கொடைக்கானல் அருகே விபத்துக்குள்ளான போர்ஷே கேயென் எஸ்யூவி!

Written By:

சக்திவாய்ந்த எஞ்சின், அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த சொகுசு கார்கள் எந்த வேகத்தில் சென்றாலும் ஒன்றும் ஆகாது என்ற நினைப்பு பலரிடம் இருக்கிறது. எந்தளவு பாதுகாப்பு மிக்க காராக இருந்தாலும், ஓட்டுனர் நிதானத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நிச்சயம் விபத்தை விலை கொடுத்து வாங்கும் அபாயம் உள்ளது.

கொடைக்கானல் அருகே சில தினங்களுக்கு முன் போர்ஷே கேயென் எஸ்யூவி கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கி இருக்கிறது. அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல துணிக்கடை அதிபருக்கு சொந்தமான காராக இது கூறப்படுகிறது. சென்னையிலிருந்து கொடைக்கானல் வந்தபோது, இந்த போர்ஷே கார் விபத்தில் சிக்கி உள்ளது. நேரான சாலையாக இருந்தபோதிலும், அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது இந்த போர்ஷே கார்.

கட்டுப்பாட்டை இழந்த வேகத்தில் வலது புறத்தில் இருந்த சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்துள்ளது. கார் உருண்டதில் காரின் அனைத்து பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளது. காருக்குள் இருந்த முன்புற ஏர்பேக்குகள், பக்கவாட்டு ஏர்பேக்குகள் என அனைத்தும் விரிவடைந்துள்ளன.

ஆனால், காரில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை. எனினும், ஏர்பேக்குகள் மூலமாக பயணிகள் காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கலாம் என்று நம்பலாம்.

விபத்துக்குள்ளான போர்ஷே கேயென் எஸ்யூவியில் மிக சக்திவாய்ந்த 4.2 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 382 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்யூவி மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை பெற்றுள்ளது. மணிக்கு 252 கிமீ வேகம் வரை செல்லும்.

இதுபோன்ற சக்திவாய்ந்த கார்களை கையாள்வது ஒரு கலை. அதில், இம்மி பிசகினாலும் இதுபோன்ற விபத்துக்களை சந்திக்க நேரிடும். எனவே, சக்திவாய்ந்த கார்களை ஓட்டும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

இந்த காரில் முன்பக்க ஏர்பேக்குகள், பக்கவாட்டு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டயர்கள் வழுக்காமல் தரை பிடிப்பை அதிகரிக்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவையும் இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் மீறி விபத்தில் சிக்கி இருக்கிறது.

இந்த கார் ரூ.1.20 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்திருப்பதால், பழுது நீக்கும் செலவும் மிக அதிகம் இருக்கும். காப்பீடு இருந்தாலும், கையில் இருந்து கணிசமான தொகையை இதன் உரிமையாளர் செலவிட்டால் மட்டுமே மீண்டும் இந்த போர்ஷே கார் பழைய நிலைக்கு திரும்பும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Wednesday, May 17, 2017, 14:22 [IST]
English summary
Porsche Cayenne SUV Crashed Near Kodaikanal.
Please Wait while comments are loading...

Latest Photos