அராய் மைலேஜை மறந்துடுங்க... காரின் உண்மையான மைலேஜை கண்டுபிடிக்கும் ட்ரிக்!

Written By:

கார், பைக் வாங்க செல்லும் வாடிக்கையாளர்களின் முதல் கேள்வியே எவ்வளவு கொடுக்கும்? என்பதாகத்தான் இருக்கிறது. பெட்ரோல் போட்டே பர்ஸ் காலியாயிடுதுப்பா? ஷோரூம்ல லிட்டருக்கு 25 கிமீ போகும்னு சொன்னாங்க, ஆனா, இங்கே 10 கிமீ கூட மைலேஜ் கிடைக்க மாட்டேங்குது என்று பலர் புலம்பி தள்ளுவதை காண முடியும்.

இந்த நிலையில், ஷோரூமில் உள்ள விற்பனை அதிகாரிகளும், வாகன நிறுவனங்களின் மார்க்கெட்டிங் அதிகாரிகளும் சொல்லும் அந்த கவர்ச்சிகர மைலேஜ் விபத்திற்கும், நடைமுறையில் உங்களது வாகனம் மைலேஜ் கொடுப்பதற்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. அதை தெரிந்துகொண்டால், மைலேஜ் விபரங்களை எந்தளவு நம்ப வேண்டும் என்பது பற்றி ஐடியா கிடைக்கும்.

மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் செயல்பட்டு வரும் அராய் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வாகன ஆராய்ச்சி கூட்டமைப்பு [ARAI] இந்தியாவில் விற்பனைக்கு செல்லும் புத்தம் புதிய வாகனங்களை ஆய்வு செய்து பல விஷயங்களை வெளியிட்டு வருகிறது. அதில் பலரின் கவனத்தை ஈர்ப்பது இந்த மைலேஜ் என்ற விஷயம்தான்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பு வெளியிடும் மைலேஜ் விபரத்திற்கும், நடைமுறை மைலேஜுக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில், சில முக்கியமான காரணங்களை தொடர்ந்து காணலாம்.

அராய் அமைப்பு புதிய கார்களை ஆய்வு மையத்தில் வைத்தே மைலேஜ் சோதனை நடத்துகிறது. Indian Driving Cycle[IDC] என்ற கணக்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை அறிவிக்கிறது.

முழுக்க முழுக்க இது ஆய்வகத்தில் நடத்தப்படும் சோதனை முடிவுகள். நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வகையில் சேஸீ டைனமோமீட்டர் என்ற சோதனை கருவியில் வைத்து காரை இயக்கி ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதாவது, மணிக்கு சராசரியாக 31.6 கிமீ வேகத்தில் கார் இயங்குவதாக கருதி சோதனைகள் செய்யப்படுகின்றன.

மணிக்கு 90 கிமீ வேகம் என்பதே இங்கு அதிகபட்ச வேகமாக கணக்கில் கொள்ளப்படும். எனவே, சாதாரண சாலைகளில் இயக்கப்படும் காரின் மைலேஜுக்கும், இந்த சேஸீ டைனமோமீட்டர் கருவி மூலமாக கிடைக்கும் மைலேஜுக்கும் அதிக வித்தியாசங்கள் ஏற்படுகிறது.

மேலும், வெறும் 19 நிமிடங்கள் மட்டுமே மைலேஜ் சோதனை நடத்தப்படுகிறது. அதாவது, 10 கிமீ தூரம் கார் ஓடியிருந்தால் எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என்பதை அடிப்படையாக வைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.

 

மேலும், சிக்னல்களில் கார் ஐட்லிங்கில் நிற்கும்போது செலவாகும் எரிபொருள் அளவு மற்றும் ஏசி பயன்படுத்தும்போது செலவாகும் கூடுதல் எரிபொருள் செலவு உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதனால், கார் தரும் உண்மையான மைலேஜுக்கும், அராய் மைலேஜுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன.

மேலும், அராய் மையத்தில் புத்தம் புதிய கார்கள் மட்டுமே சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் கார் பழமையாகும்போது பாகங்கள் தேய்மானம், ஓட்டும் முறை, சீதோஷ்ண நிலை போன்றவற்றால் காரின் மைலேஜில் அதிக வேறுபாடு ஏற்படுகிறது.

சரி, கார் வாங்கிவிட்டோம், ஓபிடி போர்ட் கொண்ட கார்களில் கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே, அதன் நிகழ்நேர மைலேஜ் மற்றும் சராசரி மைலேஜ் உள்ளிட்ட விபரங்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும். அதிலும் சிக்கல் இருக்கிறது. அதுவும் உண்மையான மைலேஜ் என்பதை உறுதியாக சொல்ல முடிவதில்லை.

ஆனால், கார் தரும் உண்மையாக எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதை எளிமையான முறையில் தெரிந்து கொள்ளலாம். ஆம், காரின் டேங்கில் முழுவதுமாக எரிபொருள் நிரப்பிவிடுங்கள். உடனே ட்ரிப் மீட்டரை பூஜ்யத்திற்கு மாற்றிவிடுங்கள்.

டேங்கில் பாதியளவு எரிபொருள் தீர்ந்திருக்கும் நிலையில், மீண்டும் முழுவதுமாக எரிபொருள் நிரப்புங்கள். இப்போது, பெட்ரோல் பங்கில் எத்தனை லிட்டர் போட்டிருக்கிறார்கள் என்ற அளவை குறித்துக் கொள்ளவும்.

பின்பு ட்ரிப் மீட்டரில் ஓடியிருக்கும் தூரத்தையும், இரண்டாவதாக எத்தனை லிட்டர் எரிபொருள் போட்டிருக்கும் அளவுடன் வகுத்துவிட்டால், அதுதான் உண்மையாக மைலேஜாக இருக்கும். உதாரணத்திற்கு ட்ரிப் மீட்டரில் 400 கிமீ தூரம் ஓடியிருந்தால், இரண்டாவதாக 25 லிட்டர் பெட்ரோல் போட்டிருப்பதாக கணக்கில் கொண்டால், உங்களது கார் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜ் தருகிறது என்று அர்த்தம்.

English summary
How to check the mileage of the car Correctly? Here is the answer.
Please Wait while comments are loading...

Latest Photos