சென்னையில் விரைவில் மின்சார பஸ் சோதனை ஓட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

Written By:

சென்னையில் விரைவில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

பெருநகரங்களில் வாகனப் புகையால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்கும் விதத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை இயக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, பெங்களூர் நகரில் மின்சார பஸ் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சென்னையிலும் மின்சார பஸ்களை சோதனை ஓட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

குரோம்பேட்டையில் நடந்த போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சோதனை அடிப்படையில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களிடமிருந்து மாதிரி பஸ்களை வழங்குமாறு கோரி இருக்கிறோம். விரைவில் அந்த பஸ்களை பெற்று சோதனை முறையில் இயக்கி பார்க்கப்படும்.  பேட்டரியில் இயங்கும் பஸ்களை சென்னையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அதேபோன்று, ஜனவரியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

இந்த பஸ் மாடல்கள் விரைவில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திடம் சோதனை ஓட்டத்திற்காக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனைகள் வெற்றி பெற்றால் படிப்படியாக பேட்டரியில் இயங்கும் பஸ்கள் சென்னை மாநகர போக்குவரத்து துறையில் சேர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதன்மூலமாக, பொது போக்குவரத்து துறை வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு வெகுவாக தவிர்க்கப்படும். இந்த திட்டம் நிச்சயம் வரவேற்கப்படும் திட்டமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
MTC to test run electric buses in Chennai soon.
Please Wait while comments are loading...

Latest Photos