கார் பெயிண்டிங்கைப் சீர்குலைக்கும் 7 விஷயங்கள்.... ஜாக்கிரதை...!!

Written by: Meena

நாம் வைத்திருக்கும் கார், சிறியதோ அல்லது பெரியதோ, அதை வெளியே எடுத்துச் செல்லும்போது நமக்கு ஒரு பெருமிதம் இருக்கும்.  யாராவது அதைப் பற்றிக் கேட்டாலோ அல்லது பாராட்டினாலோ நமக்கு உச்சியே குளிர்ந்து விடும். பிறகென்ன... காசு குடுத்து கார் வாங்குவது நான்கு பேர் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்கும்தானே.... பொதுவாகவே காரின் உள்புறத்தைக் காட்டிலும், அதன் வெளிப்பகுதிக்கு நாம் கூடுதல் கவனம் கொடுப்போம். காரணம், அதுதான் அனைவரது கண்ணிலும் பளிச்சென்று தெரியும் என்பதால்.

காருக்கு அழகே அதன் வெளிப்புறத் தோற்றமும், அழகான பெயிண்டிங்கும்தான். என்னதான் கவனமாக நாம் துடைத்து பாதுகாத்து வைத்தாலும், சில நேரங்களில் பெயிண்டிங் உறிந்தோ அல்லது சில இடத்தில் மங்கியோ விடுகிறது. அந்த இடம் மட்டும் பார்ப்போர் கண்ணை உறுத்தும். இதற்கு கார் நிறுவனம் பொறுப்பல்ல. நமது அலட்சியம்தான் அத்தகைய குறைகள் ஏற்படக் காரணம். சில விஷயங்களை கவனமாகக் கையாண்டால் பெயிண்டிங் எப்போதும் போகாமல் பளிச்சென்று இருக்கும் என உத்தரவாதம் அளிக்கிறது ஃபோர்டு நிறுவனம்.

அந்நிறுவனம் அளி்க்கும் 7 டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக...

1. காரில் போகும்போது சிறு பூச்சிகள் எதிரே வந்து மோதி விடும். இறந்த பூச்சிகள் அப்படியே சிறு சிறு துகள்களாக காரில் காய்ந்து விடும். இதை நீண்ட நாள்கள் கவனிக்காமல் விட்டால் அந்தப் பகுதியில் உள்ள பெயிண்டிங் அப்படியே பெயர்ந்து போக வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்னைகளைத் தடுக்க, உடனுக்குடன் காரைத் தூய்மைப்படுத்திவிடுவது நல்லது. பக் மற்றும் தார் கறைகளைப் போக்கும் கார் வாஷ்களை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்ல பலன் தரும்.

 

2. கார் பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. டேங்கின் விளிம்பு வரை எரிபொருளை நிரப்பும்போது, அது வழிந்து பெயிண்டின் மேல் படுவது இயல்பு. அதைக் கவனிக்காமல் விட்டால் அது கறையாக மாறிவிடும்.

அதைத் தவிர்க்க, எரிபொருள் நிரப்பும்போது ஃபூயல் பம்பின் கீழே மைக்ரோ ஃபைபர் துணியைப் பயன்படுத்தலாம். அதை மீறியும் எரிபொருள் சிந்தினால் உடனடியாக அதைத் துடைத்து விடுவது நல்லது.

 

 

3. பறவைகளின் எச்சம்தான் பெரும்பாலும் அனைவரும் சந்தித்த பிரச்னையாக இருக்கும். காரின் மேல் எச்சம் விழுந்து அதை நீண்ட நாள் கவனிக்காமல் விட்டுவிட்டால், பிறகு அந்தக் கறையை நீக்குவது எளிதல்ல.

இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு உடனுக்குடன் பறவைகளின் எச்சத்தை துடைத்து விடுவதுதான். ஒருவேளை அது காய்ந்து விட்டால், அதில் நீரைத் தெளித்து நன்கு ஊறிய பிறகு மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு துடைத்தெடுத்தால் பெயிண்டிங்கில் எந்த சேதாரமும் ஏற்படாது.

 

4. சாலையில் செல்லும்போது சிறு கற்கள் அல்லது மணல்கள் காரின் வெளிப்புறத்தின் மேல் தெறிந்து விழுந்து பெயிண்டிங்கில் கீறல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க இயலாது.

அதேவேளையில், அவ்வாறு ஏற்பட்ட கீறல்களை கவனிக்காமல் விட்டு விட்டால் அந்த இடத்தில் துரு பிடித்துவிடும். அதைத் தடுக்க, உடனடியாக அதனை சரி செய்வது அவசயம். ஃபோர்டு 3 வெட் பெயிண்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தியும் கீறல் விழுந்த இடத்தை சீராக்கலாம்.

 

5. காரில் சிறிது தூசு படிந்திருப்பது இயற்கை. அதில் விரலை வைத்துத் தேய்த்தாலோ அல்லது பெயர்களை எழுதினாலோ கீறல் விழ வாய்ப்புள்ளது. சேண்ட் பேப்பர் எனப்படும் எமர் ஷீட்களை வைத்துத் தேய்ப்பதும் இதுவும் ஒரே மாதிரியானதுதான். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

பிறரது இந்த செய்கையை நம்மால் தடுக்க இயலாது. அதேவேளையில் அதுபோன்ற நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாமல் இருக்கலாம். தவிர, காரை அடிக்கடி துடைத்துக் கொண்டே இருந்தால் தூசி படிவதைக் குறைக்க முடியும்.

 

 

6. காற்றையும், நீரையும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மாசுபடுத்த முடியுமா, அதைச் செய்துவிட்டோம். காற்றில் இருக்கும் சாம்பல் மற்றும் கரி மாசு நிச்சயமாக காரில் ஒட்டிக் கொள்ளும். இதை வெறுமனே தண்ணீர் ஊற்றிக் கழுவினால் பெயிண்டிங்கை சேதப்படுத்தும்.

அதைத் தவிர்க்க, பார்க்கிங் செய்யும் போது காரை முழுவதுமாக கவர் கொண்டு மூடிவிடுவது நல்லது. மேலும், இத்தகைய தூசியை ஈரமில்லாத துணியைக் கொண்டு துடைத்தாலே போதும்.

 

7. காரைத் தூய்மையாக்கப் பயன்படுத்தும் துணி மற்றும் உபகரணங்கள் அழுக்கும், மாசும் நிறைந்ததாக இருந்தால் அதுவே காரின் அழகைக் கெடுத்துவிடும். புதிதாக பெயிண்டிங்கில் கீறல்களை உருவாக்க அத்தகைய தூய்மையற்ற பொருள்களே போதுமானது.

எனவே, சுத்தமான துணிகளைக் கொண்டு காரைத் தூய்மைப்படுத்த வேண்டும். காரைக் கழுவும்போது கைகளைக் கொண்டு துடைக்கக் கூடாது. அதிகமாகத் தொடவும் கூடாது. இதைப் பின்பற்றினாலே காரை மெருகு குலையாமல் வைத்திருக்க முடியும்.

 

 

 

Story first published: Sunday, July 17, 2016, 9:55 [IST]
English summary
7 Things That May Damage Vehicle Paint According To Ford.
Please Wait while comments are loading...

Latest Photos