டூர் செல்வதற்கு சொந்த கார் சிறந்ததா அல்லது வாடகை கார் சிறந்ததா?

Written By:

கோடை விடுமுறையில் டூர் செல்லும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும். இந்த நிலையில், சொந்த காரில் டூர் செல்வதற்கும், வாடகை காரில் டூ்ர செல்வதற்கும் இடையிலான சாதக, பாதகங்களை இந்த செய்தியில் காணலாம்.

சொந்த காரில் நீண்ட தூரம் பயணம் செய்ய ஆசைப்படுவது தவறில்லை. அதேநேரத்தில், வாடகை காரில் செல்வதும் அல்லது சுற்றுலா துவங்கும் இடத்தில் ஒரு வாடகை காரை அமர்த்திக் கொள்வதன் மூலமாக பல அனுகூலங்களை பெற முடியும்.

நீண்ட தூரம் கார் ஓட்டும்போது குடும்பத் தலைவர் அல்லது ஓட்டுபவருக்கு அதிக மன அழுத்தமும் உடல் சோர்வும் ஏற்படும். வாடகை காரில் பயணிக்கும்போது நிச்சயம் இதனை தவிர்க்க முடியும். சுற்றுலா செல்லும் இடத்தையும் சோர்வில்லாமல் பார்த்துவிட்டு வர முடியும்.

குடும்பத் தலைவர் கார் ஓட்டி அசந்து போய்விட்டால், குடும்பத்தில் உள்ள பிறருக்கும் அந்த உற்சாகம் குறைந்துவிடும். இதனை தவிர்ப்பதற்கு வாடகை காரில் செல்வது சிறந்த உபாயமாக இருக்கும். இரவு நேரத்தில் அல்லது அதிகாலையில் பயணத்தை துவங்கினாலும், வாடகை கார் ஓட்டுனர் ஆங்காங்கே ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால், நீங்களே கார் ஓட்டிச் செல்லும்போது இரவு நேரத்தில் பயணத்தை துவங்க முடியாது. அப்படியே ஓட்டினாலும், மறுநாள் சுற்றுலா செல்லும் இடங்களில் ஓய்வு கிடைக்காத நிலை ஏற்படும். இது கார் ஓட்டும்போது அயற்சியை உண்டாக்கி விபத்து உள்ளிட்ட தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்கும்.

புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள வாடகை காரை பயன்படுத்துவது சிறந்தது. உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து ஊட்டி செல்பவர்கள் கோவை அல்லது மேட்டுப்பாளையம் வரை சொந்த காரில் சென்று விட்டு அங்கு ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்து மறுநாள் வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா செல்லலாம்.

உங்களது காரை ஓட்டலில் நிறுத்திவிட்டு, அங்கு வாடகை காரில் பயணத்தை துவங்கலாம். அந்த பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். மேலும், சுற்றுலா தலங்கள் திறந்திருக்கும் நேரம், சாலை நிலவரம் போன்றவையும் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

இதனால், விரைவாக சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு வருவதற்கு வழிகோலும். மற்றொரு பிரச்னை, விடுமுறை காலங்களில் கூட்டம் அதிகமிருக்கும் என்பதால், காரை பார்க்கிங் செய்வதற்கே தேவையில்லாமல் நேரத்தை செலவழிக்க வேண்டி இருக்கும்.

மலைச் சாலைகளில் புதிதாக கார் ஓட்டுபவர்கள் குடும்பத்துடன் செல்லும்போது பதட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, அடிவாரத்தில் உள்ள பார்க்கிங் பகுதி அல்லது ஓட்டல்களில் காரை நிறுத்திவிட்டு வாடகை கார் எடுத்துச் செல்வது பல விதங்களில் அனுகூலத்தை தரும்.

கார் ஓட்டும்போது ஏற்படும் மன அழுத்தம் குறையும். வெளியூர் செல்லும்போது இரவு நேரத்தில் கூட ஓட்டுனர்களால் கார் அல்லதை வேனை சிறப்பாக செலுத்த முடியும். அவர்கள் பகலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அடிக்கடி குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் டாக்சி ஓட்டுனர்களுக்கு வழித்தடம் குறித்த போதிய தகவல்கள் முன்னரே தெரிந்திருக்கும். இதனால், சரியான நேரத்தில் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துவிட்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவ்வளவு முதலீடு செய்து சொந்த கார் வாங்கிவிட்டு வாடகை காரில் செல்வதா என்ற எண்ணம் தோன்றலாம். அதுபோன்றவர்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கு வாடகை காரை அமர்த்திக் கொள்ளலாம் என்பதே எமது கருத்து.

 

மற்றொரு விஷயம், நண்பர் அல்லது நெருங்கிய உறவினர் குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டு டெம்போ டிராவலர் அல்லது டொயோட்டா இன்னோவா போன்ற கார்களை எடுத்துச் செல்லும்போது இட நெருக்கடியையும் தவிர்க்க முடியும். குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு செல்வதையும் தவிர்க்கலாம்.

புது இடங்களுக்கு தனியாக செல்வதைவிட நண்பர் குடும்பத்தினர் அல்லது உறவினர்களுடன் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பும் உண்டு என்பதையும் மனதில் வையுங்கள்.

கூட்டிக் கழித்து பார்த்தால், வாடகை கார்களில் கட்டணம் சற்று அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. சொந்த கார் வைத்திருக்கும்போது எதற்கு வீண் செலவு என்று நினைக்க வேண்டாம். இதன் மூலமாக பல அனுகூலங்களை பெற முடியும் என்பதை மனதில் வைத்து உங்களது சுற்றுலாவை திட்டமிட்டுக் கொள்வது சிறப்பு.

English summary
Own Car Vs Taxi... Which is Best For Tour?.
Please Wait while comments are loading...

Latest Photos