்கும். எனவே, உட்புறத்தில் மிக மிக சவுகரியமான இடவசதியை மூன்று வரிசை இருக்கைகளிலும் எதிர்பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா எஸ்யூவியானது 4,850மிமீ நீளமும், 1,960மிமீ அகலமும், 1,800மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். லேடர் ஃப்ரேம் சேஸீயில் இந்த புதிய எஸ்யூவி கட்டமைக்கப்பட்டு இருக்கும்.

புதிய மஹிந்திரா பிரிமியம் எஸ்யூவியில் 184 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இடம்பெற்று இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் வரும் என தெரிகிறது. ரியர் வீல் டிரைவ் அல்லது 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

உட்புறத்தில் மிக நவீன கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் வருகிறது. 9.2 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இருக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.20 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Wednesday, January 4, 2017, 8:30 [IST]
English summary
Mahindra To Launch All new 7 seat luxury SUV to rival the Toyota Fortuner.
Please Wait while comments are loading...

Latest Photos