மாருதி இக்னிஸ் காருக்கு குவியும் புக்கிங்... நடுக்கத்தில் ஸ்விஃப்ட், பலேனோ...!!

Written By:

க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யூவி ரக மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை மனதில் வைத்து, அந்த பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறது மாருதி கார் நிறுவனம்.  எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களை களமிறக்கிய அந்த நிறுவனம் சமீபத்தில் இக்னிஸ் என்ற புதிய காம்பேக்ட் க்ராஸ்ஓவர் ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

எஸ் க்ராஸ் எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்தது. அதைப்போலவே, இப்போது இக்னிஸ் காருக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.இது மாருதி நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

கடந்த 13ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட தினத்தன்று, 6,000 முன்பதிவுகளை மாருதி இக்னிஸ் கார் பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது முன்பதிவு 10,000ஐ கடந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி இக்னிஸ் காருக்கான முன்பதிவு கணிசமாக உயர்ந்து வருவதையடுத்து, அந்த காருக்கான காத்திருப்பு காலமும், வேரியண்ட்டை பொறுத்து 2 முதல் 3 மாத காலம் நீடிக்கிறது. முன்பதிவு அதிகரிக்கும் பட்சத்தில், காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் மாருதி இக்னிஸ் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அந்த ஆலையில் தேவைக்கு ஏற்ப, கார் மாடல்களின் உற்பத்தியை கூட்டவும், குறைத்து பிற மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வசதி இருக்கிறது. எனவே, குஜராத் ஆலையில் உற்பத்தி துவங்கும்போது காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என தெரிகிறது. இக்னிஸ் மட்டுமின்றி, பிற மாருதி கார்களின் காத்திருப்பு காலமும் குறையும்.

மாருதி இக்னிஸ் காருக்கு இந்தளவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதற்கு அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகளும், விலையும் மிக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் மாருதி இக்னிஸ் கார் கிடைக்கிறது. தவிரவும், மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

மாருதி இக்னிஸ் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும் வழங்கும் திறன் கொண்டது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.89 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.8 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரட்டை வண்ண டேஷ்போர்டு, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளை பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டுகள் இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கிறது.

இந்த கார் 180 மிமீ தரை இடைவெளியை பெற்றிருப்பதால், இந்திய சாலைநிலைகளுக்கு மிக ஏற்றதாக இருக்கும். இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், ஃபோர்ஸ் லிமிட்டர்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்களில் நிறைவாகவும் விலையை மிக சரியாகவும் மாருதி நிர்ணயித்து தந்துள்ளது. ஆம், ரூ.4.59 லட்சம் முதல் ரூ.7.46 லட்சம் என்ற கவர்ச்சிகரமான விலையில் மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நெருக்கடி ஏற்படுமோ இல்லையோ, மாருதியின் பிற தயாரிப்புகளான ஸ்விஃப்ட், பலேனோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஏனெனில், மாருதி பலேனோ கார் வந்த பின்னர், ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. அதேபோன்று, இக்னிஸ் கார் வருகை ஸ்விஃப்ட் விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இருப்பினும், இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ கார்கள் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருப்பதால், பெரிய பாதிப்பு ஏற்படாது என்று மாருதி கருத்து தெரிவித்துள்ளது.

புதிய டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் படங்கள்!

புதிய டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் அசத்தலான படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு மகிழுங்கள்!

Story first published: Friday, January 20, 2017, 9:42 [IST]
English summary
The waiting period of the Maruti Ignis has gone up by 2-3 months; Ignis has been priced in the range of Rs 4.59 lakh to 7.46 lakh ex-showroom (Delhi).
Please Wait while comments are loading...

Latest Photos