'தெர்மோகோல்' அரசியல்வாதிகளும், தெறித்து ஓடும் கார் நிறுவனங்களும்... !!

Written By:

கட்டு செட்டாக இருந்த தமிழக அரசியல் கடையாணி பிடுங்கிய கட்டை வண்டி போல போய்க்கொண்டு இருக்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை ஆதாயம் என்ற நோக்கில் அரசியல்வாதிகள் தங்களது மொத்த வித்தையையும் காட்டி வருவது அண்மையில் கியா கார் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட விவகாரம் வழியாக கசிந்துவிட்டது.

இந்த விவகாரத்தை தொழிலதிபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். நாட்டின் முக்கிய வாகன உற்பத்தி கேந்திரமாக விளங்கும் சென்னை மாநகரம் ஆசியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை இழந்துவிடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்து வருகிறது.

நம் நாட்டில் தயாராகும் மூன்று கார்களில் ஒன்று சென்னையில் உற்பத்தியாகிறது. ஒரு நிமிடத்திற்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார ஆலைகளில் மூன்று கார்களும், 75 வினாடிகளுக்கு ஒரு வர்த்தக வாகனமும் உற்பத்தியாகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், வர்த்தக வாகனங்கள் என ஆண்டுக்கு பல லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தகுதிவாய்ந்த பணியாளர்கள், சிறந்த சாலை கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற சிறந்த துறைமுகம் போன்றவற்றால் பூகோள அமைப்பிலும், ஸ்திரமான அரசியல் சூழலும் பெற்றிருந்த தமிழகத்தை நோக்கி வெளிநாட்டு, உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை படையெடுத்தன.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களால், முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்களும் தயாராக இல்லை. அதன்படியே, ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் இரண்டாவது ஆலையை அமைப்பதை விட்டு குஜராத் மாநிலத்தை தேர்வு செய்தது. ரூ.4,000 கோடி முதலீட்டில் அந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கடுத்து, ஜப்பானை சேர்ந்த இசுஸு நிறுவனம் ஆந்திராவில் ஆலை அமைத்துவிட்டது. ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனமும் ஆந்திரா சென்றுவிட்டது. இது பரவாயில்லை. நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய ஆலையை அமைப்பதற்கான யோசனையில் இருக்கிறது.

அப்படி இருந்தாலும், அது தமிழகத்தில் அமைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கார் உள்ளிட்ட வாகன நிறுவனங்களுக்கு பிற மாநிலங்கள் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் போதிய ஒத்துழைப்பை வழங்கி கவர்ந்து வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களிடம் 50-50 சதவீத லஞ்சம் கேட்டு அலற விட்டு வருகின்றனர் அரசியல்வாதிகள். தமிழகத்தில் புதிய ஆலை துவங்குவதற்கான நடைமுறைகளும் மிகுந்த தாமதம் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பெரிய அளவிலான முதலீடுகள் தற்போது தமிழகத்தைவிட்டு கை நழுவி சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால், அதனை பற்றி எல்லாம் கவலை கொள்ளலாமல் ஊரே பற்றி எரிகிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, அரசியல்வாதிகள் ஊழல் செய்வதிலும், அதனை மூடி மறைப்பதிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். 2000ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை சுமார் 17 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீட்டை பெற்ற தமிழகம், இப்போது பெரும் முதலீடுகளை இழந்து வருகிறது.

கார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அது தொடர்புடைய ஆய்வு மையங்கள், உதிரிபாக ஆலைகள் என அனைத்துமே இப்போது தமிழகத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க துவங்கி இருக்கின்றன. இதனால், முதலீடு மட்டுமில்லாமல், நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழகத்திற்கான வேலைவாய்ப்பு, வருவாய் போன்றவற்றில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் சிறந்த மனித வளம் இருப்பதாக வாகன துறையினரே ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், அரசியல் சூழல்கள்தான் இப்போது பெரும் தடையாக மாறி உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஸ்திரமான அரசியல் சூழல் உருவாகினால் மட்டுமே, இனி ஆசியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை சென்னை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.

English summary
Why Automobile Companies Are Running Away from Tamil Nadu?
Please Wait while comments are loading...

Latest Photos