நெடுஞ்சாலைகளில் உங்கள் கார் திருடுபோகாமல் தடுக்க 12 வழிகள்...

By Meena Krishna

கார்கள்... பெரும்பாலான வீடுகளில் அது வெறும் வாகனம் மட்டுமல்ல. குடும்ப உறுப்பினர்களின் ஒரு அங்கமாகவே அவை பாவிக்கப்படுகின்றன.

வெயிலிலும், மழையிலும் கார்கள் நின்றால் உடனடியாக அதைக் கூரைக்கு கீழ் கொண்டுபோய் நிறுத்தும் செயலுக்குப் பின்னால், கார் பழுதாகிவிடும் என்ற ஒரே காரணம் மட்டும்தான் இருக்கிறதா?. இல்லை அது உணர்வுரீதியாகத் தொடர்புடைய விஷயம். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் நம்முடன் ஒட்டிக் கொண்டு கார்கள் வருவதில்லை. அவசரகாலத்தில் நமக்கு ஆபத்பாந்தவனாகவும் அவை இருந்திருக்கின்றன.

டிப்ஸ்

எனவேதான் அந்தக் கார்களுக்கு ஏதோ ஒன்று நேர்ந்தால், அது நம் மனதை நேரடியாக பாதிக்கிறது.

அப்படிபட்ட கார்கள் திடீரென காணாமல் போனால் பணரீதியாக மட்டும் அதைப் பார்க்காமல் மனரீதியாகவும் வருத்தப்படுகிறோம். ராசியான காருங்க... என்னோட சுக, துக்கத்துல எல்லாத்துலயும் கூட வந்த வண்டிங்க... என உளப்பூர்வமாக அப்போது நாம் வேதனைப்படுவோம்.

கார் திருட்டைத் தடுக்கும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் சந்தையில் வந்தாலும், அவற்றையும் மீறி திருட்டுகள் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கின்றன.

அதிலும் நெடுஞ்சாலைகளில் கார்கள் காணாமல் போனால் திக்கு முக்காடி விடுவோம். எந்த திசையில் காரைக் கொண்டு போயிருப்பார்கள்? யாரை அணுகுவது? எங்கு புகார் கொடுப்பது? என பல கேள்விகள் நம் கண்ணைக் கட்டி விடும். அதேநேரத்தில் கொஞ்சம் உஷாராகவும், சமயோஜிதமாகவும் இருந்தால் நம் செல்லக் காரை பத்திரமாகப் பாதுகாக்கலாம்.

அதற்கான டிப்ஸ்கள் இதோ...

1. தனிமையான, ஆள் அரவம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தாதீர்கள். அது திருடர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதைப் போல. அந்த இடத்தில் கார் திருடுபோனால், உதவிக்குக் கூட யாரும் வரமாட்டார்கள். எனவே, காரை தனிமையான இடத்தில் நிறுத்த வேண்டாம்.

2. தெரியாத நபர் எவருக்கும் லிஃப்ட் கொடுக்காதீர்கள். இந்த விஷயத்தில் இளகிய மனதையும், இரக்க குணத்தையும் கையாண்டால், நீங்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். அதுமட்டுமின்றி அறிமுகமில்லாத நபருக்கு உதவுவது உடைமைகள் மற்றும் காரைத் தாண்டி உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.

3. நீண்ட தூர பயணத்தின்போது நீங்கள் களைப்படைந்து ஓய்வெடுக்க விரும்பினால், காரின் கண்ணாடிகளை காற்று வருவதற்கு மட்டும் இடைவெளி விட்டு நன்கு மூடி விட வேண்டும். அந்த இடைவெளியானது, வெளியே இருந்து எவரும் காருக்குள் கையை நுழைக்க முடியாத அளவு குறைவானதாக இருப்பது அவசியம். முக்கியமாக காரின் சாவியை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. கண்ணில் தென்படுபவர்களிடத்தில் எல்லாம் நிறுத்தி வழி கேட்காதீர்கள். உணவு விடுதி அல்லது பெட்ரோல் பங்க்குகளில் நிறுத்தி வழி கேட்கலாம். அந்த சமயத்தில் கார் திருடு போனால் கூட, அங்கிருக்கும் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

5. காரை நிறுத்தி அவசரமாக எதாவது வாங்கி வேண்டியிருந்தாலும், எஞ்சினை ஆஃப் செய்து சாவியை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காரை ஆன் பண்ணி நிறுத்தி சென்றீர்களேயானால், திரும்பி நீங்கள் நடந்துதான் போக வேண்டும்.

6. செல்லும் வழியில் ஏதேனும் மெக்கானிக் உதவி தேவைப்பட்டால், உடனடியாக அங்கீகரிககப்படட சர்வீஸ் சென்டர்களைத் தொடர்பு கொண்டு மெக்கானிக்குகளை வரவழையுங்கள். அறிமுகமில்லாத நபர்களின் உதவியை ஏற்க வேண்டாம்.

7. பயணத்தின்போது கார் கதவுகளைத் திறக்க இயலாதவாறு லாக் செய்வது அவசியம். ஏனெனில், சி்க்னல்களிலோ, சுங்கச்சாவடிகளிலோ கார் நிறுத்தப்படும்போது திருடர்கள் கதவைத் திறந்து துணிகரச் செயல்களில் ஈடுபடலாம்.

8. நீண்ட நேரம் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் வாகனம் உங்கள் காரை பின்தொடர்ந்து வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுங்கள். நிலைமையை நீங்களே கையாள முயற்சிக்க வேண்டாம்.

9. பயணங்களை கூடுமான வரையில் பகல் வேளைகளில் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேர பயணங்கள் சவாலும், ஆபத்தும் நிறைந்தவை என்பது நீங்கள் அறிந்ததே.

10. தொலைதூரப் பயணத்தை தனியாக மேற்கொள்ளாதீர்கள். உறுதுணைக்காக நம்பிக்கையான நபரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

11. ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்பு, சர்வீஸ் சென்டர்கள், முக்கிய உறவினர்கள் ஆகியோரது தொலைபேசி எண்களை எப்போதும் கொண்டு செல்லுங்கள். அவசரகாலச் சூழல்களைச் சமாளிக்க அவை உங்களுக்கு கைகொடுக்கும்.

12. மேற்கூறிய எந்த ஆலோசனையும் உங்களுக்கு கைகொடுக்காமல், திருடர்கள் உங்களது காரை திருடிவிட்டால், சினிமா ஹீரோவைப் போல தன்னிச்சையாக செயல்படாதீர்கள். அது உங்களது உயிருக்கே ஆபத்தாகிவிடும். போலீஸுக்கு தகவல் தெரிவியுங்கள். நிச்சயம் உங்களது காரோ அல்லது காப்பீட்டுத் தொகையோ கிடைக்கும்.

மழை வருவதற்கு முன்கூட்டியே சிற்றறிவு கொண்ட எறும்புகள் எவ்வாறு சமயோஜிதமாக செயல்படுகிறதோ, அதுபோல நாமும் சற்று ஜாக்கிரதையாக இருந்தால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கலாம்.

Most Read Articles
English summary
12 Ways To Avoid Your Car Getting Stolen On Highways!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X