கார் வாங்கும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்!

கார் வாங்கும்போது செய்யும் சில தவறுகள், ஆண்டாண்டு காலத்துக்கு பெரும் தொல்லையை தரும் விஷமாகிவிடும். கார் வாங்கும்போது செய்யக்கூடாத தவறுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

Written By:

கார் வாங்கும் திட்டம் நீண்ட கால அடிப்படையிலானதாகவே பலருக்கும் அமைகிறது. வீடு கட்டுதல், திருமணம் செய்வதற்கு எந்தளவு திட்டமிடுகிறோமோ அந்த அளவுக்கு கார் வாங்கும்போது சரியாக திட்டமிடுவதும், தேர்வு செய்வதும் அவசியம்.

அவ்வாறு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக இருக்கும் இந்த கார் வாங்கும் திட்டத்தை கையில் எடுக்கும்போது செய்யக்கூடாத சில தவறுகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

வீட்டில் உள்ள பெரியவர்களை கணக்கில்கொண்டே பலரும் கார் வாங்கிவிடுகின்றனர். சிறியவர்களை கணக்கில்கொள்வது கிடையாது. ஆனால், இது நடைமுறை பயன்பாட்டின்போது மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு 5 பெரியவர்களும் 3 சிறியவர்களும் இருக்கும் வீட்டில் ஹேட்ச்பேக் அல்லது செடான் கார் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஆனால், அது தவறாக அமைந்துவிடும். கார் வாங்கி ஓராண்டிற்குள் சிறியவர்கள் சற்று வளர்ந்தவுடன் அவர்களை காரில் உட்கார வைத்து அழைத்துச் செல்வது மிகுந்த சவுகரிய குறைச்சலை ஏற்படுத்தும். எனவே, பட்ஜெட்டை பொறுத்து 7 சீட்டர் கார்களை தேர்வு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

அமர்ந்து செல்வதற்கு மட்டுமல்ல, கூடுதலாக அவர்களது பைகளை வைப்பதற்கும் சிரமம் என்பதுடன், காரின் நிலைத்தன்மையும் வெகுவாக பாதிக்கப்படும். சஸ்பென்ஷன் அமைப்பும் சீக்கிரமே பாதிக்கும். இது விபத்துக்கும் அடிகோலும். ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் கார்களைவிட ஒரு லட்ச ரூபாய் கூடுதலாக பட்ஜெட் போட்டால் காம்பேக்ட் எம்பிவி அல்லது எஸ்யூவி கார்களை வாங்கிவிட முடியும்.

பட்ஜெட்டை கருதி மிட் வேரியண்ட் வாங்குவதையே பலரும் சிறந்த சாய்ஸாக கருதுகின்றனர். ஆனால், சற்று கூடுதல் பட்ஜெட் என்றாலும் அனைத்து வசதிகளும் பொருந்திய டாப் வேரியண்ட் கார்களையே வாங்குவது அவசியம். குறிப்பாக, ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடல்களை தேர்வு செய்வது அவசியம்.

ரூ.4.99 லட்சம் விலையில் ஆரம்பம் என்று சொல்லும் விளம்பரங்களை பார்த்து கார் ஷோரூம் செல்வீர்கள். அங்கு சென்றவுடன், வரி, கையாளும் செலவு என்று கூடுதலாக ஒரு லட்ச ரூபாயை சேர்த்து ஆன்ரோடு விலைலயாக கூறுவார்கள். இதனை கேட்டு சரி நம்ம பட்ஜெட்டுக்கு பேஸ் மாடலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

சில பட்ஜெட் கார்களின் பேஸ் மாடல்களில் ஏசி, மியூசிக் சிஸ்டம், பவர் விண்டோஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இருக்காது. மேலும், மியூசிக் சிஸ்டம் போட வேண்டும் என்றால் கதவுகளில் உள்ள பேனல்களை கழற்றி ஸ்பீக்கர்களை பொருத்துவார்கள். அதேபோன்று, பவர் விண்டோஸ், ரிமோட் கன்ட்ரோல் லாக் உள்ளிட்ட வசதிகளை சேர்க்க வேண்டும் என்றாலும் கழற்றி மாற்ற வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது கதவுகளில் உள்ள பேனல்கள் கலகலத்து போகும். அடுத்த ஒரு சில மாதங்களில் மோசமான சாலைகளில் செல்லும்போது அதிர்வுகளில் தேவையில்லாத சப்தம் வரத் துவங்கும். அதுவே, டாப் வேரியண்ட்டுகளில் கதவுகளை கோர்ப்பதற்கு முன்னதாக அதற்குரிய வசதிகள் சேர்க்கப்பட்டு கச்சிதமாக பொருத்தப்பட்டிருக்கும்.

பேஸ் மாடலுக்கும், மிட் வேரியண்ட்டுக்கும் ஒரு லட்ச ரூபாய் கூட போகிறதே என்று அச்சப்பட தேவையில்லை. நீங்கள் முன்பணத்தில் கட்ட வேண்டும் என்ற அச்சம் தேவையில்லை. அதாவது, கடன் திட்டம் மூலமாக வாங்கும்போது கூடுதல் தொகை மாதத் தவணையில் சரிவிகிதத்தில் பகிர்ந்துவிடும் வாய்ப்புள்ளது.

அப்போது சராசரியாக ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கூடுதலாக செலுத்த நேரிடும். இது ரூ.10 லட்சம் வரையிலான பட்ஜெட் கொண்ட கார்களுக்கு பொருந்தும். உதாரணத்திற்கு ரூ.8,500 மாதத் தவணை வரும்பட்சத்தில் டாப் வேரியண்ட் வாங்கும்போது ரூ.,9,200ல் இருந்து ரூ.9,800 என்ற அளவில் மாதத் தவணை வரும். 

இதில், மற்றொரு அனுகூலத்தையும் நாம் பார்க்க வேண்டும். மறு விற்பனை செய்யும்போது பேஸ் மாடல்கள் மிக குறைந்த விலைக்கு கேட்கப்படும் என்பதோடு, விற்பனை செய்வதிலும் சற்று சிரமம் ஏற்படும். ஆனால், டாப் வேரியண்ட் மாடல்கள் எளிதாக விற்பனை செய்ய முடியும்.

காருக்கான முதலீடு சற்று அதிகம் இருப்பதால், நம் நாட்டில் 80 சதவீதம் பேர் வங்கிக் கடன் மூலமாகவே கார் வாங்குகின்றனர். இவ்வாறு வாங்கும்போது முடிந்தவரை அதிகபட்சமாக முன்பணத்தை செலுத்துவது நல்லது. 100 சதவீதமும் கடன் வசதி செய்து கொடுக்கிறார்கள் என்பதற்காக முன்பணம் இல்லாமல் கார் வாங்க செல்லாதீர்கள்.

இதுபோன்ற கார் கடன்களுக்கு வட்டி விகிதம் மிக அதிகம். இதனால், காரின் விலையில் பாதி அளவுக்கு வட்டி செலுத்த நேரிடும். அதேபோன்று, நீண்ட கால கடன் திட்டங்களையும் தேர்வு செய்யக்கூடாது. அதாவது, புதிய கார்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மிகாமலும், பழைய கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மிகாமலும் கடன் திட்டத்தை போடுவது அவசியம்.

வங்கிக் கடன் போடும்போது மாதத் தவணை தேதியை உங்களது சம்பள நாளுக்கு பின் வருமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். சில வங்கிகளில் இரண்டு நாட்களை மாதத் தவணை பிடித்தம் செய்யும் தினமாக பின்பற்றுவர். அவ்வாறு இருக்கும்போது அது உங்களது சம்பள நாளுக்கு பின்னால் இருக்குமாறு வங்கி விற்பனை பிரதிநிதியிடம் வலியுறுத்திக் கூறிவிடுங்கள்.

பழைய மார்க்கெட்டில் சிறிய ரக கார்களை வாங்கும்போது வங்கிக் கடனை தவிர்த்தல் நலம். ஏனெனில், பழைய கார்களுக்கான கடன் திட்டத்தில் வட்டி மிக அதிகம். எனவே, அதனை கணக்கிட்டு பின்னர் முடிவு செய்யுங்கள்.

கார் வாங்குவதற்கு முன் நீங்கள் தேர்வு செய்திருக்கும் காரை கண்டிப்பாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு வாங்குவம் அவசியம். பலர் டெஸ்ட் டிரைவை சம்பிரதாயமாக கருதி தவிர்த்துவிடுகின்றனர். இது மிக தவறான விஷயம். குறிப்பாக, உங்கள் குடும்பத்தினரையும் காரில் அமர வைத்து ஓட்டிப் பார்ப்பது அவசியம்.

நீங்கள் வாங்கப்போகும் கார் மாடலை வீட்டிற்கு எடுத்து வரச் சொல்லி டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். மேலும், உங்களது வீட்டு போர்டிகோவில் நிறுத்துவதற்கு வசதியாக இருக்கிறதா அல்லது வாசலில் நிறுத்துவதற்கு இடவசதி போதுமானதாக உள்ளதா என்பதையும் பார்த்துவிடுங்கள். இடவசதி இல்லாமல் கார் வாங்கும்போது பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

உங்களுக்கு கார் ஓட்டுவதற்கு போதிய அனுபவமில்லை என்றால் கார் ஓட்டத் தெரிந்த நண்பர்களை அழைத்துச் செல்வது அவசியம். மேலும், காரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளளவும். உங்களுக்கு உள்ள சந்தேகங்களை தயக்கமில்லாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

கார் வாங்கும் முனைப்பில் பலருக்கும் அதன் பராமரிப்பு செலவு குறித்த எண்ணம் கண்ணை மறைத்துவிடும். அதாவது, மாதத் தவணை மட்டுமின்றி, மாதந்தோறும் காருக்கான எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் என தொடர்ந்து கூடுதல் செலவுகள் இருக்கும்.

உதாரணத்திற்கு பெட்ரோல் காரை பயன்படுத்துபவர்கள் சராசரியாக மாதத்திற்கு 600 கிமீ தூரம் பயன்படுத்தினால், அந்த கார் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என்று வைத்துக் கொண்டால்கூட, 40 லிட்டர் பெட்ரோல் போட வேண்டியிருக்கும். மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.2,500 வரை செலவிட வேண்டியிருக்கும்.

அதேபோன்று, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் வாங்கப்படும் கார்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு  ஆண்டுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000வரை பராமரிப்பு செலவும், அதன் பிறகு இது கூடுதலாகவும் வாய்ப்புள்ளது. 

ரூ.20,000 வரை இன்ஸ்யூரன்ஸ் செலவும் இருப்பதையும் கணக்கிக் கொள்ள வேண்டும். மாதத் தவணை போடும்போதே, இந்த செலவுகளையும் சராசரி செய்து உங்கள் பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்வது அவசியம். மாத சம்பளத்தில் கார் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் விழிப்பாக கணக்கிட்டு வாங்குவது அவசியம்.

இது மட்டுமா, கார் வாங்கியவுடன் சும்மா நிறுத்தி வைக்க முடியாது. அங்கே இங்கே போகச் சொல்லும். மூன்று நாட்கள் லீவு கிடைத்தால் குடும்பத்துடன், ஏதாவது ஒரு சுற்றுலா செல்லத் தோன்றும். அதற்கான செலவீனங்களும் உங்கள் மனதில் வைப்பதும் அவசியம்.

உங்களது பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது கார் தயாரிப்பு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கேளுங்கள். மேலும், வெளியிலும் விசாரித்து பாருங்கள். டீலரைவிட வெளியில் கூடுதல் விலைக்கு கார் விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது.

எக்ஸ்சேஞ்ச் போனஸ், அது இது என்று ஆஃபர் கொடுத்தாலும் அவசரப்படாமல், இந்த விஷயத்தை கையாளுங்கள். ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கூடுதலாக கிடைத்தாலும் உங்களுக்கு லாபம்தான்.

அதேபோன்று, டீலரில் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது உங்களுக்கு புதிய கார் எவ்வளவு நாளில் டெலிவிரி தரப்படும் என்பதை பார்த்துக் கொண்டு பழைய காரை கொடுக்கவும். 15 நாட்களுக்கு மேல் என்றால், உங்களுக்கு கார் இல்லாமல் அவஸ்தை பட நேரிடலாம். எனவே, ஒரு வாரத்திற்குள் என்றால் பரவாயில்லை நீண்ட நாட்கள் என்றால் புதிய கார் வருவதற்கு சில நாட்கள் முன்பு கொடுப்பதாக கேட்டுப் பாருங்கள்.

கார் முன்பதிவு செய்வதற்கு முன்னதாக கார் மாடல், கார் வேரியண்ட், கார் கலர் உள்ளிட்ட பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்து பின்னரே முன்பதிவு செய்யவும். அவசரப்பட்டு முன்பதிவு செய்துவிட்டு பின்னர் கேன்சல் செய்தால் அதில் குறிப்பிட்டத்தொகையை கழித்துக் கொண்டு கொடுப்பர். சில டீலர்களில் முன்பணம் திரும்ப கிடைக்காது. மேலும், கார் மாடலையும் நன்கு முடிவு செய்து முன்பதிவு செய்யவும். பின்னால் வருத்தப்படாத வகையில், குடும்பத்தினர், நண்பர்களிடம் ஆலோசனை செய்யவும்.

கார் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் டெலிவிரி தராவிட்டாலும் பொறுமையை கடைபிடியுங்கள். சில நடைமுறை சிக்கல்களால் ஒரு வாரம் கூட தாமதமாகலாம். அதற்கு மேல் தாமதமானால் உரிய காரணத்தை உங்களது விற்பனை பிரதிநிதியிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். மேலும், கார் வந்துவிட்டால் கூட ஆக்சஸெரீகள் அனைத்தும் போட்டுவிட்டு டெலிவிரி பெறவும். அவசரப்பட வேண்டாம்.

விற்பனை பிரதிநிதி கூறும் ஆசை வார்த்தைகளை கேட்டு தேவையில்லாத கூடுதல் ஆக்சஸெரீகளை காரில் சேர்க்க வேண்டாம். காசுக்கும், காருக்கும் தெண்டம் ஆகிவிடக்கூடும். மேலும், சில ஆக்சஸெரீகள் வெளிச் சந்தையில் விலை குறைவாக இருக்கும்.

அதான் கார் வாங்கப் போகிறோமோ, சொந்த காரிலேயே கற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பை தவிருங்கள். கார் வாங்குவதற்கு முன்னர் ஓட்டுனர் பயிற்சி மையத்தில் சேர்ந்து குறைந்தது 10 மணி நேரமாவது ஓட்டுனர் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதன்மூலமாக, காரை இயக்குவது பற்றி ஓரளவு ஐடியா கிடைத்துவிடும். புதிய கார் வாங்கி எதிலும் முட்டி மோதாமல் இருக்கவும் உதவும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, November 21, 2016, 13:21 [IST]
English summary
Important things to know while buying a car.
Please Wait while comments are loading...

Latest Photos