புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது!

Written By:

டியாகோ, டீகோர் கார்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் பல புதிய மாடல்களை வரிசை கட்டுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அந்த நிறுவனத்திடம் இருந்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடல் நெக்ஸான் என்ற பெயரில் குறிப்பிடப்படும் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக வருகிறது டாடா நெக்ஸான்.

நவீன காலத்துக்கு ஏற்ற நாகரீகமான டிசைன் அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த எஸ்யூவி மார்க்கெட்டிற்கு வர இருக்கிறது. மேலும், போட்டியாளர்களைவிட இந்த புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி விலை குறைவாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அண்மையில் கிடைத்திருக்கும் தகவலின்படி, ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடல் இந்த விலையில் வர வாய்ப்பு அதிகம். டீசல் மாடல் இந்த ஆரம்ப விலையில் வந்தால் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும். இந்த நிலையில், டாடா நெக்ஸான் பற்றிய மற்றொரு முக்கியத் தகவலும் வெளியாகி உள்ளது.

 மாருதி பிரெஸ்ஸா கார் போன்றே, டாடா நெக்ஸான் எஸ்யூவியும் டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது. அதேநேரத்தில், சில மாதங்கள் கழித்து பெட்ரோல் மாடலுக்கான வரவேற்பை ஆய்வு செய்து கொண்டு பின்னர் களமிறக்கலாம் என்பதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இப்போதைய திட்டமாக உள்ளது.

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், டாடா நெக்ஸான் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் குறித்த விபரங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. அதன்படி, டீசல் மாடலில் 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் படைத்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த எஸ்யூவி லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் கொடுக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால், முதலில் டீசல் மாடல்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிசைன் தாத்பரியத்தில்தான் நெக்ஸான் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 3,995 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவி 200 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது.

டாப் வேரியண்ட்டில் 6.5 இன்ச் ஹார்மன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த காரின் ஆடியோ சிஸ்டம் 8 ஸ்பீக்கர்களுடன் மிகச் சிறப்பான ஒலி தரத்தை கொண்டதாக இருக்கும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், இரட்டை வண்ணக் கலவையிலான வெளிப்புறம், அசத்தலான அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பியானோ பிளாக் என்ற பளபளப்புமிக்க கருப்பு வண்ண க்ரில் அமைப்புடன் கவரும் வகையில் இருக்கும்.

English summary
Now, sources at Tata Motors said that the Nexon compact SUV would be initially launched with a single diesel engine only.
Story first published: Saturday, June 24, 2017, 13:56 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos