ஏஎம்டி கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!

ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார்களை இயக்கும்போது மனதில் வைக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே காணலாம்.

Written By:

ஆட்டோமேட்டிக் கார்கள் விலை மற்றும் பராமரிப்பு செலவு அதிகம்; மைலேஜ் குறைவு என்பதால் இந்தியர்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்த நிலையில், ஏஎம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கார்கள் தற்போது பாப்புலராகி உள்ளது.

ஆனால், முழுமையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட ஆட்டோமேட்டிக் கார்களுக்கும் தொழில்நுட்ப ரீதியிலும், நடைமுறை பயன்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டு. எனவே, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார்களை இயக்கும்போது மனதில் வைக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே காணலாம்.

முழுமையான தானியங்கி இல்லை

முழுமையான ஆட்டோமேட்டிக் கார்களை போன்று ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்களின் தொழில்நுட்பம் இல்லை. சாதாரண மேனுவல் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தில், க்ளட்ச் இயக்கம் மட்டுமே தானியங்கி முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, ஆக்சிலரேட்டரை சீராக கொடுக்க பழகிக் கொள்ளுங்கள். இதனால், கியர் மாறும்போது ஏற்படும் 'ஜெர்க்' ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

தேவையில்லை...

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இயக்குவதற்கு ஏதுவாக, இப்போது வரும் நவீன கார்களில், ஆக்சிலரேட்டரை கொடுக்காமலேயே கார் நகர்வதற்கான Creep function உள்ளது. மேனுவல் கார்களில் இது க்ளட்ச் கட்டுப்பாட்டில் இயங்கும். ஏஎம்டி கார்களில் பிரேக் பெடலை சற்று ரீலிஸ் செய்தாலே கார் முன்னோக்கி நகரும். மெதுவாக நகர்த்த ஆக்சிலரேட்டர் கொடுக்க தேவையில்லை.

சிக்னலில்...

சிக்னலில் அதிக நேரம் நின்றிருக்கும் அவசியம் ஏற்பட்டால், கியரை நியூட்ரல் மோடிற்கு மாற்றிவிடவும். ஏனெனில், ஏஎம்டி கார்களில் டிரைவ் மோடில் வைத்து நிறுத்தி இருக்கும்போது Creep Function மூலமாக எஞ்சின் ஐட்லிங் அதிகமாக இருக்கும். அப்போது பிரேக்கை பிடித்து நிறுத்தி வைத்திருக்கும்போது எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

டிரைவ் மோடு

கார் நின்ற பின்னரே டிரைவிங் மோடுகளை மாற்ற வேண்டும். மேலும், நியூட்ரல் மோடில் வைத்து எஞ்சினை அலற விடுவதையும் தவிர்க்கவும். ஆக்சிலரேட்டர் இயக்கத்தை வைத்து, கியர் மாற்றம் நடப்பதால், தேவையில்லாத சமயத்தில் ஆக்சிலரேட்டர் கொடுப்பதை தவிர்க்கவும். இல்லையெனில், கியர்பாக்ஸில் பிரச்னை ஏற்படும்.

ஓவர்டேக் கவனம்...

ஏஎம்டி கார்களில் ஓவர்டேக் செய்யும்போது மிக கவனமாக இருப்பது அவசியம். மேனுவல் கார் போன்று கியரை சட்டென குறைத்து காரின் வேகத்தை அதிகரித்து ஓவர்டேக் செய்ய முடியாது. எனவே, முன்னால் செல்லும் வாகனம் மற்றும் காரின் வேகத்தையும் ஒப்பிட்டு ஓவர்டேக் செய்வது அவசியம். மிகவும் விழிப்பாக ஓவர்டேக் செய்ய வேண்டியது அவசியம்.

எஞ்சின் பிரேக்கிங்

மேனுவல் கியர்பாக்ஸ் கார்களில் அவசர சமயத்தில் கியரை தடாலாடியாக குறைத்து எஞ்சின் பிரேக்கிங் செய்யும் வாய்ப்புள்ளது. ஆனால், காரின் வேகத்தை பொறுத்து கவனமாக செய்ய வேண்டும். இந்த வசதி ஏஎம்டி கார்களில் இல்லை. எனவே, பிரேக்கை நம்பி மட்டுமே ஓட்ட வேண்டும்.

ஹேண்ட்பிரேக்

பொதுவாக ஆட்டோமேட்டிக் கார்களில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதி தரப்படுகிறது. ஏற்றமான மலைப்பாதைகளில் செல்லும்போது கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் வசதிதான் இது. ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான ஏஎம்டி கார்களில் இந்த வசதி கொடுக்கப்படவில்லை. எனவே, கார் பின்னோக்கி நகர்வதை தடுக்க ஹேண்ட் பிரேக் யுக்தியை பயன்படுத்தவும்.

தெரிந்தோ, தெரியாமலோ...

புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு இந்த விஷயம் தெரியாமல் கூட இருக்கலாம். அதாவது, ஏஎம்டி கார்களில் பிரேக் பெடல் மற்றும் ஆக்சிலரேட்டர் பெடல்களை வலது காலால் மட்டுமே இயக்க வேண்டும். இடது காலை பயன்படுத்த வேண்டாம்.

ஏஎம்டி கார் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். ஆனால், அந்த காரின் சூட்சுமங்கள் பிடிபடும் வரையில் சற்று கவனமாக ஓட்ட பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், அவற்றை முழுமையாக மனதில் வைக்க வேண்டும் என்பதற்காக இங்கே இந்த வழிமுறைகளை வழங்கியிருக்கிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, November 4, 2016, 14:10 [IST]
English summary
How to Drive an Automated Manual Transmission Cars. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos