அடுத்த 2 மாதத்துக்கு விற்று தீர்ந்த எஸ்யூவி கார்கள்

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 10:20 [IST]
Toyota New Fortuner
அடுத்த 2 மாதத்துக்கான அனைத்து நிறுவனங்களின் எஸ்யூவி கார்களும் விற்று தீர்ந்து விட்டது. மேலும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 பார்ச்சூனர் எஸ்யூவிக்கள் புக்கிங் செய்யப்படுவதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் கார் விற்பனை சரியும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்)தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி உயர்வு ஆகியவை தவிர்த்து ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால், அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்பதால் கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் எகிடுதகிடாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரூ.12 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலை வரையிலான பிரமியம் ரக எஸ்யூவிக்களுக்குத்தான் மார்க்கெட் பிய்த்துக்கொண்டு போகிறது.

கடந்த ஆண்டு முதல் பிரிமியம் எஸ்யூவிக்களுக்கான புக்கிங்கும், விற்பனையும் மலைக்க வைக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அடுத்த 2 மாதங்களுக்கான பிரிமியம் எஸ்யூவிக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டொயோட்டோ மார்க்கெட்டிங் பிரிவு துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்,"அடுத்த 4 மாதங்களுக்கான பார்ச்சூனர் எஸ்யூவி அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 50 பார்ச்சூனர் எஸ்யூவிக்கள் புக்கிங் செய்யப்பட்டன. ஆனால், தற்போது நாடு முழுவதும் உள்ள எங்களது ஷோரூம்களில் ஒரு நாளுக்கு 100 பார்ச்சூனர் எஸ்யூவிக்கள் புக்கிங் செய்யப்படுகின்றன.

இதையடுத்து, பார்ச்சூனர் எஸ்யூவியின் உற்பத்தியை மாதத்திற்கு 1,000 ஆக உயர்த்தியுள்ளோம்," என்றார்.

இதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவிக்கும் மார்க்கெட்டில் ஏக டிமாண்ட் நிலவுகிறது. சமீபத்தில் நடந்த இரண்டாம் கட்ட புக்கிங்கில் 25,000 எக்ஸ்யூவி 500க்கு புக்கிங் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

இதேபோன்று, அடுத்த 2 மாதங்களுக்கான பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரிமியம் எஸ்யூவி்க்களும் புக்கிங் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


English summary
Despite car sales slow down, Country's suv market is zoom now. The premium Carmakers such as Mahindra, Toyota, BMW and Audi say their sports utility vehicles, are completely sold out for the next 2 months.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !