கார் கவர் தேர்வு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் சில டிப்ஸ்!

Written By:

நகர்ப்புறங்களில் வீட்டில் போதுமான இடவசதி இல்லாமல், தற்போது பெரும்பாலான கார்கள் தெருவோரத்தில்தான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தினசரி பயன்படுத்துவோரும் காரை வீட்டிற்குள் நிறுத்துவதை தவிர்த்து, எடுப்பதற்கு வசதியாக வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கமாக உள்ளது.

பல லட்சம் மதிப்பில் வாங்கப்படும் கார்களை இவ்வாறு தெருவோரத்தில் நிறுத்தும்போது பல விதமான பிரச்னைகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மர தழைகள், பறவை எச்சங்கள், தூசி படிதல், விளையாட்டாக சிறுவர்கள் கோடு கிழித்து விடும் பிரச்னை, தட்பவெப்பத்தால் நிறம் மங்குதல் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேர்கிறது.

காரின் உட்புறத்தில் இருக்கும் விலை உயர்ந்த மியூசிக் சிஸ்டம் போன்ற ஆக்சஸெரீகளை திருடர்கள் எளிதாக கண்டு கொண்டு திருடிச் செல்வதற்கும் வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக் கிழமையில் கார் வாஷ் சென்டரில் அரை நாள் கால் கடுக்க காத்திருந்து 500 ரூபாய் கொடுத்து கழுவி விட்டு வந்து நிறுத்தினால், அடுத்த சில மணிநேரத்தில் கார் தூசி படிந்து எரிச்சலை ஏற்படுத்தும்.

இதுபோன்று பல பிரச்னைகளை தவிர்க்க தீர்வாக இருப்பது கார் கவர்தான். கவர் போட்டு காரை மூடி வைக்கும்போது மேற்சொன்ன பிரச்னைகளிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும். ஆனால், கார் கவரை தேர்வு செய்யும்போது, பயன்படுத்தும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தினசரி காரை பயன்படுத்துவோர் இலகு எடை கொண்ட கார் கவரை தேர்வு செய்யவும். கழற்றி, மாட்டுவதும், மடித்து வைப்பதும் எளிது. எப்போதாவது காரை எடுப்பவர்களும், வீட்டிற்குள் நிறுத்தி வைப்பதற்கும் சற்று தடிமனமான கார் கவரை தேர்வு செய்யலாம்.

கார் கவரை தேர்வு செய்யும்போது அதிக கனமான தார்பாலின் கவரை தேர்வு செய்யக்கூடாது. நீண்ட நாள் பயன்பாட்டின்போது காரின் மேற்புறத்தில் கீறல்கள் மற்றும் பெயிண்ட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அடர் நிற கவர்களைவிட வெளிர் நிறத்திலான கார் கவரை வாங்குவது சிறந்தது. அதிக வெயில் அடிக்கும்போது வெப்பத்தை அதிகம் உள்வாங்காது. மேலும், புற ஊதா கதிர்வீச்சை தடுக்கும் கவர்களும் கிடைக்கின்றன.

காரின் நீள அகலத்துக்கு தக்கவாறு கவர்கள் ஏ, பி, சி... என பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு ஹேட்ச்பேக் கார்களுக்கு ஏ சைஸ் கவர்கள் பொருத்தமாக இருக்கும். வலுவான பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பதையும் பார்த்து வாங்கவும்.

காரின் சைடு மிரர்கள் மற்றும் ஆன்டென்னாவுக்கு தனித்தனியாக பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட கவர்களை வாங்குவது அவசியம். இல்லையெனில், ஆன்டென்னா வளைந்துபோகும்.

பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட டீலரில் கார் கவர் வாங்குவது சிறந்தது. அங்கு பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட கவர்கள் கிடைக்கும். ஆனால், அங்கு தரமான கார் கவர் கிடைக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

 

ஏனெனில், சில டீலர்களில் தரமற்ற கார் கவர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சரி, அப்படியானால் வெளியில் வாங்க முடிவு செய்தால், கார் கவர் சரியான ஃபிட்டிங் உள்ளதா என்பதை பார்த்து வாங்கவும்.

உங்கள் காருக்கு பொருந்தாத பெரிய அளவு கார் கவரை வாங்கும்போது, காற்று வீசும்போது இந்த கவர் திறந்து கொள்ளும். இதனால், பெரும் தொல்லையாகிபோகும். கவரின் வெளிப்புறம், உட்புறத்தை வித்தியாசப்படுத்துவதற்காக அடையாள குறியீடு போட்டு வைப்பதும் நல்லது.

வெளிச் சந்தையில் தரமான மற்றும் சிறந்த ஃபிட்டிங் உள்ள கவர்கள் கிடைக்கின்றன. அதாவது, கவரின் முன்புறத்திலும், பின்புறத்திலும் எலாஸ்ட்டிக் வைத்து தைக்கப்பட்டிருக்கும். அவை காருடன் சிறப்பாக பொருந்திக் கொள்ளும். கழற்றுவதும், போடுவதும் எளிது.

கடற்கரையோர பிரதேசங்களில் கார் வைத்திருப்போர், உப்புக் காற்றிலிருந்து பாதிப்பை தவிர்க்கும் விசேஷ கோட்டிங் செய்யப்பட்ட கார் கவரை கேட்டு வாங்குவது நலம்.

பொதுவாக மழை பெய்யும்போது கார் கவரை கழற்றி வைப்பதே சாலச் சிறந்தது. இருந்தாலும், மழை பெய்யும்போது ஓடிபோய் கழற்ற முடியாது. எனவே, மழை நீர் உட்புகாத விசேஷ கோட்டிங் கொண்ட கார் கவர்களை வாங்கலாம்.

மழை நேரங்களில் கார் கவரை பயன்படுத்தும்போது சில பிரச்னைகள் ஏற்படும். கவரில் உள்ள தூசிகள், மழை நீருடன் கலந்து காரில் படிந்துவிடும். கவரை கழற்றும்போது கார் முழுவதும் திட்டு திட்டாக தூசி படிந்துவிடும்.

மேலும், மழை பெய்து விட்டவுடன், ஈரத்தன்மையுள்ள கார் கவரை கழற்றி வைத்துவிடுங்கள். நன்கு உலர்ந்த பின் போடவும். இல்லையெனில், கார் கவரில் இருக்கும் ஈரத்தன்மையால் பெயிண்ட் மற்றும் சில பாகங்களை பாதித்துவிடும். வெயில் படாமல் காரில் துருப்பிடிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

கார் கவரை வாரத்திற்கு ஒருமுறை தூசி தட்டி பயன்படுத்தவும். இதனால், காரின் மேற்பகுதியில் தூசி படலம் உருவாவதையும் தவிர்க்க முடியும்.

வெளிச்சந்தையல் ரூ.2,000 விலையிலிருந்து தரமான கார் கவர்கள் கிடைக்கின்றன. மிக தரமான கவர்கள் ரூ.3,500 முதல் ரூ.5,000 வரையிலான விலையிலேயே வாங்க முடியும். Polco, Tyvek போன்ற கார் கவர்கள் வெளிச் சந்தையில் விற்பனையாகும் சிறந்தவையாக இருக்கின்றன.

விலை சற்று அதிகமானாலும் யோசிக்காமல் தரமான கவர்களையே வாங்கி பயன்படுத்துங்கள். மலிவு விலை கார் கவர்களை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்.

 

English summary
How to Choose and Use Car Cover: Tips
Please Wait while comments are loading...

Latest Photos